செய்திகள்

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முறைப்பாடு!

குருந்தூர் விகாரை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா பக்கச்சார்பாக நடந்துகொள்வதாக தெரிவித்து விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரன தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

குருந்தூர் விவாகரத்தில் நீதவான் பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகவும், இதனால் நீதித்துறையின் சுயாதீனத்துவம் பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ள அவர்கள், குறித்த வழக்கு விசாரணையை வேறு நீதவானின் கீழ் நடத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஊடகங்களுக்கு கூறுகையில்,

முல்லைத்தீவு நீதவான் சரவணராஜா தொடர்பில் முறைப்பாட்டை மேற்கொள்வதற்காகவே நாங்கள் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு வந்துள்ளோம். முல்லைதீவு குருந்தூர் விகாரை தொடர்பாக முல்லைதீவு நீதவான் நீதிமன்றத்தில் காணப்படும் வழக்கு விடயத்தில் நீதவான் சரவணராஜா பக்கச்சார்பாகவும், தான்தோன்றித்தனமாகவும் நடந்துகொண்டுள்ளார். அது மதவாதம், இனவாதவாதம் மற்றும் பிரிவினைவாத மோதல்களுக்கு கொண்டு செல்கின்றது.

குருந்தூர் விகாரை வடக்கில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக தொல்பொருள் ஆதரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. அது ரஜமகா விகாரையாகவும் பௌத்த திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழ் மதவாத, இனவாத மற்றும் பிரிவினைவாத குழுக்கள்  இந்து கோயில் என்று மாற்றுவதற்கு முயற்சிகின்றனர். இது தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் உள்ளது. இந்த வழக்கில் குறித்த நீதவானின் நடவடிக்கைகளால் அது மதவாதம், இனவாதம், பிரிவினைவாத மோதல்களுக்கு கொண்டு செல்வதை போன்றே உள்ளது.
அங்கு மறுசீரமைக்கப்படும் தூபியை நீக்குமாறு அவர் கூறியுள்ளதுடன், அண்மையில் அந்தப் பகுதியில் பொங்கல் நிகழ்வை நடத்த தடையுத்தரவை கோரி பொலிஸார் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போதும் அதற்கு தடையுத்தரவு வழங்கப்படவில்லை.

இதன்படி நீதவான் பக்கச்சார்பாகவே செயற்படுகின்றார். தொல்பொருள் திணைக்களத்தின் அறிவிப்புகளை கண்டுகொள்வதில்லை. அத்துடன் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தமிழ் மொழியிலேயே நடக்கின்றது. தொல்பொருள் சாட்சியங்கள் ஆராயப்படுவதில்லை. இது தொடர்பான வழக்கில் சிங்களம், ஆங்கில மொழி மூல மொழி பெயர்ப்பை கோரினாலும் அதுவும் நடப்பதில்லை.

இதன்மூலம் நீதிமன்றத்தின் கௌரவம், மக்களின் நம்பிக்கை இல்லாமல் போகின்றது.
இந்த நிலைமையிலேயே நாங்கள் நீதிமன்ற கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, சுயாதீனத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும், மற்றும் குருந்தூர் விவாகரம் தொடர்பான வழக்கு விசாரணையை வேறு நீதவானின் கீழ் நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறும் நாங்கள் நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

-(3)