செய்திகள்

யாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம் -குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்க தீர்மானம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலர் பகிடிவதை என்ற போர்வையில் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணைக்கு மேலதிகமாக குற்றச்செயல் ஒன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தொழில்நுட்பப்பீட நிர்வாகத்தால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கை நீதிமன்றின் ஊடாக குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்றுவதற்கு கிளிநொச்சிப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் – தரவுகளை அவற்றின் இணைப்பு வழங்குநர் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் கடந்த வாரம் குற்றச்செயல் ஒன்று தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தனர். அலைபேசி இலக்கங்களின் விவரங்கள் – தரவுகள் அறிக்கையை வழங்க கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ரி.சரவணபவராஜா, அலைபேசி இணைப்பு வழங்குநர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.இந்தநிலையில், இந்தக் குற்றச்செயல் தொடர்பில் நுணுக்கமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளதால், நீதிமன்றின் ஊடாக வழக்கை குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.(15)