மைத்திரியை மக்கள் தெரிவு செய்தனர்; ரணிலை பிரதமராக யார் தெரிவு செய்தது? விமல் கேள்வி
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மக்கள் தெரிவு செய்தனர். ஆனால் பிரதமராக ரணில் விக்கிரம சிங்கவை மக்கள் தெரிவு செய்யவில்லை. ஜனாதிபதியும் எதிர்க்கட்சியும் ஒரு கட்சியாக இருக்கையில் பிரதமர் வேறு கட்சியில் இருந்து ஆட்சி நடத்துகின்றார். இது குழப்பகரமான தேசிய அரசு” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மதநாட்டில் உரையாற்றிய போதே விமல் இதனைத் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது:
“இந்த அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஹெல உறுமய போன்ற கட்சிகள் தீர்மானமெடுக்கின்றனர். இது மக்களின் தெரிவில் உருவான ஆட்சி அல்ல. ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வாக்குக் கொடுத்தது 9 ஆம் திகதி இவ்வாறான குழப்பகர ஆட்சியினை உருவாக்க அல்ல. இப்போது மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து அனைவரும் போட்டியிட்டு பின்னர் முதலிடம் வகிப்பர் பிரதமர் இரண்டாவது வருபவர், உப பிரதமர் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்களின் செயற்பாட்டினால் நாட்டில் எதிர்க்கட்சி ஒன்று இல்லாது போய்விட்டது. தேசிய அரசு உருவாக தனித்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. இதில் தெளிவாக தெரிகின்றது.
சர்வதேசத்திற்கும் புலம்பெயர் புலி அமைப்புகளுக்கு தேவையான அரசை உருவாக்க இவர்கள் முயற்சிக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மீண்டும் மக்கள் ஆட்சிக்கு திரும்ப வேண்டும். எனவே, வெற்றியின் பயணத்தினை மீண்டும் நாம் ஆரம்பித்து வெற்றியினை பெறக் கூடிய பொருத்தமான தலைமைத்துவத்துடன் பொதுத் தேர்தலில் களமிறங்க வேண்டும்.
அதேபோல் எதிர்வரும் 18 ஆம் திகதி இவ் முயற்சியினை வெற்றி பெறச் செய்யும் வகையில் மக்களை மீண்டும் ஒன்றுபடுத்தி ஆட்சியினை கைப்பற்றும் மாநாட்டினை நாம் மேற்கொள்ளவுள்ளோம். இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரகக் கூட்டணியில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். எனவே, 18 ஆம் திகதி நுகேகொடையில் அனைத்து மக்களையும் எதிர்பார்க்கின்றோம்.”




