யாழ்.வன்முறைகளை தடுப்பதற்கு அவசர நடவடிக்கைக்குழு: கொழும்பில் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை
யாழ். குடாநாடு உட்பட வடக்கில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைகள், கொலைகள், வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கென அவசர நடவடிக்கைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உட்பட பலரையும் சந்தித்து பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடிய வடமாகாணத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் அதனை தடுப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தனர். இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், சிவில் அமைப்ப்களின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர்.
யாழ். குடாநாடு உட்பட வடபகுதியில் அண்மைக்காலமாக வாள்வெட்டுச் சம்பவங்களும் கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றன. மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் பாடசாலை மாணவர்களும் ஈடுபடுகின்றனர். அத்துடன் போதைவஸ்துப பாவனையுத் அதகரித்து காணப்படகின்றது. கலாசார சீரழிவுகளும் இடம்பெற்றுவருகின்றன.மக்களை அச்சுறுத்தும் இத்தகைய சம்பவங்களை எவ்வாறு தடுப்பது? அதற்கான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதெனவும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கான நீண்டகால திட்டங்களை வகுப்பதென்றும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டில் இயங்கும் வாள்வெட்டுக் குழுக்களை கைதுசெய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்தச் சம்பவங்களின் பின்னணியில் இராணுவ உளவுப் பிரிவினரின் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஒரு பிரதிநிதி கூறினார். கடந்தவாரம் ரல்லாகம் நீதிமன்றத்தில் மட்டும் 4 வாள் வெட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 7 பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கலந்துயைாடலில் பங்கேற்ற சட்டத்தரணி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் மாணவர்கள் தவறான வழிகளுக்கு செல்வதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராயவேண்டுமெனவும் இளைஞர்கள் பிழையான வழிகளில் செல்வதற்கான காரணங்களைக் கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்றும் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
வாள்வெட்டு உட்பட குடாநாட்டில் இடம்பெறும் வன்முறைகளை உடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்வகையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள், பொலிஸமா அதிபர் ஆகியோரை சந்தித்து பேசுவதற்கு அவசர நடவடிக்கை குழுவொன்றும் தெரிவுசெய்யப்பட்டது. இந்தக்குழுவில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் உட்பட 9 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.
எதிர்காலத்தில் அரசியல் சார்பற்ற வகையில் வடக்கு மக்களின் நல் வாழ்வை கருத்தில்கொண்டு அமைப்பொன்றை ஆரம்பித்து செயற்படுவதற்கும் நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
R-06




