செய்திகள்

யாழ் பல்கலை மாணவர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியவற்றுக்கும் இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தமைக்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்பட்டு கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு நேற்று (31) நிர்வாக செயற்பாடுகளையும் முடக்கி போராட்டம் ஒன்றை யாழ் பல்கலை மாணவர்கள் ஆரம்பித்திருந்த நிலையில் நேற்று காலை அங்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டார்.
இதன்போது அமைச்சரின் உறுதிமொழிகளையடுத்து தமது போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியவற்றுக்கும் இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. -(3)