முல்லை நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரிக்கை
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சுமார் பத்தாயிரம் வரையான மக்களின் மருத்துவ தேவையைப்பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கான நிரந்தர வைத்தியர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் இதற்கான நிரந்தர வைத்தியர்கள் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்பகுதி மக்கள் மீள்குடியேறிய நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு கடந்த ஆண்டு இறுதிவரை வைத்தியர்கள் எவரும் இல்லாத நிலையில் காணப்பட்டதுடன் ஏனைய பணியாளர்கள் 31 பேர் வரையில் கடமையாற்றி வந்தனர்.
இதனால் இந்த வைத்தியசாலையை நம்பி வாழ்ந்து வரும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தமக்கான மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் வைத்தியர் ஒருவரை தற்காலிகமாக நியமித்துள்ள நிலையில் குறித்த வைத்தியர் போக்குவரத்து வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இன்மையால் குறித்த வைத்தியர் தொடர்ந்து 24 மணி நேரமும் சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இடையிடையே மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது.
எனவே குறித்த வைத்தியசாலைக்கான நிரந்தர வைத்தியர் ஒருவரையும் நியமிக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




