முள்ளியவாய்கால் நினைவேந்தலும் கூட்டமைப்பு தலைமை மீது அதிகரிக்கும் விரக்தியும்
-நரேன்-
ஒட்டுமொத்தத்தில் மானிடத்தை நேசிக்கும் எந்தவொரு மனிதனாலும் இலகுவில் மறந்து விட முடியாத மண்ணே முள்ளியவாய்கால். இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாகிய தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 வருட அகிம்சைப் போராட்டத்தில் தமிழ் தேசிய இனத்தின் மிதவாத தலைவர்கள் ஈடுபட்ட போது தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிரதான அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனம் உரிமைக்காக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். 30 வருடமாக தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய தமிழ் தேசிய இனம் பிராந்திய நாடுகளே அச்சம் கொள்ளும் வகையில் வலுவான இராணுவ படைக் கட்மைப்பை கொண்டதாக வளர்ச்சியடைந்தது. இந்நிலையில் சர்வதேச நாடுகளின் துணையுடன் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான முன்னைய அரசாங்கம் சர்வதேச போர் விதிதுறைகளை மீறி போர்குற்றங்களுடனும், மனிதவுரிமை மீறல்களுடன் தமிழினத்திற்கு ஏதிராக போர் தொடுத்து முள்ளியவாய்கால் மண்ணில் 2009 மே 18 ஆம் திகதி பாரிய மனிதப்பேரவலத்துடன் போரை முடித்தது. இதனால் இந்த முள்ளியவாய்கால் மண் என்பது எல்லோராலும் இலகுவில் மறந்து விடமுடியாத வரலாற்று மண். இன்று தமிழ் மக்கள் தொடர்பில் ஐ.நாவை பேச வைத்த மண்ணும் இது தான்.
வன்னியின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல்களுக்கும், விமான தாக்குதல்களுக்குள்ளும், துப்பாக்கி சூட்டுக்களுக்குள்ளும் தம்மை பாதுகாத்துக் கொள்ள இறுதியாக அடைக்கலம் தேடிய முள்ளியவாய்கால் மண்ணில் கூட பலர் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அந்த மண்ணே குருதியால் தோய்ந்தது. ஆயுதம் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் மேய்ப்பார் அற்ற மந்தைகள் போல் இருந்த தமிழ் தேசிய இனம் தமக்கான ஒரு தலைமையாக விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பேயே நம்பியிருந்தனர். ஆனால் உரிமைக்காக மடிந்த அந்த மக்களின் நினைவேந்தல் நிகழ்வில் கூட அதன் தலைவர் கலந்து கொள்ள முடியாத நிலமையே உருவாகியிருக்கிறது. இன்று மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் செல்வதற்கு அஞ்சுகின்ற நிலமைகள் உருவாகி வருகிறது. ஏன் இந்த நிலை வந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வடமாகாண சபையின் ஏற்பாட்டில் மூன்றாவது ஆண்டாக முள்ளியவாய்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 60 வருடத்திற்கும் மேலாக உரிமைக்காக போராடிய தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக அமைப்பாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் 8 ஆண்டுகுளுக்கு பின்னரே முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றியிருக்கிறார். தேர்தல் காலங்களில் முள்ளியவாய்கால் அவலத்தையும், அந்த மக்களின் நியாயமான அபிலாசைகளையும் முன்வைத்து வாக்கு பெற்று விட்டு அந்த மக்களின் நினைவு நாளில் கூட கலந்து கொள்ளாத நிலையே கடந்த வருடம் வரை நீடித்தது. சுதந்திர தினத்தில் பங்கு பற்றியிருந்த போதும் இந்த நிகழ்வுகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புறக்கணித்தே வந்திருந்தனர். ஆனால் இம்முறை அவர்கள் இருவரும் முள்ளியவாய்கால் மண்ணில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்டமைக்கும் காரணங்கள் உண்டு என்றே எண்ணவேண்டியுள்ளது.
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என நீதி கேட்டும், தாம் வாழ்ந்த காணிகளை விடுவிக்கக் கோரியும் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் மூன்றாவது மாதத்தை கடந்துள்ளது. இப்போராட்டங்கள் தொடர்பில் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முள்ளியவாய்கால் நினைவேந்தல் நாள் அன்று கூட கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு சென்ற சம்மந்தன் மற்றும் மாவை கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குச் சென்று மக்களது காணிகளை பார்வையிட்டு விட்டு 70 ஏக்கர் காணிகளைத் தவிர ஏனைய காணிகளை இராணுவம் தரக்கூடிய நிலையில் இருக்கிறது எனக் கூறியதுடன், 70 ஏக்கர் காணியின் பெறுமதியை மக்களிடம் கேட்டுள்ளார். இதன்போது மக்கள் தமக்கு தமது காணிகள் தான் வேண்டும். அதற்குரிய பெறுமதிகள் தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரை அதன் பெறுமதிகளை எம்மால் பார்க்க முடியாது. அந்த மண் தான் எங்களை வாழ வைத்தது எனக் கூறி அனுப்பி வைத்தனர். தமது காணிகளுக்கு விலை பேசுவதற்கு தமக்கு தலைமைகள் தேவையில்லை என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இப்படியாக பரவலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான கருத்துக்களும், விமர்சனங்களும் மக்கள் மத்தியில் எழுத் தொடங்கியுள்ள நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாய நிலை கூட்மைப்பு தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது.
இது தவிர, அண்மைக்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு நபராக மாறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகளை தன்னை சந்திக்கின்ற இராஜதந்திரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் காத்திரமாக முன்வைத்து வருகின்றார். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கைக்குரியவராக அவர் மாறியிருக்கிறார். இந்நிலையில் வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் மூன்றாவது முறையாகவும் முள்ளியவாய்கால் நினைவேந்தல் நடைபெறுகின்ற போது அது மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கை மேலும் அதிகரித்து விடும். இதனால் கூட்டமைப்பின் தலைவரும் தனது நிலையை தக்க வைக்க விரும்பியோ விரும்பாமலோ முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய ஒரு நிலமை உருவாகியிருக்கிறது என்றே கருதவேண்டியுள்ளது. இவற்றுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலும் விரைவாக நடைபெறவுள்ளது இதனால் கூட்டமைப்பை தக்க வைக்க வேண்டிய நிலையில் அதன் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முயற்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தான் அவர்களின் வருகை இடம்பெற்றது.
ஆனாலும், முதலமைச்சர் அஞ்சலி உரை ஆற்றிய போது அமைதியாக இருந்த மக்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பேசிய போது முணுமுணுக்கத் தொடங்கினர். சம்மந்தனுக்கு எதிராக மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல குரல்கள் எழுந்திருந்தன. இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர் சம்மந்தனின் உரையை குறுக்கிட்டு கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுக்காக வந்த மக்கள் இதில் அரசியல் பேச வேண்டாம். விரும்பினால் அஞ்சலி மட்டும் செய்யுங்கள். இனியும் நாம் ஏமாற தயாரில்லை என பல்வேறு கருத்துக்களை கூட்டமைப்பு தலைமைக்கு எதிராக கூறியிருந்தனர். இந்த குழப்பநிலையையடுத்து சம்மந்தனது மெய்பாதுகாவர்கள் அவரது பாதுகாப்பை மீள இறுக்கிக் கொண்டனர். அவரும் தனது உரையை சுருக்கி முடித்தார். இதே நிகழ்வில் முதலமைச்சர் எழுந்த போது மக்கள் அவரது கால்களைப் பிடித்து ‘நாங்கள் சொத்துக்களை இழந்து விட்டோம். உறவுகளையும் இழந்து விட்டோம். உங்களைத் தான் நம்பியுள்ளோம். எங்களை கை விட்டுவிடாதீர்கள்’ எனகதறி அழுத சம்பவமும் இடம்பெற்றிருந்தது. இது வடமாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கும் மக்கள் மத்தியிவ் தற்போது உள்ள அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இதனை சிலர் திட்டமிட்டு குழப்புகின்றனர் என்ற குற்றச்சாட்டு கூட்டமைப்பின் தலைமையிடம் இருக்கிறது. ஆனால் அவ்வாறு எல்லா இடங்களிலும் நடப்பதாக தெரியவில்லை. சில சம்பவங்கள் அவ்வாறு நடக்கலாம். அதனை மறுக்கவும் முடியாது. ஆனாலும் அவ்வாறு குழப்பினால் இதுவரை காலமம் குழம்பாத மக்கள் தற்போது குழம்பும் நிலைக்கு செல்லத் துணிந்து விட்டார்கள். ஆகையால் தலைமைகளுக்கும் மக்களுக்கும் இடைவெளிகள் ஏற்படத் தொடங்கி விட்டது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
இது ஒருபுறமிருக்க, முள்ளியவாய்கால் நினைவேந்தல் என்பது ஒரு விழாவோ அல்லது அரசியல் நிகழ்வோ அல்ல. இது தமிழ் தேசிய இனம் ஒன்றித்து அனுஸ்டிக்க வேண்டிய துயரநாள். இந்த நாளைக் கூட தமிழ் மக்கள் ஒன்றுமையாக ஒன்றாக நினைவு கூட முயாதா நிலையே இன்றும் தொடர்கிறது. வடமாகாண சபை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஜனநாயக போராளிகள் கட்சி, சிவில் அமைப்புக்கள் என முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் நான்கு இடங்களில் நினைவேந்தல்கள் நடைபெற்றன. நான்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியும் இருந்தனர். ஆனால் ஒரு நினைவேந்தலைக் கூட ஒற்றுமையதக செய்ய முடியாத நிலை என்பது உரிமைக்காக போராடிய இனத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. அது அந்த மண்ணில் மடிந்த ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகமும் கூட. அனைத்து கட்சிகளும், பொது அமைப்புக்களும், தமிழ் மக்களும் இணைந்து ஒரு பொது நிகழ்வாக இதனை செய்ய வேண்டும். அதுவே அந்த ஆத்மாக்களுக்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் மரியாதையாகவிருக்கும்.

N5




