யுத்தத்தில் உயிரிழந்த போராளிகள் , மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் : சபையில் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
யுத்தத்தினால் உயிர்நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து இந்த கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.சிவசக்தி ஆனந்தன் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று 2017 வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த சபையில் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்ட அவர், கடந்த ஆட்சியில் உயிர் நீத்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 30 வருட யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த பாராளுமன்றம் அனுமதி வழங்க வேண்டும் இது தவிர யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களுக்கு சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் அமைவாக நஷ்ட ஈடு வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக எனது மரியாதையை பாராளுமன்றத்தில் செலுத்துகிறேன் என்றார். நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கம் தமது உரிமைக்காக போராடும் சமுதாயத்தை அடக்க முயல்கிறது. சிங்கள, பௌத்த மேலாதிக்க சிந்தனையுடன் சிறுபான்மை மக்களை இரண்டாம் தரப்பாக நடத்த முயல்வதாக குற்றஞ்சாட்டிய அவர் எமது மக்களை ஏமாற்ற முயன்றால் மக்கள் வீதிக்கு இறக்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை தொடர்ந்து அடக்கி வைத்து இன நல்லிணக்கம் குறித்து பேசுவது நகைப்புக்குரியது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இதனை எப்படி மக்கள் நல் வரவு செலவுத்திட்டமாக கருத முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




