முன்னாள் போராளிகள், காணாமல் போனோர் தொடர்பில் நீதியான விசாரணையை வலியுறுத்தி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
பிரித்தானியாவில் காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் மற்றும் முன்னாள் போராளிகள் உயிரிழப்பு குறித்து பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (28.08) மேற்கொள்ளப்பட்டது.
10 Downing Street, London, SW1A2AA என்னும் இடத்தில் மதியம் 12 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இப்போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 105க்கு மேற்பட்ட சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் குறித்து நம்பகத் தன்மையுடன் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் காணாமல் போனோர் பற்றிய ஆரோக்கியமான நம்பகத்தன்மையுடைய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், கைதுகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், நிலஅபகரிப்பு, தமிழ் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படல் ஆகியவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
காணாமல் போனோர் தினத்தில் இதனை உலகிற்கு உரத்து கூறும் வகையிலும், பிரித்தானிய இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஈழ ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.








