யார் இந்த இந்திரஜித் குமாரசாமி?
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பிரபல்யம்மிக்க பொருளியலாளர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மிகவும் மதிக்கப்படும் ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். றோவிங் ராஜு என்று அழைக்கப்படும் இவரது தந்தையார் ராஜு குமாரசாமி ஒரு பிரபல்யம்மிக்க ராஜதந்திரி ஆவார். அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பு சபையின் உறுப்பினரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடுகளுக்கான ஐ. நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதியுமான ராதிகா குமாரசாமியின் சகோதரர் இந்திரஜித்.
இவர் மிகச் சிறந்த ஒரு ஒரு றக்பி விளையாட்டு வீரர் என்பதுடன் இலங்கை அணிக்கு தலைமை வகித்தும் உள்ளார். அத்துடன் இங்கிலாந்தின் ஹரோ ஸ்கூல் மற்றும் இம்மானுவேல் கல்லூரி, கேம்பிரிட்ஜ் (XIs) அணி ஆகிய கிரிக்கட் அணிகளுக்கும் அணித்தலைவராக பணி ஆற்றியுள்ளார். கொழும்பு தமிழ் யூனியன்கிரிக்கட் அணிக்கும் இவர் விளையாடியுளார். 1970 களில் கொழும்பின் மிகச் சிறந்த ஒரு விளையாட்டு வீரராக இந்திரஜித் கருதப்பட்டார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் தனது ஆரம்ப மற்றும் இரண்டாம் தர கல்வியை பயின்ற இந்திரஜித் பின்னர் இங்கிலாந்தின் ஹரோ கல்லூரியில் தனது படிப்பை தொடர்ந்தார். கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்பப்படிப்பை பூர்திசெய்த இவர் தனது கலாநிதி பட்டத்தை சசெஸ்க் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
1973 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் சேர்ந்த இந்திரஜித் 1989 ஆம் ஆண்டு வரை பொருளாதார ஆய்வு, புள்ளிவிபரம் மற்றும் வங்கிகள் மேற்பார்வை ஆகிய பிரிவுகளில் பணி ஆற்றினார். நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சிலும் இவர் பணி ஆற்றியுள்ளார். கல்வி புலமை மட்டுமன்றி நிர்வாகத்திலும் மிகவும் இவர் திறமை பெற்றவர் என்று அறியப்படுகிறார்.




