செய்திகள்

முள்ளியவாய்கால் நினைவேந்தலில் பங்கேற்க கூட்டமைப்பின் தலைமைக்கு தயக்கமா…?

-நரேன்-

உரிமைக்காக போராடிய தமிழினத்தின் போராட்டம் அகிம்சை, ஆயுதம் என மாற்றமடைந்து முப்படைக் கட்டமைப்புக்களுடன் பரிணமித்து இருந்த நிலையில் 2009 மே 18 ஆம் திகதி முள்ளியவாய்க்கால் பேரவலத்துடன் அஸ்தமித்தது. அங்கு போரில் ஈடுபட்டவர்கள் மட்டும் கொல்லப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களும் தான் கொல்லப்பட்டார்கள். அதன் அவலத்தை சுமந்த வண்ணம் இன்றும் பலர் தமது உடல்உறுப்புக்களை இழந்தும் உறவுகளைப் பறிகொடுத்தும் எம் கண்முன்னே வலம் வந்தும் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலேயே முள்ளியவாய்கால் பேரவலத்தின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் வருகிறது. முள்ளியவாய்கால் என்பது ஒரு வரலாற்றுப் பதிவு. கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட ஒரு புதைகுழி மண். அந்த மண்ணில் எமது உறவுகள் புதைக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர்களின் துயரங்களை கூறி வாக்கு வேட்டைகளும் அரங்கேறின. ஆனால் அந்த மக்களின் ஆத்மாவுக்கான விடுதலை தான் இது வரை இல்லை. அந்த மக்களை காப்பாற்ற முடியாதவர்கள் அந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய என்றாலும் உழைக்கிறார்களா என்ற சந்தேகம் இன்று எல்லோர் மனத்திலும் எழுகிறது.

அஞ்சலி செலுத்துவதும், பூக்கள் தூவுவதும் மட்டும் அவர்களுக்கான பிரார்த்தனை அல்ல. அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான உரிமைக்காகவும், ஒரு தீர்வுக்காகவும் உயிரை மாய்த்தவர்கள். ஒரு நியாயமான தீர்வு கிடைக்கின்ற போது தான் அந்த ஆத்மாக்கள் உறங்கப் போகிறது. அது வரை அந்த ஆத்மாக்களின் அவலம் தொடரவே செய்கிறது. முள்ளியவாய்கால் பேரவலத்தின் ஆத்மாக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் தமிழர் தரப்பு தொடர்ந்தும் இருக்கிறது. போர் முடிந்து விட்டது அதனால் அந்த அழுத்தம் இல்லை என எவரும் மறுத்து விட முடியாது. தற்போது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் வேறு வடிவம் பெற்றுள்ளது என்றே கருத இடமுண்டு. தற்போதைய நிலையில் தமிழர் தரப்பின் பலம் மிக்க அமைப்பாகவும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகவும் கூட்டமைப்பே உள்ளது.

ஆயுத ரீதியாக தமிழ் மக்களின் போராட்டம் அடக்கப்பட்ட பின்னர் மக்கள் கூட்டமைப்பையே நம்பி வருகின்றனர். அதற்கே விடுதலைப் புலிகள் உருவாக்கிய காலத்தில் இருந்து வாக்களித்தும் வருகிறார்கள். அதனால் தமிழ் மக்கள் தரப்பாக கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேச வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் தற்போதைய சூழலில் கூட்டமைப்பின் பேரம் பேசும் ஆற்றல் குறைவடைந்து செல்வதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் தமிழ் அரசியல் கைதிகள் விடயம், காணாமல் போனோர் விவகாரம், பொருத்து வீட்டு பிரச்சனை என மத்திய அரசாங்கத்திடம் இருந்து கூட்டமைப்பு எதையும் சாதிக்க முடியாத நிலையிலேயே தற்போது உள்ளது. முன்னைய காலத்தை விட கூட்டமைப்பு பாராளுமன்றத்திற்குள் உயர் பதவிகளைக் கொண்டிருக்கின்ற போதும் கூட அதை வைத்து எதையும் சாதிக்க முடியாத அமைப்பாகவே அது இருந்து வருகிறது. இதற்கு காரணமும் உண்டு. கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட போதும், பதவிகளுடன் கூடிய இணக்க அரசியலுக்குள் கூட்டமைப்பு நிற்கின்றது. அதனால் அரசுக்கு எதிராக இருந்த சர்வதே அழுத்தங்கள் குறைவடையத் தொடங்கியுள்ளன. பதவிகளின் பெயர்களால் கடும் அழுத்தத்தை பிரயோகிக்கவும் முற்படவில்லை.

இவ்வாறான ஒரு சூழலிலேயே புதிய அரசியலமைப்பு, தீர்வுத் திட்டம் என அரசாங்கம் சர்வதேச அழுத்தம் காரணமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபை ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்து அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது. அந்த தீர்வுத் திட்டத்திற்கு தென்னிலங்கையில் இனவாதிகளிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தென்னிலங்கை இனவாத சக்திகளின் எதிர்ப்பு என்பது தமிழர் தரப்புக்கு புதிதல்ல. இதையே அவர்கள் காலம் காலமாக செய்தும் வருகிறார்கள். அதை காரணம் காட்டி அரசாங்கம் நியாயமான தீர்வை வழங்காது தப்புவதற்கான வாய்ப்புக்கள் கூட அங்கு உள்ளது. இந்த விடயத்தில் தமிழர் தரப்பு உசாராகவே இருக்க வேண்டும். அடுத்து முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையும் வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தமிழர் தேசம் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அங்கீரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சமஸ்டி நோக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. தற்போது அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகளிடமும் அதன் தீர்வுத் திட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழர் தரப்பின் பிரதான சக்தியாக கருத்தப்படும் கூட்டமைப்பின் தீர்வுத் திட்டம் என்ன….? அதற்கான நடவடிக்கைகள் நடக்கின்றதா என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் எழுகின்றது. ஏன்னெனில் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் 2016 ஆம் ஆண்டுக்குள் நிலையான தீர்வு கிடைக்கும் என கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய அரசாங்கத்தின் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் வெளிப்படையாக கூறியிருந்தமையை யாரும் மறுத்து விடவும் முடியாது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கூட்டமைப்பிடம் இருக்கின்றது. வடக்கு மாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பவற்றின் தீர்வுத் திட்டத்தை அரசாங்கத்திற்கு காட்டி நியாயபூர்வமான ஒரு தீர்வை முன்வைக்க வேண்டிய கடமைப்பாடும் கூட்டமைப்பிடம் இருக்கின்றது. அதனை அவர்கள் மறுத்துவிடவும் முடியாது. ஆனால் கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சித் தலைவர்களுக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ தமது கட்சி என்ன தீர்வுத் திட்டத்தை முன்வைக் போகின்றது என்பது இது வரை புரியாத புதிராகவே உள்ளது. வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு தான் வரும், சமஸ்டி கோருவது பிழையல்ல என கூட்மைப்பின் தலைமைகள் அவ்வப்போது ஊடகங்களில் மௌனம் கலைக்கின்ற போதும் ஒரு உறுதியான தீர்வு இது தான் என முன்வைக்கப்படவில்லை. அதற்கான ஆயத்தம் கூட கட்சி உறுப்பினர்களுடன் பேசி எடுக்கப்படவுமில்லை.

இப்படியான அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியிலேயே முள்ளியவாய்க்கால் நினைவேந்தலின் 7 ஆவது ஆண்டினை வடமாகாண சபை முள்ளியவாய்காலிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி இரு வேறு இடங்களிலும், சிவில் அமைப்புக்கள் பல பகுதிகளிலும் நடத்த தீர்மானித்துள்ளன. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த அந்த பகுதியில் நடக்கும் நினைவேந்தல்களில் கடந்த காலங்களைப் போன்று பங்குபற்றுவர். கொத்து கொத்தாக படுகொலையான தமிழ் மக்களுக்கு அந்த நாளில் நினைவஞ்சலி செய்ய வேண்டியது அனைவரதும் பொறுப்பும் கூட. ஆனால் கூட்டமைப்பின் தலைவர் கடந்த காலங்களைப் போன்று இவ்வாண்டும் முள்ளியவாய்கால் நினைவேந்தலை புறக்கணிப்பாரா..? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அரசாங்கத்தின் சுதந்திர தின நிகழ்வில் பங்கு கொண்ட கூட்டமைப்பு தலைவர் முள்ளியவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது தவிர்த்து வந்திருகின்றார். கடந்த காலத்தில் கூட்டமைப்பினரால் பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது கூட அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர்த்திருந்தமையை ஒரு புறம் வைத்தால் கூட ஆயிரக்கணக்காக கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர்தமையை சரியென கூறமுடியாது. ஏனெனில் கூட்டமைப்பின் தலைவர் என்ற பதவியும்இ எதிர்கட்சி தலைவர் என்ற நிலையும் முள்ளியவாய்க்காலில் மரணித்த அந்த மக்களின் ஆத்மாவால் தான் கிடைத்தது. இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறிய அவர் இவ்வாண்டு முள்ளியவாய்கால் பேரவல மண்ணில் இறந்த ஆத்மாக்கள் மேல் சத்தியம் செய்து அந்த ஆத்மாக்களின் எதிர்பார்ப்புக்களை தீர்க்க ஒரு நிலையான தீர்வை நோக்கி நகரவேண்டும் என எல்லோர் மனங்களிலும் ஒரு ஆதங்கம் இருக்கவே செய்கிறது. அடுத்த ஆண்டு 8 வது நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னர் தமிழ் மக்கள் நிலையான ஒரு அரசியல் தீர்வைப் பெற்று சுதந்திரமாக தமது உறவுகளின் ஆத்ம பிரார்த்தனைக்கு உதவ தமிழர் தரப்பு இறந்த ஆத்மாக்கள் மேல் சத்தியம் செய்ய வேண்டும்.

N5