மோதலுக்கான காரணத்தை அறிந்துகொள்ள பூரண விசாரணை: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் கூட்டறிக்கை
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மோதலில் ஈடுபட அடிப்படையாக அமைந்த காரணிகளை முற்றாக அறிந்துகொள்வதற்காக பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் மோதல் சம்பவம் தொடர்பில் அறிய ஆக்கப்பூர்வமான விசாரணைக்குழு அமைத்து, பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரின் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே மாணவர்களின் உண்மையான ஆதங்கங்களை அறிந்து, அதனைத் தணிப்பதற்கான வழிமுறைகளை ஆராய முடியும் என்றும் மாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் மேலெழுந்த வாரியான செயற்பாடுகள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யுமேயொழிய உண்மையான புரிந்துணர்தலை ஏற்படுத்துவதற்கு வழிகோலாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தெற்கிலுள்ள இனவாதிகள் இவ்வாறான சம்பவங்களை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி அரசியல் லாபம் பெறுவதை தடுப்பதற்கு பூரண விசாரணை வழிகோலும் என வட மாகாண சபையின் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவரும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையின் கீழ் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட கைகலப்பு ஓர் துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும் என்பதுடன், அது குறித்து விசாரிப்பதற்காக பல்கலைக்கழகத்தினால் ஓர் குழு நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும் இரண்டு தலைவர்களும் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை ஓர் சாதாரண குற்றவியல் சம்பவமாகக் கருதாமல் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொண்டமைக்கான அடிப்படைக் காரணிகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுவதே அந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
இந்த விடயத்தில் அரசியல் வேறுபாடுகள் இல்லாது வட மாகாண சபை கரிசனை கொண்டிருக்கின்றது என்பதை வலியுறுத்துவதற்காகவே தாம் இருவரும் ஒருமித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோரின் கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
R-06




