செய்திகள்

யாழ்.உடுவில், மருதனார்மடம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி விற்பனை செய்த 25 வியாபார நிலையங்களுக்கு எதிராக அபராதம்

யாழ்.உடுவில் மற்றும் மருதனார்மடம் பகுதிகளில் சட்ட விதிமுறைகளை மீறி முத்திரை பதிக்கப்படாத தராசுகளைப் பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்ட 25 வியாபார நிலையங்களுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள அளவீட்டு அலகுகள் நியமங்களின் பொறுப்பதிகாரி பி.இராஜேஸ்வரன் தலைமையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி உடுவில் மற்றும் மருதனார்மடம் சந்தைப் பகுதிகளைச் சூழவுள்ள பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது அப்பகுதியில் முத்திரை பதிக்கப்படாத தராசுகளைப் பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் காலவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 30 வியாபார நிலையங்கள் சிக்கின.

இவ்வாறு சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கெதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் 25 வியாபார நிலையங்களுக்கும் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இதேவேளை ஐந்து வியாபார நிலையங்கள் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.நகர் நிருபர்-