செய்திகள்

மைத்திரியின் செயற்பாடுகள் ஐ.தே.க.வைத்தான் பலப்படுத்தும்: மகிந்த ராஜபக்‌ஷ எச்சரிக்கை

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை அகற்றி ஏற்படுத்தும் தொந்தரவுகள் கட்சியின் பிளவுக்கே வழிவகுக்கும் என முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் போசகருமான மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் உள்ள சு.க உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் பதவியிலிருந்து விலக்கப்பட்டமை இது இரண்டாவது தடவை என்றும் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு, பிரபலம் குறைந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். புத்தளம் மாவட்டத்தில் அதிகூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற சனத் நிஷாந்தவின் உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்டங்களில் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர்கள்.

கம்பஹா மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றவர் பிரசன்ன ரணதுங்க, அநுராதபுர மாவட்டத்தில் எஸ்.எம்.சந்திரசேனவும், கண்டி மாவட்டத்தில் திலும் அமுனுகமவும், களுத்துறை மாவட்டத்தில் ரோஹித்த அபயகுணவர்த்தனவும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர்கள். இவர்கள் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் சுதந்திரக் கட்சியின் 17 தொகுதி அமைப்பாளர்கள் மத்திய குழுவினால் நீக்கப்பட்டுள்ளனர். செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக தோல்வியடைந்த மற்றும் குறைந்த வாக்குகளைப் பெற்றவர்களே புதிய அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நடைபெறக்கூடிய தேர்தலில் சுதந்திரக் கட்சியை பலவீனமடையச் செய்து ஐக்கிய தேசியக் கட்சியைப் பலமடையச் செய்யும் திட்டமாகவே இது காணப்படுகிறது. பிரபலமான அரசியல்வாதிகளை அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கி கட்சியில் பிளவினை ஏற்படுத்துவதற்கான பொறுப்பினை கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியை அழிப்பதற்கான முயற்சிகளில் முதற்கட்டமாக சு.கவின் கட்டுப்பாட்டிலிருந்த உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டன. இவற்றுக்கு இன்னமும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இரண்டு பிரதான கட்சிகளும் தமது ஒப்பந்தத்தை ஐந்து வருடங்களுக்கு நீடித்துள்ளன. சுதந்திரக் கட்சியின் செயற்குழுவோ அல்லது மத்திய குழுவின் அனுமதி இன்றி ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியை பலமடையச் செய்வதற்காக சு.கவை பலமிழக்கச் செய்யும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
R-06