முன்னாள் போராளிகள் மரணமடையும் சம்பவம்;தகவல்களை திரட்டுமாறு சி.வி. கோரிக்கை
அண்மைக்காலமாக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் திடீர் மரணமடையும் சம்பவம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர்கள் அவரவர்களுடைய பகுதிகளில் தகவல்களை திரட்டுமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மாகாணசபையின் 58ஆம் அமர்வு நடைபெற்றபோதே மேற்படி கோரிக்கையினை முதலமைச்சர் விடுத்துள்ளார்.
இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம், முன்னாள் போராளிகள் சிலர், தங்கள் மீது திட்டமிட்டு நச்சு ஊசிகள் போடப்பட்டமை தொடர்பாகவும், உணவில் இரசாயன பதார்த்தங்கள் கலந்து வழங்கப்பட்டமை தொடர்பாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்கள் உண்மை என கண்டறியப்பட்டால் இலங்கை அரசின் முகத்திரை சர்வதேசத்தின் முன்னாலும், உலகளாவிய தமிழ் சமூகத்தின் முன்னாலும் கிழிக்கப்படும். மேற்படி செயலணி முன்பாக சாட்சியமளித்த அனைவரது கருத்துக்களும் அரசாங்கத்தின் நம்பிக்கையீனத்தையே காட்டுகின்றது.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைஉறுப்பினர்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. முன்னாள் போராளிகளுக்குஇழைக்கப்பட்ட இன அழிப்பு திட்டம் தொடர்பாக அம்பலப்படுத்த உங்களின் உதவி நாடப்படுகிறது.
புனர்வாழ்வின் பின் நோய் வாய்ப்பாட்டு இறந்த மற்றும் நோய்வாய்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் தகவல்களை திரட்டுவதற்கு மாகாணசபை உறுப்பினர்கள் உதவவேண்டும் எனவும் சீ.வி.விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டார்.
n10




