யுத்தம் தந்த கருக்கோள வடு
மருத்துவர்.சி.யமுனாநந்தா
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் எமது பிரதேசத்தில் வாழ்ந்த தாய்க்குலத்தினரில் கருக்கோளக வடுவினைப் பதியவைத்து உள்ளது. இது தொடர்பான பெண்நோயியல் சிறப்பு மருத்துவ ஆய்வும் பெண்நோயியல் சிகிச்சைக்கான பிரத்தியேக மருத்துவ விடுதி வசதிகளும் இன்றியமையாதவை ஆகின்றது. தாய்மைக்குரிய கருப்பம் தங்கும் கருப்பையினை தொன்மையான தமிழில் கருக்கோளம் என்பர். இக்கருக்கோளகம் (Uterine) குருதியில் உள்ள கானில் சுரப்புக்களின் (Hormones) செறிவினால் மாற்றமடையக்கூடியது.
ஒரு பெண் பூப்படைவதில் இருந்து கருக்கோளகத்தில் கானில் சுரப்புக்களின் தாக்கம் சந்திர மாதத்துடனாக மாறி மாறி வரும். நிலா தேய்வது போலும் வளர்வது போலும் கருக்கோளகத்தில் மாற்றங்கள் நிகழும். ஒரு பெண்ணை நிலவுக்கு ஒப்பிடுவதற்கு உடற்றொழிலியல் மாற்றமும் பூமி மாதாவின் மாற்றமும் பொருந்தும் உவமானநிலை இங்கு நோக்கத்தக்கது.
ஆயினும் அசாதாரண சூழல் மாற்றங்கள் இயற்கைக்கு மாறாக உடலில் தாக்கத்தை ஏற்படுத்;தும். மனிதனின் இயல்புக்கு ஒவ்வாத மனிதாபிமானமற்ற செயல்களே அசாதாரண சூழல் மாற்றங்களாகும். கோர யுத்தமும் அவ்வாறாக அசாதாரண மனித நேயமற்ற சூழல் மாற்றமாகும். அவற்றின் தாக்கங்கள் பெண்களின் கருக்கோளகத்தில் கணத்திற்கு கணம் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. யுத்தம் எனும் அசாதாரண சூழல் கருக்கோளகத்தில் ஏற்படுத்திய நீண்ட நாள் வடுக்களை நாம் தற்போது அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவற்றை நாம் சிறப்பான முறையில் எதிர்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பாக தற்போது 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் இத்தாக்கத்தின் தன்மைகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தாய்மை அடையாமை முதல் அசாதாரண குருதிப்பெருக்கம் வரை இதன் அறிகுறிகள் உள்ளன. பெண்களின் பெண்நோயில் தன்மைகளை உற்றுநோக்குமிடத்து அவர்களில் கடந்த 30 வருட காலத்தில் ஏற்பட்ட சமூகச்சூழல் பொருளியல் மாற்றங்களின் தாக்கங்கள் பாதித்துள்ளதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக போசாக்கு இன்மை, இரும்புச்சத்து குறைபாடு, கருத்தடை மருந்துகளின் பாவனை, வலிநீக்கி மருந்துகளின் கட்டுப்பாடற்ற பாவனை (NSAID) அவர்களின் பொதுவான ஆரோக்கியத்துடன் கருக்கோளகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உடலில் கானில் சுரப்புகளின் அளவும் மாதவிடாய்ச்சக்கர மாற்றங்களும் யுத்த நெருக்கீடுகளால் அசாதாரண நிலைக்கு மாற்றப்பட்ட தன்மை உள்ளது. இவை கருக்கோளக வடுக்களாக தற்போது அமைந்து உள்ளன.

கருக்கோளகத்தின் அசாதாரண தன்மைகளை மீஒலி காண்பிகளால் (Ultrasound scanning) கண்டறிந்து சிகிச்சை செய்யக்கூடிய வசதிகள் தற்போது உள்ளது. கருக்கோளகத் தசைகளில் கானில் சுரப்புகளின் அசாதாரண தூண்டல்களால் பல தசைக்கட்டிகள் உருவாகும் சந்தர்ப்பம் உள்ளது. இவை சாதாரண தசைக்கட்டிகளாகவோ புற்றுநோய்க் கட்டிகளாகவோ அமையலாம். அடுத்து கருக்கோளாக அகவணியிலும் அசாதாரண இளைய வளர்ச்சிகள் உருவாகக்கூடிய சூழல் உள்ளது. இவை சாதாரண சூழலில் வாழ்ந்த பெண்களைவிட சற்று வேறுபட்டுக் காணப்படும். இவை தொடர்பாக பெண்நோயியல் மருத்து ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது. கருக்கோளக புற்றுநோய்களின் ஏதுநிலைக்கும் காரணமாக அமைந்தும் இருக்கலாம்.
பெண்களில் ஏற்படும் நோய்நிலையான தீட்டுப்போதல் குருதிப் பெருக்குகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது உடனடி அவலத்தை மட்டும் நிவர்த்தி செய்யாது அது தொடர்பான முற்காப்பு நடவடிக்கைகளிலும் நாம் முன் முயற்சி செய்தல் வேண்டும்.
நவீன மருத்துவவசதிகள் குறிப்பாக காந்தப்பரிவதிர்வு காண்பிகள் (MRI) கருக்கோளக அகக்காண்பிகள் (Endoscopy) என்பன பெண்நோயியல் நோய்நிலைகளைக் கண்டறிய உதவும். கருக்கோளத்தில் அபரிமித குருதிப்பெருக்கு நிகழும்போது குருதிக் குழாய்களில் குருதியை நேரடியாக உறையவைப்பதன்மூலம் கட்டுப்படுத்தல் என்பனவற்றை மேற்கொள்ளலாம். இவ்வாறு நவீன மருத்துவ வசதிகள் உடைய பெண்நோயியல் மருத்துவ விடுதி அமைத்தல் எம்மன்னையர்களுக்கு நாம் வழங்கும் சுகநலன்களை வலுவூட்டும். காரணம் அறியாது காரிருளிலேயே காவு கொள்ளப்படும் காரிகைகள் வாழ்வு தவிர்க்கப்பட, நுண்மாண்புல அணுகுமுறை போர்வடுமிக்க சமூகத்தில் பெண்நோயியலில் தேவை ஆகும்.




