யாழ். இந்து மாணவர்களின் கல்விக்கான வீதியோட்டம்
யாழ்ப்பாண இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் கல்விக்கான வீதியோட்டம் (RACE FOR EDUCATION) நிகழ்வு எதிர்வரும் ஜுலை மாதம் 30 ஆம் திகதி இலங்கை ,அவுஸ்திரேலியா ,கனடா மற்றும் லண்டனில் இடம்பெறவுள்ளது.
கல்விக்கு கை கொடுக்கும் இந்த வீதியோட்டத்தில் இணைந்து இந்த முயற்சியை பலப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் க.பொ.த. சாதாரணதரப்பரீட்சையில் கணிதபாடத்தில் சித்தியடைய முடியாமல் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கான நகர்வில் சவால்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் நோக்குடன் கல்விக்கான வீதியோட்டம் நிகழ்வு 2015 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியது.
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் இந்த முயற்சி குறித்து கருத்துரைத்திருக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்வியல்துறை விரிவுரையாளர் மா.சின்னத்தம்பி தெரிவித்துள்ளதாவது :-
எங்களுடைய தடைதாண்டுகின்ற தேசிய பரீட்சையாக க.பொ.த சாதாரணதரப் பரீட்சையை பார்க்கிறோம். இதில் கட்டாய பாடங்களில் சித்தியடையவதென்பதில் மாணவர்களை அச்சப்படுத்துகின்ற விடயமாக கணித பாடத்தின் சித்தியை நோக்கவேண்டியுள்ளது. கணிதபாடத்தில் இன்றைக்கு 50 சதவிகிதத்திற்கு மேலான மாணவர்கள் சித்தியடைவில்லை என்பது தேசியரீதியாக கவலை தருகின்ற விடயம். எனவே கணித பாடம் என்பது மாணவர்கள் மட்டத்தில் உளவியல் ரீதியான விடயமாக மாறியுள்ளது – என்று தெரிவித்துள்ளார். (அவரது முழுமையான நேர்காணலை வீடியோ இணைப்பில் பார்க்கவும்)
வட மாகாணத்தில் 2014 ஆம் ஆண்டு கணிதபாடத்தில் 15137 மாணவர்கள் தோற்றியபோதும் 6702 மாணவர்கள் சித்தியடையவில்லை. அதாவது 44 சதவிகிதமானோர் சித்தியடையவில்லை. ஆந்தவகையில் கணிதபாடத்தின் சித்தி என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாகவே இன்று மாணவர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
போர் முடிவடைந்தும் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு மாணவர்கள் முகம்கொடுப்பதால் தகுந்த கல்விமுறை கிடைப்பதில்லை. இதுவே அவர்களுக்கான தொழில்வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதோடு சமூகத்தில் வறுமை நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது.
இந்த சவாலை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு நிச்சயமாக உதவவேண்டுமென்று தாயகத்தில் உள்ள கல்விச் சமூகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று யாழ்.இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் எடுத்த முயற்சிதான் கல்விக்கான வீதியோட்டம்.
வடக்கில் கல்வியில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட யாழ். தீவகம் ,கிளிநொச்சி ,முல்லைத்தீவு, துணுக்காய் ,மடு ,வவுனியா வடக்கு ஆகிய ஆறு கல்வி வலயங்களிலும் கிழக்கில் மூதூர் ,கல்குடா , மட்டக்கழப்பு மேற்கு, மட்டக்களப்பு, பட்டிருப்பு, காரைதீவு ஆகிய ஆறு கல்வி வலயங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெவியா கல்வி வலயத்திலுமாக மொத்தமாக 13 கல்விவலயங்களில் சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கு உதவும் திட்டமாக கல்விக்கான வீதியோட்டம் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வீதியோட்டத்தில் திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்தி கணித பாடத்தில் மாணவர்களுக்கு 10000 பயற்சி புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அத்தோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கருத்தரங்குகளும் பயிற்சி வகுப்புகளும் நடாத்தப்பட்டன.
இந்த முயற்சி பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் மாணவர்களுக்கு தேவையான ஆய்வுகூட வசதிகள் நூலகம் போன்ற மேலும் பல உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுக்க வேண்டிய தேவை புலம்பெயர் வாழ் சமூகத்தின் மத்தியில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உன்னத பணியை முன்னெடுக்கும் நோக்கில் இந்த வருடமும் கல்விக்கான வீதியோட்டம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் யாழ்பாணத்திலும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னிலும் கனடாவில் ரொறொன்ரோவிலும் இங்கிலாந்தில் லண்டனிலும் இந்த வீதியோட்டம் ( 5km for adults , 2 km for childrens ) ஜுலை 30 ஆம் திகதி நடைபெறும்.
கல்விக்கு கைகொடுக்கும் இந்த வீதியோட்டத்தில் பங்குகொண்டு மாணவர்களுக்கான முயற்சியின் கரங்களைப் பலப்படுத்துங்கள். அதேநேரம் கீழ் உள்ள இணைப்பின் இணையத்தளத்தின் ஊடாக வெளிப்படைத்தன்மையுடனும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையிலும் சேர்க்கப்படும் உதவி நிதிக்கு உலகின் எந்த பாகத்தில் இருந்தும் பங்களிப்பு செய்யலாம்.
http://uk.virginmoneygiving.com/fundraiser-web/fundraiser/showFundraiserPage.action?userUrl=JHCOLDBOYSUK&faId=696544&isTeam=true
கீழுள்ள இணைப்புகளில் யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை பார்வையிடலாம்.
[youtube url=”https://youtu.be/KiLsI48l6GA” width=”500″ height=”300″]
https://www.facebook.com/Race-for-Education-by-JHC-Old-Boys-560752424106136/
R-06




