செய்திகள்

யாழ். மாநகர சபைக்கு வழங்கிய நிதியை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் கோரிக்கை

2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜப்பானிய இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம், ஜப்பானிய உள்ளூராட்சி மன்றங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி வாகனங்களை வழங்குவதற்காக, யாழ் மாநகர சபையுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது.

அதன்படி, நான்கு வாகனங்களை கொள்வனவு செய்தல், இறக்குதல், சுங்க அனுமதி மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்து தொடர்பான செலவுகளுக்கான மொத்தத் தொகையாக ஒரு கோடியே 43 இலட்சத்து 29,446 ரூபா நிதி ஜப்பானினால் வழங்கப்பட்டதுடன், இந்த நிதி நேரடியாக யாழ் மாநகர சபையின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கையில், வாகனங்களின் பயனுள்ள பயன்பாடு மற்றும் சுய பராமரிப்பு குறித்து உள்ளூர் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், தேவையான மறுசீரமைப்பு மற்றும் பரிசோதனையின் பின்னர் வாகனங்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லல் என்பன ஜப்பானிய தரப்பினால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரியுள்ளது. பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை யாழ் மாநகரசபை முன்கூட்டியே பெறும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டபோதும் திட்டத்தை 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் நிதியை மீள ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.(15)