யூலை வன்முறைகளை நினைவுகூர்வதன் அரசியல் பெறுமதி என்ன?
யதீந்திரா
1983ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சிங்கள வன்முறைகள் ஆண்டு தோறும் நினைவு கூறப்படுகின்றன. அரசியல் கட்சிகள் ஒரு புறமும், சிவில் சமூக குழுக்கள் ஒரு புறமுமாகவும் இவ்வாறான நினiவு கூரல்களை செய்து வருகின்றனர். இவ்வாறான நினைவு கூரல்கள் வெறுமனே ஒரு தமிழ் அரசியல் சம்பிரதாயமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன. உண்மையில் இவ்வாறான நினைவு கூரல்களின் அரசியல் பெறுமதி என்ன? அரசியல் பெறுமதி ஒன்றை இலக்காகக் கொண்டு இவ்வாறான நினைவு கூரல்கள் இடம்பெறுகின்றனவா? இவ்வாறான நினiவு கூரல்களின் எடுக்கப்படும் உறுதி மொழிகள் என்ன? அவ்வாறு ஏதேனும் உறுதிமொழிகள் இதற்கு முன்னால் எடுக்கப்பட்டிருக்கின்றனவா? அவ்வாறு எடுக்கப்பட்ட உறுதி மொழிகள் ஏதேனும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா? இதற்கான பதில்களை முன்வைக்கும் வல்லமையோடு எவரேனும் தமிழ் பரப்பில் இருக்கின்றனரா?
உண்மையில் 1983-யூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகளும் அதனால் இடம்பெற்ற படுகொலைகளும் தமிழ் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பெரும்தொகையான தமிழ் இளைஞர்களை ஆயுத விடுதலை இயக்கங்களில் இணைந்துகொண்டனர். இதன் காரணமாகவே அயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. இதன் காரணமாகவே மக்கள் மத்தியில் அதற்கு அதிகமான ஆதரவும் பெருகியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்தியாவும் இலங்கை பிரச்சினையில் நேரடியாக தலையீடு செய்தது. அந்த நேரத்தில் இது பற்றி அப்போதைய இந்தியப் பிரதமரும், இலங்கையின் மீதான இந்தியத் தலையீட்டுக்கான அஸ்திபாரத்தை போட்டவருமான இந்திராகாந்தி அம்மையார், இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஆறு கோடி தமிழ் மக்களை கொண்டிருக்கும் இந்தியா, இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் அமைதியாக இருக்க முடியாது. இந்தியா தனது நலன்களுக்காக தலையீடு செய்யது என்பதெல்லாம் ஒரு அரசியல் வாதத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் அவ்வாறு தலையீடு செய்வதற்கான புறச் சூழலை இலங்கையின் உள்ளக நிலைமைகள்தான் உருவாக்கிக்கொடுத்திருந்தது. 1983இல் அவ்வாறானதொரு இன வன்முறைகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படாது விட்டிருந்தால், அப்போதிருந்த தமிழ் இளம் தலைமுறை ஒரு கூட்டுக் காயத்தை உணர்ந்திருக்காது – அவ்வாறான கூட்டுக் காயத்தை உணராதுவிட்டிருந்தால், ஆயுத இயக்கங்கள் சடுதியாக பெருத்திருக்காது. அவ்வாறு பெருத்திருக்காது விட்டால், இவர்களை அயுத ரீதியாக பலப்படுத்துவதன் மூலம் கொழும்மை வழிக்கொண்டுவரும் வழிமுறை தொடர்பில் இந்தியாவும் சிந்தித்திருக்காது. இந்த பின்புலத்தில் சிந்தித்தால், 83இன் பின்னர் இடம்பெற்ற தமிழ் அரசியல் எழுச்சி என்பதே, 83இல் ஏற்பட்ட கூட்டுக் காயத்தின், கூட்டு எழுச்சியின் விளைவுதான். அவ்வாறான ஒன்றுதான் இப்போது வெறும் சடங்காக பேணப்படுகிறது.
83இன் கூட்டு காயங்களால் எழுச்சிபெற்ற இயக்க அரசியலானது, பல்வேறு ஆயுத இயங்கங்களின் வழி வெளிப்பட்டு, பின்னர் ஒரேயொரு இயக்கமாக பரிணமித்து, இறுதியில் முள்ளிவாய்க்காலில் வீழ்சிகண்டது. இந்த அடிப்படையில் நோக்கினால், 2009இற்கு முன்னர் இவ்வாறான நினைவு கூரல்களின் பெறுமதி என்பதும், 2009இற்கு பின்னர் இடம்பெறும் நினைவு கூரல்களின் பெறுமதியும் ஒன்றல்ல. 2009இற்கு முன்னர் இருந்த அரசியல் சூழலில் இது போன்ற நினைவு கூரல்கள் ஒரு பழிவாங்கும் உணர்வை பேணிப்பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது. அதாவது, சிங்கள தரப்பால் இழைக்கப்பட்ட அநிதீகள் அனைத்துக்கும் ஒரே பதில், சிங்கள அரசை நிலைகுலையச் செய்து, தமிழர்களுக்கான அரசு ஒன்றை நிறுவுவது. அதில் விடுதலைப் புலிகள் தோல்வியடைந்த பின்னர், பின்னர் அந்த நிலைப்பாட்டை முன்னெடுக்கக் கூடிய கட்சிகள் ஏதாவது வடக்கு கிழக்கில் இருக்கின்றனவா? அவ்வாறானவர்கள் இல்லாதபோது, இவ்வாறான நினைவு கூரல்கள் எதனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்றன?

2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் என்பதை ஒரு வரியில் சொல்வதானால், அது வெறுமனே பழசை அசைபோடும் அரசியல்தான். பழசை அசைபோடுவதற்கு அப்பால் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்தாக்கம்மிக்க, தந்திரோபாயம் சார்ந்த முடிவுகளை எடுத்து, அதில் உறுதியுடன் பயணிக்கக் கூடிய எந்தவொரு முயற்சியையும் தமிழ் சூழலில் காணமுடியவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இவ்வாறான அசைபோடும் அரசியலில், கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களும், சிவில் சமூக குழுக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் என்போர் மட்டுமே பங்குகொள்கின்றனர். மக்கள் கூட்டத்தின் ஒரு பெரும்பகுதிக்கும் இவ்வாறான அசைபோடல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. யுத்தம் நிறைவுற்று பத்து வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் கூட, வடக்கு கிழக்கு தழுவி – அரசுசாரா நிறுவனங்களின் நிதியில் கைநனைக்காத ஒரு வலுவான சிவில் சமூகத்தை, ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியவில்லை. கூட்டமைப்பை பதிவு செய்து, அதனை ஒரு வலுவான தமிழ் தேசிய கட்சியாக கட்டியெழுப்ப வேண்டும் என்னும் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கூட்டமைப்பின் தலைமையின் மீது எவராலும் அழுத்தங்களை பிரயோகித்து, வெல்ல முடியவில்லை. அது முடியாத போதுதான் கூட்டமைப்பிற்கு ஒரு வலுவான மாற்றை ஏற்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் சிலருக்குள் ஏற்பட்டது. இந்த எண்ணங்கள் ஒருங்கிணைந்து ஒரு மாற்றை உருவாக்கலாம் என்று நம்பிய போதும் அது இன்றுவரை சாத்தியப்படவில்லை. இந்த சந்தர்ப்பத்திலும் மாற்று ஒன்றுக்குள் வரக் கூடியவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து, அவர்களை ஒரு கூட்டுக்குள் கொண்டுவரச் செய்வதில் வெற்றிபெற முடியவில்லை. கடந்த பத்து வருடங்களில் ஜெனிவா நோக்கியும், அவ்வப்போது இலங்கைக்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளுக்கு வழங்கிய விளக்கங்களும் எந்தவொரு அறுவடையையும் கொண்டு வரவில்லை. அவ்வாறாயின் வெறுமனே அசைபோடும் அரசியலின் இலக்குத்தான் என்ன?
2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் தனது தெளிவான இலக்கை இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதுதான் உண்மை. நமது இலக்கு என்ன என்பதை தீர்மானிக்க முடியாமல் இருப்பதால்தான், தடுமாற்றங்களும், வசைபாடல்களும் பழைய கதைகளை சொல்லி மகிழ்தலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வீழ்சியுற்றிருக்கும் ஒரு சமூதாயத்தில் பழைய கதைகள் என்பது படிப்பினைகளாக இருக்க வேண்டுமேயன்றி, முன்னோக்கி பயணிப்பதற்கு தடையாக இருக்கக் கூடாது. முன்னோக்கிப் பயணிப்பதற்கு எதெல்லாம் தடையாக இருக்கின்றனதோ – எவரெல்லாம் தடையாக இருக்கின்றாரோ அவையெல்லாம், அரசியலில் பிற்போக்கான அம்சங்கள்தான். எனவே அரசியலை பொறுத்தவரையில் முற்போக்கு பிற்போக்கு என்பதெல்லாம் குறிப்பிட்ட சூ10ழ்நிலைகைளை கையாளுவதற்கானதே அன்றி நிரந்தரமானவைகள் அல்ல.

எனவே 36 வருடங்களுக்கு பின்னர் அன்று இடம்பெற்ற யூலை வன்முறைகளை நினைக்கும் போது, வெறுமனே நினைவுகூர்தலுக்கு அப்பால், எவ்வாறு முன்னோக்கி பயணிப்பது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. வெறுமனே சுலோங்களில் சுகம் காணும் நிலையை கடந்து, முன்னோக்கி பயணிப்பதற்கான வாய்புக்களையும், அந்த வாய்ப்புக்களை பற்றிப் பிடிப்பதற்கான தடைகளை இனம் காண்பதும், அவ்வாறு இனம் காணும் தடைக் காரணிகள் மீது கர்ணகடூர விமர்சனங்களை முன்வைக்கப்பதும்தான் இப்போதைக்கு தேவையானது. எனவே இந்த யூலை நினைவு கூரலின் போது, இப்படியான உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வது தொடர்பில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் சிந்திப்பதே இன்று அவசியமானது. அரசியல் என்பது சத்தியத்தின் பாதை அல்ல மாறாக, அது சாத்தியத்தின் பாதை என்பதை உணர்வதன் ஊடாக, எவ்வாறு முன்னோக்கி பயணிக்கலாம் என்பதற்கு இவ்வாறான நினைவுகூரல்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்லாவிட்டால் இவ்வாறான நினைவு கூரல்கள் வெறும் அசைபோடல்களாக சுரூக்கிவிடலாம்.




