முன்னாள் போராளிகளின் திடீர் மரணம் மெல்லக் கொல்லும் சதியொன்றின் விழைவா?
யதீந்திரா
முன்னாள் போராளிகள் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் அiமைப்பின் உறுப்பினர்கள் சிலர் நோய்களின் காரணமாக தொடர்ச்சியாக மரணமடைந்து வருகின்றனர். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் நாடாளுமன்ற உரையின்படி இதுவரையில் 108 போராளிகள் இவ்வாறு உயிரழந்திருக்கின்றனர்.
இவர்களில் அனேகர் புற்றுநோயின் காரணமாகவும் சிலர் கண்டுபிடிக்க முடியாத நோயின் காரணமாகவும் உயிரிழந்திருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறானதொரு சூழலிலேயே சிவசக்தி ஆனந்தன் மேற்படி விடயத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் சுயாதீன விசாரணையொன்று அவசியம் என்பதை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையிலும் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
புனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி அல்லது உணவில் இராசாயண பதார்த்தங்கள் கலக்கப்பட்டனவா என்பதை கண்டறிவதற்கு வெளிநாட்டு மருத்துவர்களின் கீழ், விசாரணை அவசியமென்று மேற்படி தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவநிலையில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளியான தகவல்களின்படி 11600 வரையான விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். இதில் சரணடைந்து காணாமால் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேறானது.
காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தவிர்ந்த அனைவரும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டாய புனர்வாழ்வளிப்பிற்கு உள்ளானவர்கள். புனர்வாழ்வளிப்பிற்கு பின்னர் இவர்கள் பொது மனிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுலையானவர்களிலிருந்தே தற்போது சிலர் திடீர் மரணத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். இவர்களில், விடுதலைப் புலிகள் மகளீர் அணியின் தலைவியாக செயற்பட்ட தமிழினி ஒருவரே நன்கு அறியப்பட்டவர். அவரும் கடந்த ஆண்டு புற்றுநோயின் காரணமாகவே மரணமடைந்திருந்தார்.
ஒரு சிலர் மரணமடைந்தால் அதனை இயற்கையென கூறலாம் ஆனால் இவ்வாறு தொடர்ச்சியாக முன்னாள் போராளிகள் மரணமடைவதை எவ்வாறு சந்தேகிக்காமல் இருக்க முடியும்? இந்த கேள்வியின் அடிப்படையிலேயே தற்போது இந்;த விவகாரம் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களை பொறுத்தவரையில் எந்தவொரு விடயமும் முதலில் அரசியல் ஆக்கப்பட வேண்டியிருக்கிறது.
அதன் பின்னர்தான் அது தொடர்பில் அனைவரும் கரிசனை கொள்கின்றனர். இது ஒரு வகையில் ஆரோக்கியமானதல்ல ஆனால் இதனைவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் அரசியலாக்கின்றார்களே என்று சத்தம்போடுபவர்களிடமும் வொல்லுவதற்கு எதுமில்லை.
இந்த பின்புலத்தில்தான் வடக்கு மாகாண சபையில் மேற்படி விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணை கோரப்பட்டுள்ளது. கூட்டமைப்பும், கூட்டமைப்பின் அரசியலுடன் முரண்பட்டு நிற்பவர்களும் இந்த விடயத்தை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்லப் போகின்றனர்?
உண்மையில் இதனை எப்படி அனுகுவது? இது ஒரு சந்தேகம் மட்டுமே எனவே சந்தேகங்களையும் ஊகங்களையும் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல முடியுமா? முதலில் எந்தவொரு விடயம் தொடர்பிலும் தமிழ் பரப்பிற்குள் வீட்டு வேலைகள் (ர்ழஅந றழசமள) செய்யப்பட வேண்டும். முன்தயாரிப்புகளற்ற எந்;தவொரு முயற்சியும் பயனை தரப்போவதில்லை.
இதன் காரணமாகவே எங்கள் தரப்பின் அனேக முயற்சிகள் வெறும் அரசியல் கோசங்களாக மட்டுமே சுருங்கிவிடுகின்றன. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. மேற்படி விடயத்திற்கும் அவ்வாறு நேர்ந்துவிடக் கூடாது.
உண்மையிலேயே இந்த விடயத்தில் ஒரு நியாயமான சந்தேகம் இருப்பின் முதலில் அது தொடர்பில் வீட்டு வேலை செய்யப்பட வேண்டும்.
சிவசக்தி ஆனந்தன் கூறுவது போன்று 108 முன்னாள் போராளிகளின் பின்னணி விபரங்களை முதலில் திரட்ட வேண்டும். அவர்கள் புனர்வாழ்வில் இருந்த போது அவர்களுக்கான பொறுப்பதிகாரியாக இருந்தவர்கள் யார்? வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தில் கூறப்பட்டது போன்று அவர்கள் அனைவருக்கும் ஊசிமருந்து ஏற்றப்பட்டிருப்பின் அது இராணுவ வைத்தியரின் முன்னிலையில் நிகழ்ந்ததா அல்லது அரசாங்க வைத்தியரின் கீழா? புனர்வாழ்வின் போது போராளிகளின் மருத்துவ விடயங்கள் பிரத்தியேக பிரிவொன்றால் முன்னெடுக்கப்பட்டதா அல்லது குறிப்பிட்ட முகாமிற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றதா? இவ்வாறு இறந்தவர்களோடு சேர்ந்து புனர்வாழ்வு பெற்ற ஏனைய போராளிகளின் தற்போது எவரேனும் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றனரா? அவ்வாறிருக்கின்றனர் எனின் அவர்களின் வாக்கு மூலங்கள் பதிவுசெய்யப்பட வேண்டும் ஏனெனில் அதாவது ஊகங்கள் சரியெனின் அவர்களும் நாளை இறக்கலாம். இதுவரை இறந்தவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது அவர்கள் வகித்த பொறுப்பென்ன? அவர்கள் எவரேனும் இறுதி யுத்தம் தொடர்பான தகவல்களை தெரிந்தவர்களா? அவ்வாறாயின் எப்படியான தகவல்கள்?
இறுதி யுத்தத்தின் போது இரசாயண குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
அப்படியான தாக்கங்களின் விழைவாக இவர்கள் இறந்திருக்கலாமா? 2009இற்கு பின்னர் இவ்வாறு போராளிகளைப் போன்று எத்தனை பொதுமக்கள் இறந்;திருக்கின்றனர்? முதலில் இவ்வாறான தகவல் திரட்டொன்று அவசியம். இதற்கென ஒரு குழு அவசியம்.
புத்திஜீவிகள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து மேற்படி விடயங்கள் ஆராயப்பட வேண்டும். அவ்வாறில்லாது எடுத்தவுடனேயே வெளிநாட்டு மருத்துவர்களின் கீழ் இதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வாதிடும் போது, அது எங்களின் வாதத்திற்கு வலுச்சேர்க்காது.
இப்போதிருக்கின்ற வசிதிகளின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் இரத்த மாதிரியை சோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு அனுப்புவதும் இயலாத காரியமல்ல. முதலில் ஒரு விடயத்தை ஆணித்தரமாக வாதிடுவதற்கான உள்ளாற்றலை ஒருங்கிணைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தையும் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரிலும் ஒலிக்க முடியும் ஆனால் அங்கும் வெறும் அரசியல் கோசமாக இந்த விடயம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அது சபையில் எடுபடப் போவதில்லை. சர்வதேச அரங்குகளில் எங்களுடைய அரசியல் வாதிகளின் உரைகள் பெருமளவு எடுபடுவதில்லை. எனவே சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்கள் அல்லது குழுக்கள் மத்தியில் எங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும்.
அவர்களுக்கு நாங்கள் கூறுவதில் நம்பிக்கை ஏற்படுமளவிற்கு வாதங்களை முன்வைக்க வேண்டும். உதாரணமாக இறுதி யுத்தத்தின் போது கொத்துக் குண்டுகள் பயன்படுத்தியாக அரசியல் தரப்பால் வாதிடப்பட்டது ஆனாலும் அது உலகின் காதில் விழவில்லை.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் வடக்கில் கன்னிவெடியகற்றும் அமைப்பொன்றின் தகவலின் அடிப்படையில் சர்வதேச ஊடமொன்று கொத்துக் குண்டின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படமையை உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே அது தொடர்பில் சர்வதேச கவனம் அதிகரித்தது. மக்கள் மிகவும் நெருக்கமாக முடக்கப்பட்டிருந்த வன்னியின் போர் நிலப்பகுதிக்குள் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தவல்ல, கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்படுமானால் அது எவ்வாறான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியிருக்கும். எனவே பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்ததை எவ்வாறு அரசாங்கம் மறுக்க முடியும்?
எனவே இந்த இடத்தில்தான் நான் மேலே குறிப்பிட்டவாறான வீட்டுவேலைகள் இடம்பெற வேண்டும் என்னும் வாதம் வலுப்பெறுகிறது. எங்களிடம் வாதங்களும் நிலைப்பாடுகளும் இருக்கின்ற அளவிற்கு அதனை நிறுவுவதற்கான செயல்கள் இல்லை. அதில் பெரிய ஓட்டை காணப்படுகிறது.
வெறுமனே நாடாளுமன்றத்தில் பேசிவிடுவதோடோ அல்லது மாகாண சபையில் பிரேரணை கொண்டுவந்துவிடுவதாலோ மட்டும் இவ்வாறான விடயங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது. இது ஒரு நீண்ட பயணம். இதற்கான வேலைத்திட்டமும் அதற்கான கூட்டுழைப்பும் தேவை.
பொதுவாக போரில் வென்றால் அந்த வெற்றி அனைவருக்கும் உரிய ஒன்றாகவே கொண்டாடப்படும். ஆனால் அதே யுத்தத்தில் தோற்றுப்;போனால் போரில் நேரடியாக பங்குகொண்டவர்களும், அந்த போர் வலையத்திற்குள் வேறுவழியின்றி அகப்பட்டுப்போனவர்களுமே தோல்வியால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர்.
சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் வாழ்வும் இப்படியான ஒன்றே! அவர்கள் தற்போது தோல்வியை அனுபவிக்கின்றனர். தோல்வியை அனுபவித்தல் என்பது மிகவும் கொடுமையானது. போரில் ஒரு காலையிழந்த பின்னரும் வெற்றி தனது அணிக்கே என்னும் போது, ஒரு கால் என்பது இழப்பல்ல ஏனெனில் தனக்கு அந்தக் காலாகவும் தன்னுடைய அமைப்பு இருக்கும் என்னும் நம்பிக்கையே அந்த போராளியை இயக்கும் ஆனால் அதுவே தோல்வி என்னும் போது அவன் ஒரு சமூகச் சுமையாகவே கருதப்படுவான்.
தற்போது சரணடைந்து விடுதலைப் புலி உறுப்பினர்களின் நிலைமையும் அத்தகைய ஒன்றே! தேர்தல் காலத்தில் மேடைக்கு மேடை பிரபாகரனை உயிர்ப்பிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இவ்வாறான போராளிகள் தொடர்பில் உண்மையான அக்கறை கொண்டிருக்கின்றனரா? அது உண்மையெனின் அவர்கள் ஆக்கபூர்வமாக யோசிக்கலாம்! ஆக்கபூர்வமான முயற்சிக்கான சில குறிப்புக்களையே இப்பத்தி முன்னிறுத்தியிருக்கிறது.
n10




