மைத்திரி – ரணில் தேன்நிலவு முடிவுக்கு வருகின்றதா?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்துடனான “தேன்நிலவு” கலைந்துகொண்டு செல்கின்றது என்பதற்கான சமிக்ஞையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை வெளிப்படுத்தியிருப்பதாக தென்படுகின்றது. கடுமையான நடவடிக்கை எடுக்கதான் தயங்கப்போவதில்லையென ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அதிகாரத்துக்கு வந்த பின்னர் மிகக் கடுமையான தொனியிலான கருத்துக்களை ஜனாதிபதி முதன்முறையாக வெளியிட்டிருப்பதாக தோன்றுகின்றது என இந்தியாவின் ‘எக்கனொமி நெக்ஸ்ட்’ இணையத்தளம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பில் குறிப்பிட்ட இணையத்தளம் வெளியிட்டிருக்கும் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“ஊழல் மோசடிக்கு எதிரான மூன்று பிரதான அமைப்புக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாடியுள்ளார். சுயாதீன இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் இதில் உள்ளடங்கும். அரசியல் ரீதியான நோக்கத்தைக் கொண்ட விசாரணைகளாக அமைந்திருப்பதாகவும் அவை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயலாளர்களையும் அவர் எச்சரித்திருக்கிறார். அவர்களை அவரே நியமித்திருப்பதாகவும் அவர்கள் அவர்களின் எல்லைகளை அறிந்திருக்க வேண்டும் எனவும் உயர்மட்ட வழக்குகள் குறித்து தனக்கு அறிவித்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தான் நீண்ட காலமாக மௌனமாக இருந்ததாகவும் ஆனால் இப்போது பேசவும் உறுதியான நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று முன்னாள் கடற்படை அட்மிரல்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீதான கடந்த மாத விசாரணையை அவர் வேறுபடுத்தி காட்டியுள்ளார்.
நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, குற்றவியல் விசாரணைப்பரிவு, இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகளை நான் கண்டிக்கிறேன் என்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் கூறியுள்ளார். அவர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படக்கூடாது. அவ்வாறு செய்தால் நான் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியிருக்கும். அவர்களின் செயற்பாடுகள் குறித்து நான் கவலையடைகின்றேன். எனது வெறுப்பை வெளிப்படுத்த விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு 2009 மே இல் வெற்றிகரமான போராட்டத்துக்கு தலைமைதாங்கிய இராணுவத் தளபதிகளை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் அவர்களை இம்சைப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் மூன்று கடற்படை தளபதிகளும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியருந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவன்கார்ட் கார்டே பாதுகாப்புக் கம்பனியை சம்பந்தப்படுத்திய தனிப்பட்ட ஆயுத விற்பனை ஊடாக அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றசாட்டப்பட்டுள்ளது. அவர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முறிவுக்கு மத்தியில் சிறிசேனவின் வழமைக்கு மாறான கடுமையான தொனியிலான கருத்துக்கள் வெளிவந்திருப்பதாக எக்கனொமி நெக்ஸ்ட் இணையத்தளம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.
விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு எதிராக மத்திய வங்கியின் இணைமுறி மோசடி குற்றச்சாட்டு முக்கியமான குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக காணப்படுகின்றது. முன்னைய அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்ட விமானங்களை இரத்து செய்வதற்கு 155 மில்லியன் டொலர் செலுத்தியதாக ஊழல் குற்றச்சாட்டுக்களை இப்போது அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா ரெலிகொம் பயன்படுத்தி நஷ்டத்தில் இயங்கும் தொலைபேசி கம்பனி ஒன்றை கொள்வனவு செய்வதற்கு முறையற்ற விதத்தில் முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை நிர்வாகம் எதிர்கொண்டிருக்கிறது.
அதேவேளை விக்கிரமசிங்கவின் ஐ.தே .க வின் ஆதரவு இல்லாமல் அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கு தனது சொந்த தளத்தை கட்டியெழுப்புவதில் சிறிசேன ஆர்வமாக இருப்பதற்கான அறிகுறியாக அவர்வெளியிட்ட விசனம் நோக்கப்படுகிறது. 2015 ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் அவரின் வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சி உறுதிப்படுத்தியிருந்தது. 2020 வரை தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் தனது முழுமையான ஆயுட்காலத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென விக்கிரமசிங்க கடந்த வருடம் கூறியிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட விசனம் விக்கிரமசிங்கவின் ஸ்திரத்தன்மை பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கோ பிரதமரை பதவி நீக்குவதற்கோ சிறிசேனவிற்கு அதிகாரம் இல்லை. ஆனால் பாராளுமன்றத்துக்குள் கட்சி மாறுவதை உறுதிப்படுத்துவதன் மூலம் புதிய அரசாங்கத்தை அவரால் அமைக்க முடியும். தேவை ஏற்படின் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு ஆதரவானவர்களை விட்டுவிட்டு பாராளுமன்றத்துக்குள் புதிய அரசாங்கத்தை அமைக்கமுடியும்.
“அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான வேறுபாடுகள் பகிரங்கமாக வெளிவந்துகொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். அரசியல் நெருக்கடி ஒன்றை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்” என்று ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி தடத்தை மாற்றிக் கொண்டதாக தென்படுகின்றது. அத்துடன் சிங்கள தேசிய வாதிகளுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் தனது சொந்த அரசியல் தளத்தை கட்டியெழுப்புவதற்கு அவர் முயற்சித்திருப்பதாக தோன்றுகின்றது என்று மற்றொரு நல்லாட்சிக்கான செயற்பாட்டாளர் குசல் பெரேரா கூறியுள்ளார்.
”முன்னாள் இராணுவத்தளபதிகள் மற்றும் போர்க் கதாநாயகர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்று கூறுவதன் மூலம் சிங்கள தேசிய வாதிகளின் நோக்கத்தில் சம்பியன் ஆவதற்கு ஜனாதிபதி விரும்புகிறார் என்று குசல் பெரேரா கூறியுள்ளார். 2015 தேர்தலில் சிறிசேனவிற்கு பெரேரா உதவியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


