முள்ளியவாய்கால் நினைவேந்தல்: உண்மையில் நடந்தது என்ன..?
நேரடி ரிப்போட்
கே.வாசு
மே 18 என்பது தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் பயணத்தில் என்றும் அழித்து விட முடியாத ஒரு துயரநாள். மனிதநேயத்தையும், மனிதாபிமானத்தையும் நேசிக்கின்ற எந்தவொரு மனிதராலும் இலகுவில் மறந்து விட முடியாத நாள். சர்வதேசத்தின் மனச்சாட்சிகளை தட்டியெழுப்பிய ஒரு சோகநாள். அந்த துயரத்தின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்று முடிந்திருக்கின்றன. முன்னைய மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல்கள், போர்குற்றம் என்பவற்கு சாட்சியமாக முள்ளியவாய்கால் மண்ணே உள்ளது. தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக அடைக்கலம் தேடி வந்த அப்பாவிப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்ட ஒரு இடம். பால்குடி சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை சிந்திய குருதியால் தோய்ந்த மண் அது. அந்த முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த 18 ஆம் திகதி தமிழர் தாயகப் பிரதேசத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் பிரதான நினைவுத் திடலில் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் மூன்றாவது வருடமாக அஞ்சலி நிகழ்வுகள் கடந்த 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கடந்த காலத்தை விட இம்முறை அஞ்சலி நிகழ்வில் கலந்த கொண்டோர் தொகை அதிகமாகவே இருந்தது. கடந்த கால முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொண்டிராத தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர். அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே அங்கு வந்த மக்கள் தாம் இறுதி யுத்தில் பதுங்கியிருந்த இடங்களையும், தமது உறவுகளை இழந்த இடங்களையும் தேடி அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுது தமது துயரத்தை வெளிப்படுத்தக் தொடங்கி விட்டனர். இதனால் அந்தப் பகுதி ஒரு சோகம் நிறைந்த புனிதமான பகுதியாகவே காட்சியளித்தது.
சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கப்பட்டிருந்த அந்த நினைவுத் திடலில் சரியாக 9.30 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்தன. அதன்படி வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அங்கிருந்த ஒலிவாங்கியை கையில் எடுத்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்தார். முதல் நிகழ்வாக இறந்த உறவுகளுக்காக மூன்று நிமிடம் அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து அஞ்சலி உரை ஆற்றுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களை அழைத்தார். பிரதான சுடர் ஏற்றும் நினைவுத் திடலுக்கு முன்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனராதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிவமோகன், மும்மதத் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிறிதரன், சரவணபவன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் அங்கு நின்றிருந்தனர். முதலமைச்சர் அஞ்சலி உரை ஆற்றச் சென்ற போது கண்ணீர்விட்டு அழுதபடி நின்றிருந்த தாய்மார் சிலர் முதலமைச்சரின் காலைப் பிடித்து கதறி அழுதனர். இதன்போது ‘ சம்மந்தன் ஐயாவை பேச விடாதீர்கள். அவர் ஒரு துரோகி. அவரை வெளியேற்றுங்கள் ஐயா. நாங்கள் சொத்துக்களை இழந்து விட்டோம். உறவுகளையும் இழந்து விட்டோம். உங்களைத் தான் நம்பியுள்ளோம். ‘ என கதறி அழுதனர். அவர்களை ஆசுவாசப்படுத்திய முதலமைச்சர் அங்கிருந்து சென்று அஞ்சலி உரை ஆற்றினார்.
முள்ளியவாய்கால் மண்ணில் நடைபெற்றது இனப்படுகொலை. அந்த கொலையைப் புரிந்த முப்படைகளுக்கும் வடக்கில் இனியும் என்ன வேலை இருக்கிறது. அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து இராணுவமே வெளியேறு என குரல் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறியதுடன், ஒற்றுமையாக அனைவரும் இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியத்தையும் முதலமைச்சர் தனது அஞ்சலி உரையில் வெளியப்படுத்தியிருந்தார். முதலமைச்சரின் அஞ்சலி உரையின் போது அமைதியாக இருச்து அந்த உரையை அங்கு வந்த மக்கள் செவிசாய்திருந்ததுடன் சிலர் அது காத்திரமான உரை எனவும் உரையாடிக் கொண்டனர்.
அடுத்து அஞ்சலி நிகழ்த்துவதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அழைத்திருந்தார். அப்போது அங்கு நின்ற தமது உறவுகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இது அரசியல் மேடையல்ல. எல்லோரும் அஞ்சலி செலுத்துங்கள். உரைகள் வேண்டாம் என முணுமுணுக்கத் தொடங்கினர். இருப்பினும் அவரது உரை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் தனது உரையில் ‘ முள்ளியவாய்கால் நினைவேந்தலை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது’ எனக் கூறி அமைதி காக்க, அங்கு நின்ற ஊடகவியலாளர் ஒருவர் ‘பயங்கரவாதம் இந்த நாட்டில் தோற்கடிக்கப்பட்டதற்கு பாராளுமன்றத்தில் பாராட்டுத் தெரிவித்திருந்தீர்கள். இதைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள்’ என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அங்கு மேலும் சலசலப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே சம்மந்தன் ஐயா இங்கு உரையாற்றக் கூடாது எனக் கூறிய தாய்மார், சம்மந்தன் ஐயாவின் உரை ஆரம்பித்த பின்னர் அவர் இங்கு உரையாற்ற இது அரசியல் மேடையோ, பாராளுமன்றமோ இல்லை. இனியும் எம்மை ஏமாற்ற முடியாது. இறுதி யுத்தம் நடைபெற்ற போது தொலைபேசியை அணைத்து விட்டு இந்தியாவில் இருந்தீர்கள். எம்மை காப்பாற்ற எண்ண செய்தீர்கள் என இருவர், மூவராக தமக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் உரக்க குரல் எழுப்பத் தொடங்கினர். இங்கு இனி எவரும் உரையாற்றக் கூடாது என்ற அடிப்படையில் அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது. சில தாய்மார், உரையை தடுப்பதற்கும் முயன்றிருந்தனர். இருப்பினும் கூட்டமைப்பின் தலைவருடைய மெய்பாதுகாவர்கள் அவர் அருகில் வந்து அருகில் எவரும் நுழையாதபடி பாதுகாப்பை இறுக்கிக் கொண்டனர். அமைதியாக சுருக்கமாக தனது உரையை அவர் முடித்துக் கொண்டார். உரை நிகழ்ந்த இடத்திற்கு வருகை தந்த தாயார் ஒருவர் இங்கு எவரும் உரையாறறக் கூடாது. இது நாம் எமது உறவுகளை இழந்த இடம். அங்கு அஞ்சலியை மட்டுமே செய்யுங்கோ என உரக்க குரல் கொடுத்து ஒலிவாங்கியை பறிக்க முற்பாட்டார். இளைஞர்கள் சிலரும் இது துனிதமான இடம். இங்கு எவரும் உரையாற்றக் கூடாது என தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து கூட்டமைப்பு தலைவரை வசைபாடினர். இனி உரைகள் இல்லை எனக் கூறிய ஏற்பாட்டாளர்கள் அந்த நிலமையை கட்டுப்படுத்தி பிரதான சுடர் ஏற்ற வடமாகாண முதலமைச்சரை அழைத்தனர். அவர் பிரதான சுடரை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றி இறந்த அந்த உறவுகனை நினைவுகூர்ந்தனர்.
இதன்போது குருதியால் தோய்ந்த முள்ளியவாய்கால் மண் மக்களின் கண்ணீரால் நனைந்தது. பிரதான நினைவுத் சுடருக்கு அருகில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் வாழைக் குத்தி ஒன்றை நாட்டி தமது முள்ளியவாய்கால் நினைவேந்தல் தின பதாதையை பிடித்தவாறு அஞ்சலி செலுத்தினர். வடமானாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதன்போது அஞ்சலி உரையும் ஆற்றினார்.
மக்கள் ஒவ்வொருவரும் தமத உறவுகள் மடிந்த அந்த மண்ணில் தீபம் ஏற்றி அழுது புரண்டு தமது துயரத்தை வெளிப்படுதிக் கொண்டிருந்தனர். நிகழ்வு ஒரு மணிநேரத்திற்குள் நிறைவுற்ற போதும் அன்றைய தினம் முழுவதுமே பொதுமக்கள் பலரும் வருகை தந்து தீபமேற்றி தனித்தனியாக அங்கு அஞ்சலி செலுத்தி அவ்விடத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு சென்றதை அவதானிக்க முடிந்தது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தம் நடைபெற்ற போது மக்கள் ஒருவேளை சாப்பிடுவதற்கே உணவின்றி கஸ்ரப்பட்ட நிலையில் இலலைக்கஞ்சி மற்றும் உப்புக் கஞ்சியே அந்த மக்களின் பசியை போக்கியது. அதனை நினைவு கூரும் வகையில் அங்கு வந்த அனைவருக்கும் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டதுடன், தண்ணீர் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வுக்காக வந்த அரசியல்வாதிகள், பொது மக்கள் எனப்பலரும் ஒவ்வொருவராக கனத்த மனத்துடன் வெளியேறினர்.
இதன்போது வடமாகாண முதலமைச்சரிடம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தருடன் இணைந்து முள்ளியவாய்கால் நினைவேந்தல் தொடர்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி அங்கு ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் விளக்கமளிக்க கூட்டமைப்பின் தலைமைக்கு நெருக்கமான மக்கள் பிரதிநிதிகள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டனர். முதலமைச்சர் தனது கருத்துக்களை அஞ்சலி உரையில் தெரிவித்திருந்தமையால் அவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இணங்காது சென்றுவிட்டதாகவும் அறிய முடிகிறது.
இது தவிர, முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் பல இடங்களில் இடம்பெற்றிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் என கடற்கரையிலும், சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் புனித சின்னப்பர் தேவாலயத்திலும், ஜனநாயக கட்சிகளின் ஏற்பாட்டில் இரட்டையடியிலும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளிலும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுது தமது அஞ்சலிகளை செலுத்தி அந்த மண்ணையே சோகத்தில் ஆழ்த்தினர்.
உரிமைக்காக போராடிய தமிழ் தேசிய இனம் கொன்று குவிக்கப்பட்ட முள்ளியவாய்கால் நினைவேந்தல் என்பது கட்சி அரசியலுக்கும், சுயநலங்களுக்கும் அப்பால் ஒரு துயரமான நாளாக உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட வேண்டிய புனிதநாள். இந்த நாளின் மேடைப் பேச்சுக்களும், சுயநல அரசியல் செயற்பாடுகளும், பிரிவினைகளும் பாதிக்கப்பட்ட மக்களை கொதித்தெழவே செய்யும். அது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுடன் சம்மந்தப்பட்ட விடயம். அதனை தவிர்க்க முடியாது. அவர்களால் தான் அந்த வலிகளையும், அந்த கணங்களையும் உணர்ந்து கொள்ள முடியும். இதனை புரிந்து தலைமைகள் மக்களை வழிப்படுத்தி அவர்களது துயரத்தையும், துன்பத்தையும் ஆற்றுவதற்கு இடமளிக்க வேண்டும். அத்தகைதொரு நிகழ்வாக இதனை மாற்றுவதற்கு இனிவரும் காலங்களில் இது ஒரு மக்களின் நிகழ்வாக மாற்றப்பட வேண்டும். அதுவே இறந்த உறவுகளின் தியாகங்களுக்கும் செய்யும் ஒரு மரியாதையாக இருக்கும் என்பதே உண்மை.

N5
