மோடியின் விஜயத்தின் போது இலங்கை – இந்தியா முக்கிய உடன்படிக்கைகளுக்கு தீர்மானம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வலுச் சக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகள் பல கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அதன்பின்னர் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் அவர் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதன்படி ஏப்ரல் 5ஆம் திகதி முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து அன்றைய தினம் இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன்பின்னர் இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு உரையாற்றுவர்.
இதேவேளை சம்பூர் சூரியசக்தி மின் திட்டத்தை ஆரம்பித்து வைத்தல், எமது நாட்டில் வணக்கஸ்தலங்கள் சிலவற்றுக்கு சூரிய சக்தி கட்டமைப்பை வழங்கி வைத்தல் மற்றும் தம்புளை குளிரூட்டி நிலையத்தை திறந்து வைத்தல் என்பன கொழும்பில் இருந்து இடம்பெறும்.
அத்துடன் ஏப்ரல் 6ஆம் திகதி இந்திய பிரதமர் அநுராதபுரம் ஶ்ரீமகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார். அதன்போது அநுராதபுரத்தில் புகையிரத சமிக்ஞை கட்டமைப்பை திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்தியப் பிரதமரின் இந்த விஜயத்தின் போது வலுச் சக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகள் ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கப்பபடுகின்றது. இது தொடர்பான தகவல்களை விஜயத்தின் பின்னர் தெரிவிப்போம் என்றார்.
-(3)




