முன்னாள் போராளிகளின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியோரின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 38 பேர் தற்போது புனர்வாழ்வு பெற்று வரும் நிலையில் அவர்களை சமூகத்துடன் ஒன்றிணைப்பதற்காக பல்வேறு பயிற்சிகளையும், செயற்திட்டங்களையும் புனர்வாழ்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக அவர்களுக்கான விளையாட்டு போட்டி நிகழ்வுகள் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்றது.
முட்டி உடைத்தல், பணிஸ் சாப்பிடுதல், களுகு மரம் ஏறுதல், யானைக்கு கண் வைத்தல், மர்ம மனிதரை கண்டு பிடித்தல், மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகள் இதன் போது இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் ஆர்.எம்.ஜே. ரத்னாயக்கா, புனர்வாழ்வு திணைக்கள இராணுவ அதிகாரிகள், பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
N5







