யாழ் பல்கலைக்கழகத்திற்கான நிதியை குறைத்துவிட்டு நல்லிணக்கம் பற்றி பேசுவது வெட்கக் கேடானது : ஜே.வி.பி
யாழ். பல்கலைக்கழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 500 மில்லியன் ரூபாவால் குறைத்துவிட்டு அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசுவது வெட்கக் கேடானது என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயர்கல்விக்காக கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட தொகையை விட 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. அது ஆயிரத்து 350 கோடி ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஆண்டைவிட 700 மில்லியன் ரூபாவும் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு 200 மில்லியன் ரூபாவும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கும் 500 மில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழகம் தான் யாழ். பல்கலைக்கழகம். அங்கு விடுதி பிரச்சினை இருக்கின்றது. தண்ணீரைக் கூட காசு கொடுத்து வாங்கும்நிலைக்குத் தான் அங்குள்ள மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இப்படி பல பிரச்சினைகள் அங்கு காணப்படுகின்றமையால் ஏனைய பல்கலைக்கழகங்களைவிட அங்குதான் அதிக நிதியை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், இங்கு குறைக்கப்பட்டுள்ளது. இப்படி செய்துவிட்டு சம்பந்தனிடம் நல்லிணக்கம் பற்றி பேசுவதற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். -(3)




