செய்திகள்

மைத்திரியின் வருகை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்கு மேற்கொள்ளும் பயணத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படும் என்று  இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றும், நாளையும் இந்தியாவில் பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, உஜ்ஜெயினில் நகரில், சிம்ஹஸ்தா கும்பமேளாவின், ஒரு பகுதியாக நடக்கும், வைச்சாரிக் மகா கும்பமேளாவில், இலங்கை ஜனாதிபதி நாளை உரையாற்றுவார்.

அத்துடன் சாஞ்சி செல்லும் அவர், உலகப் புகழ்பெற்ற சாஞ்சி தாதுகோபத்துக்குச் சென்று, சிறிலங்கா மகாபோதி சமூகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் பங்கேற்பதுடன், அநகாரிக தர்மபாலவின் உருவச்சிலையையும் திறந்து வைப்பார்.

இலங்கை ஜனாதிபதி இன்று புதுடெல்லியில் தங்கியிருக்கும் போது, அவரைக் கௌரவித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இராப்போசன விருந்து வழங்குவார்.

இந்தப் பயணத்தின் மூலம், இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பையும் உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்குப் பங்களிப்பார் என்று நாம் நம்புகிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.

n10