யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர பொதுவான நினைவுத்தூபிகள் அவசியம் : ஜே.வி.பி.
யுத்தத்தில் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களாகட்டும் இராணுவத்தினராகட்டும் பொதுமக்களாகட்டும் அனைவரையும் பொதுவாக நினைவு கூருவதற்கு பொதுவான “நினைவுத் தூபிகள்” வடக்கு கிழக்கு, தெற்கு என நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் நிர்மாணிக்கப்பட வேண் டும் என ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்நாயக்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற காணாமல்போனவர்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிமல் ரத்நாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் மேலும் உரையாற்றுகையில் யுத்தம் முடிவுற்ற மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்த தமது உறவுகளுக்கு விளக்கேற்றி நினைவு கூரும் போது வடக்கு, கிழக்கில் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.
எனவே, யுத்தத்தால் உயிரிழந்தவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களாகட்டும் இராணுவ உறுப்பினர்களாகட்டும் பொதுமக்களாகட்டும். இவர்கள் அனைவரையும் நினைவு கூர அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
எனவே, வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பொதுவான “நினைவுத் தூபிகள்” நிர்மாணிக்கப்பட வேண்டும். காணாமல் போனவர்களை பயன்படுத்தி அரசியல் செய்வதை அரசு கைவிட வேண்டும்.
உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். காணாமல்போனவர்களுக்கு ரூபா ஒரு இலட்சம் வழங்கப்படுவது மனித உயிரை அவர்களது குடும்பங்களை கொச்சைப்படுத்தும் செயலாகும். அத்தோடு யுத்தக் குற்ற விசாரணைகள் உட்பட மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு விசாரணைகள் நடத்தப்படுவது நாட்டின் இறையாண்மையை மீறுவதாக அமையாது என்றார்.
R-06




