செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 22 மற்றும் 23 ம் திகதிகளில் காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 4.30 மணிவரை வடமாகாணசபை வளாகம், கைதடியில் நடைபெறவுள்ளது.
குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

1. வாசித்தலில், எழுதுதலில், விசேட தேவையுடையோருக்கான சாரதி அனுமதிப் பரீட்சையும் மருத்துவச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளலும்.
2. சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளல்.
3. தனிப்பட்ட மோட்டார் கோச்சினை ஒமினிபஸ் ஆக மாற்றம் செய்தல்
4. வாகன பதிவுப் புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல்.
5. வாகன இலக்கத்தகடு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள்.
6. வாகன உடமை மாற்ற விண்ணப்பங்கள் கையேற்றல்.
7. 2014/2015ம் ஆண்டு செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாகனங்களின் நிபந்தனைகளை நீக்குதல்.
8. வாகன நிறைசான்றிதழ் பெற்றுக் கொள்ளல்.
9. இதுவரை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு (RMB)தீர்க்கப்படாத நிலுவைகள்
10. வாகன வருமானவரி தொடர்பானவை.

இதேவேளை வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உறுப்பினரும், வடமாகாண தனியார் பஸ் சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீண்ட காலமாக வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துக்கான வருடாந்த வருமான வரி பத்திரத்தினை பெறுவதில் பெரும் இடர்பாடுகளை அதன் உரிமையாளர்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள்.

எனவே அந்த இடர்பாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக நீண்ட காலமாக நமது சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை எதிர்வரும் 22 ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் கைதடியில் இடம்பெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் கொழும்பில் சென்று மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் இங்கே ஒரே நாளில் ஓரிடத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பேருந்து உரிமையாளர்களும் தங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நடமாடும் சேவையில் தங்களுக்குரிய சேவையினை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.(15)