செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் – பல தரப்பினராலும் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி பொலிஸார் பாராமுகமாக உள்ளதாக பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்படுகிறது.குறித்த பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து , பருத்தித்துறை பகுதிக்கு வல்லை வெளி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப பெண்ணின் 5 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் வல்லை பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த வயோதிப பெண்ணின் தாலிக்கொடியை இழுத்து அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.அதனால் வயோதிப பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது. அதனால் அதில் பயணித்த வயோதிப பெண் உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைவான வல்லை வெளி பகுதியில் மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை குறித்த பகுதியில் வழி மறித்த வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் அவர்களிடம் இருந்து 11 பவுண் நகை மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.அதுபோன்று வேலை முடித்து வீடு செல்லும் நோக்குடன் குறித்த பகுதிக்கு அண்மையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்ற பெண்ணொருவரின் தங்க சங்கிலி ஒன்றும் வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் சங்கிலியை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.இதேவேளை குறித்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)