ரணிலிடம் வசப்படாமல் இருந்துவரும் ஜனாதிபதி பதவி
வீரகத்தி தனபாலசிங்கம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தொடர்ச்சியாக 40 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார்.1977 ஜூலை பொதுத்தேர்தலில் கொழும்புக்கு வெளியே பியகம தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தனது 28 வயதில் முதன் முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான அவர், அதற்குப் பிறகு நடைபெற்ற சகல பொதுத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று வந்திருக்கிறார். இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான காலஞ்சென்ற மைத்திரிபால சேனநாயக்கவுக்கு அடுத்ததாக தொடர்ச்சியாக 40 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்திருப்பவர் விக்கிரமசிங்க.1947 ஆகஸ்ட்/செப்டெம்பரில் நடைபெற்ற இலங்கையின் முதல் பாராளுமன்றத் தேர்தலில் மதவாச்சி தொகுதியில் இருந்து தெரிவான சேனநாயக்க 1994 வரை 47 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1977 ஜூலை பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பங்கு ஆசனங்களைக் கைப்பற்றி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அந்தப் பாராளுமன்றம் ஆகஸ்ட் 4 ஆம் திகதியே முதன் முதலாகக் கூடியது. அன்று பாராளுமன்றப்பிரவேசத்தைச் செய்த விக்கிரமசிங்க நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையுடன் இடையறாத நான்கு தசாப்தகால பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார். அதை முன்னிட்டு அன்றைய தினம் அவரைக் கௌரவிக்குமுகமாக விசேட அமர்வொன்றையும் பாராளுமன்றம் நடத்தியது.

தனது தயார் நளினி மற்றும் தந்தை எஸ்மொண்ட் ஆகியோருடன் ரணில்
பிரதமர் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து பாராளுமன்றத்துக்கு 40 வருடங்களுக்கு முன்னர் தெரிவானவர்களில் இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தற்போதைய தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவரான காமினி ஜெயவிக்கிரம பெரேராவும் தான். அன்று தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் திருகோணமலை தொகுதியில் சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை , ஜெயவிக்கிரம பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் குருநாகல் தொகுதியிலிருந்து தெரிவானார். ஆனால் , இருவரும் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடியதாக இருக்கவில்லை. 1983 கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையைச் சட்டவிரோதமானதாகப் பிரகடனம் செய்து ஜெயவர்தன அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 6 வது திருத்தச் சட்டத்தையடுத்து சம்பந்தன் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கவேண்டியதாயிற்று. ஜெயவிக்கிரம பெரேராவைப் பொறுத்தவரை, 1988 ஏப்ரிலில் முதன்முதலாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டபோது வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அவரை நிறுத்தத் தீர்மானித்ததால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவேண்டியேற்பட்டது.
பிரதமர் விக்கிரமசிங்க பாராளுமன்றப் பிரவேசத்தைச்செய்த பிறகு இதுவரையில் 7 பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஜெயவர்தன அரசாங்கம் கொண்டுவந்த 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் தொகுதிவாரி தேர்தல் முறை இல்லாமல் செய்யப்பட்டு மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தேர்தல்முறையின் கீழான முதல் பாராளுமன்றத் தேர்தல் ஜனாதிபதியாக பிரேமதாச தெரிவுசெய்யப்பட்டு இரு மாதங்கள் கடந்து 1989 பெப்ரவரியில் நடத்தப்பட்டது.அதுவரையில் 1977 ஜூலையில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றமே 11 வருடங்களாக நீடித்தது. ஜனாதிபதி ஜெயவர்தன தனது ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த அந்தப் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்கள் நீடிப்பதற்காக முன்னென்றுமில்லாத முறைகேடுகளுக்கு மத்தியில் சர்வஜனவாக்கெடுப்பொன்றை நடத்தினார். 1978 அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு முன்னதாக பிரதமராக இருந்த வேளையில் ஜெயவர்தன 1972 அரசியலமைப்பில் திருத்தமொன்றைச் செய்து ஜனாதிபதியாகிக் கொண்டார். 1978 பெப்ரவரி 4இல் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட அவர் தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே நாட்டின் முதன் முதலான ஜனாதிபதி தேர்தலை 1982 அக்டோபரில் நடத்தினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான திருமதி சிறிமா பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மிகவும் கடுமையாக பலவீனப்பட்டிருந்தன. தன்னை எதிர்த்துப் போட்டியிட எதிரணியினால் பலமான ஒரு வேட்பாளரைக் களமிறக்கமுடியாத சூழ்நிலையை உறுதிசெய்துகொண்டே தேர்தலை நடத்தி ஜெயவர்தன வெற்றிபெற்றார். ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு இருமாதங்கள் கடந்த நிலையில் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை 1988அக்டோபரில் வெளியிட்ட ஜெயவர்தன பாராளுமன்றத்தையும் கலைத்தார். பிரதமர் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக நான்கு தசாப்தங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறாரென்றால் அதில் 6 வருடங்கள் சர்வஜனவாக்கெடுப்பின் மூலமாக நீடிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் ஆயுட்காலமாகும்.பிறகு நடைபெற்ற சகல பாராளுமன்றத்தேர்தல்களுமே விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் நடந்தவையே. அந்தத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படாமல் பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையே தொடர்ந்தும் நடைமுறையில் இருந்திருந்தால் பிரதமர் விக்கிரமசிங்கவினால் இந்த ’40 வருட சாதனையை’ நிகழ்த்திக்காட்ட முடிந்திருக்குமோ தெரியவில்லை.
நாட்டில் கூடுதல் வாக்காளர்களின் ஆதரவைக்கொண்ட தனிக்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே நீண்டகாலமாக விளங்கி வந்திருக்கிறது.1956 பொதுத் தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைத்தபோதிலும், வெறுமனே 8 ஆசனங்களிலேயே வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகக்கூட வரமுடியாமல் போன ஐக்கிய தேசியக் கட்சி நாடு பூராவும் கூடுதல் வாக்குகளைப்பெற்றது.சுதந்திரக்கட்சி பண்டாரநாயக்க காலத்திலும் சரி பிறகும் சரி இடதுசாரிக் கட்சிகள் உட்பட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்ததே முன்னைய வரலாறாகும். கூடுதல் வாக்குப்பலத்தைக் கொண்ட தனிக்கட்சியென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தகுதியை அடிப்படையாகக் கொண்டே விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தவேண்டுமென்ற சிந்தனை ஜெயவர்தனவுக்குப் பிறந்திருக்கவேண்டும். அந்தத் தேர்தல் முறையின் கீழ் எந்தக்கட்சியுமே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது என்றும் எப்போதுமே ஐக்கிய தேசியக் கட்சியே பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைப் பெறக்கூடிய தனிக்கட்சியாக விளங்கும் என்றும் ஜெயவர்தன நம்பியிருக்ககூடும் ஆனால், இப்போது பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி அத்தகைய செல்வாக்குடன் இல்லை என்பதே உண்மையாகும். கூடுதலான வாக்குப்பலத்தை கொண்ட தனிக்கட்சியென்று அக்கட்சியை இப்போது கூறமுடியாது.ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தை விக்கிரமசிங்க 1994 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 23 வருடங்களாக அவர் தலைவராக இருக்கிறார்.அந்தக் கட்சியின் முன்னைய தலைவர்களில் எவருமே இவரைப் போன்று நீண்டகாலம் தலைமைப் பொறுப்பில் இருந்ததில்லை என்கிற அதேவேளை , இவரின் கீழ் நீண்டகாலம் எதிர்க்கட்சியாக இருந்ததைப் போன்று வேறு எந்தத் தலைவரின் காலத்திலும் இருந்ததுமில்லை. இலங்கையில் நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அரசியல் வாதியென்றால் அது விக்கிரமசிங்க தான். முன்னைய எந்தவொரு தலைவருமே விக்கிரமசிங்க எதிர்நோக்கவேண்டியிருந்ததைப் போன்று உட்கட்சிக் கிளர்ச்சியை எதிர்நோக்கியதுமில்லை.
தனது நெருங்கிய உறவினரான ஜெயவர்தனவைப் போன்றே விக்கிரமசிங்கவும் சூழ்ச்சித்திறன் கொண்டவர் என்று விமர்சிக்கப்படுகின்ற அதேவேளை ‘முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கவுடனும் ஒப்பிடப்படுவதுண்டு. சுதேச உடைகளை அணிவதன் மூலமாக தங்களைத் தேசியவாதிகள் என்று காட்சிப்படுத்துவதில் அக்கறை காட்டாதவர்களாக சேனநாயக்கவையும் விக்கிரமசிங்கவையும் நோக்க முடியும். இலங்கையின் இரண்டாவது பிரதமரான டட்லி தனது அரசாங்கத்துக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டபோது பிரதமர் பதவியையும் கட்சித் தலைமைத்துவத்தையும் துறந்து அரசியலில் இருந்தே ஒரு கட்டத்தில் ஒதுங்கியிருந்தார். ஆனால், நெருக்கடிகள் தோன்றியவேளைகளில் உணர்ச்சி வசப்பட்டுக் கொந்தளிக்காமல் – பதற்றப்படாமல் அமைதியாக இருந்து தனது வியூகங்களை வகுத்துச் செயற்படுவதில் ஜெயவர்தனவின் பாணியைப் பின்பற்றுபவராக விக்கிரமசிங்க விளங்குகிறார்.
ஜெயவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வருவதற்கு நீண்டகாலம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருந்தது. டட்லி சேனாநாயக்கவின் மரணத்தையடுத்து 1973ஆம் ஆண்டில் தனது 67ஆவது வயதிலேயே அவர் கட்சியின் தலைவராக வர முடிந்தது. 71 வயதிலேயே அவர் பிரதமராக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். ஆனால், விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை 45 வயதிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகக் கூடியதாக இருந்தது. காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி போன்றவர்கள் பிரேமதாசவுடன் முரண்பட்டுக்கொண்டு கட்சியில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் விக்கிரமசிங்கவினால் இவ்வாறு மிக இளவயதில் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. பிரேமதாசவின் மரணத்தையடுத்து மீண்டும் காமினி திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிறகு 1994 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சந்திரிகா தலைமையிலான பொதுஜன முன்னணி அரசாங்கத்தை அமைத்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு காமினி திசாநாயக்கவுடன் போட்டியிட்ட விக்கிரமசிங்க இரு வாக்குகளினால் தோல்வியடைந்தார். பிறகு திசாநாயக்கவின் மரணத்துக்குப் பிறகே அவர் கட்சியின் தலைவரானார்.
டட்லி சேனநாயக்க மூன்று தடவைகள் பிரதமராக இருந்தார். விக்கிரமசிங்க நான்கு தடவைகள் பிரதமரானார். ஆனால், ஒரு வேறுபாடு. டட்லி காலத்தில் இருந்ததைப் போலன்றி இவரின் காலத்தில் பிரதமர் பதவி அதிகாரமுடையதாக இல்லை. . என்றாலும் இவர் பிரதமராக செயற்படுகின்றபோது அந்தப் பதவி அதிகாரம் கொண்டதான தோற்றப்பாட்டை எடுக்கக்கூடியதாக விளங்குகிறது என்பது உண்மையே.

ஜே ஆர், பிரேமதாஸ மற்றும் ரணில்
ஜனாதிபதி பிரேமதாசவின் மரணத்தையடுத்து அன்று பிரதமராக இருந்த டீ.பி.விஜேதுங்க ஜனாதியாகியபோது விக்கிரமசிங்கவிடம் முதல் தடவையாக பிரதமர் பதவி வந்தது. 1993 மே 7 தொடக்கம் 1994 ஆகஸ்ட் 19 வரை அவர் பிரதமராக பதவி வகித்தார். பிறகு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் 2001டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதையடுத்து அரசாங்கத்தை அமைத்தபோது இரண்டாவது தடவையாக விக்கிரமசிங்க 2001 டிசம்பர் 9 தொடக்கம் 2004 ஏப்ரல் 6 வரை பிரதமராக இருந்தார். அடுத்து 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்ற உடனடியாக விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். அடுத்து 7 மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 17 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களைக் கைப்பற்றியதையடுத்து ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் விக்கிரமசிங்க பதவியேற்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னென்றுமில்லாத வகையில் இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து அமைத்திருக்கும் இந்த அரசாங்கம் பல்வேறு வகையான அரசியல் மாச்சரியங்களுக்கு மத்தியிலும் இரு வருடங்களாகப் பதவியில் இருந்துவருகின்றது. இதில் நடைமுறையில் ஜனாதிபதியும் பிரதமரும் புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுகின்ற இரு அதிகார மையங்களாக விளங்குகிறார்கள். இந்தக் கட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தொடர்ச்சியாக 40 வருடங்களை விக்கிரமசிங்க நிறைவு செய்திருக்கிறார்.
எது எவ்வாறிருந்தாலும் , நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி விக்கிரமசிங்கவுக்கு வசப்படாததாகவே இருந்து வருகிறது. அவர் முதற்தடவையாக 1999 டிசம்பர் ஜனாதிபதி தேர்தலில; போட்டியிட்டார். ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக நடத்திய அத்தேர்தலில் அவர் தனக்கு முன்னர் இருந்த மக்கள் செல்வாக்கை கணிசமானளவுக்கு இழந்திருந்தாலும் விக்கிரமசிங்கவினால் அவரை தோற்கடிக்கக் கூடியதாக இருக்கவில்லை. கொழும்பு நகர மண்டப மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்பிரசாரக்கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் திருமதி குமாரதுங்க படுகாயமடைந்ததால் இறுதி நேரத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய அனுதாப அலை அவருக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாக 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்டியிட்டார். 2001–2004 காலகட்டத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலை புலிகள் இயக்கத்துடன் போர் நிறுத்த உடன்படிக்கையைச் செய்துகொண்டு விக்கிரமசிங்க நிருவாகம் முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பிரசாரங்களையே ராஜபக் ஷ முன்னெடுத்திருந்தார். வாக்களிப்பு தினத்தன்று வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களை வாக்களிக்க விடாமல் விடுதலைப்புலிகள் தடுத்த காரணத்தினால், அங்கு 1.2 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்த சுமார் 7 இலட்சம் வாக்காளர்களில் அரைவாசிப்பேர் வாக்களித்திருந்தாலும் கூட, ராஜபக் ஷ வெற்றி பெறவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. ஏனென்றால், அவர் 28 ஆயிரம் வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் வெற்றி பெறுவதற்கு அவசியமான 50 சதவீதத்தை அவரால் எட்டியிருக்க முடியாது போயிருக்கும். ராஜபக் ஷவுக்கு 50.2 சதவீத வாக்குகளும் விக்கிரமசிங்கவுக்கு 48.4 சதவீதவாக்குகளும் கிடைத்திருந்தன.
தனது தோல்விக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று விக்கிரமசிங்க இன்றும் கூட அடிக்கடி கூறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறாக அவர் நிச்சயமாக வெற்றி பெறுவதற்கிருந்த வாய்ப்பு தவறிப்போனது.அதற்குப்பிறகு ஜனாதிபதி ராஜபக் ஷவின் அரசாங்கம் போரை முழு மூச்சாக முன்னெடுத்து விடுதலை புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தது. அதன் காரணத்தினால் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குக்கொண்ட அரசியல் தலைவராக ராஜபக் ஷ விளங்குகிறார். போர் வெற்றியின் விளைவான அந்தச் செல்வாக்கிற்கு முன்னால் அவருடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது புத்திசாலித்தனமான காரியமல்ல என்பதை உணர்ந்த விக்கிரமசிங்க 2010 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தார். மீண்டும் ராஜபக் ஷவே பெரும் வெற்றி பெற்றார்.
பொன்சேகாவின் தோல்வி பற்றி விக்கிரமசிங்க கவலைப்பட்டிருக்க மாட்டார். மீண்டும் ராஜபக் ஷவிடம் தோல்வி காணும் அபகீர்த்தியிலிருந்து தான் தப்பித்துக் கொண்டதாக அவர் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்.
அதற்குப்பிறகு அரசியலமைப்புக்கு திருத்தமொன்றைக் கொண்டு வந்து ஒரு ஜனாதிபதிக்கு இருந்த இரு பதவிக்கால மட்டுப்பாட்டை நீக்கிய ராஜபக் ஷ தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரு வருடங்கள் முன்னதாக 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். அந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதை தவிர்த்துக் கொண்ட விக்கிரமசிங்க எதிரணியின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்கத் தயங்கவில்லை. சிறிசேனவின் வெற்றியையடுத்து பிரதமராக இருந்துவரும் அவர் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியம் பற்றி எதுவும் பேசுகிறார் இல்லை. அவ்வாறு பேசாமல் இருப்பது அவருக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அடைய வேண்டுமென்ற குறிக்கோள் இப்போது இல்லை என்று அர்த்தப்பட்டுவிடாது.
ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக் கோரிக்கைக்கு ஒருபோதும் மானசீகமான ஆதரவை வழங்கியது கிடையாது. ஜனாதிபதி தேர்தலில் தன்னால் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலைகளின் கீழ் எதிரணியின் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட வேளைகளில் தான் ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக்கு ஆதரவானவராக விக்கிரமசிங்க தன்னைக் காட்டிக்கொண்டு வந்திருக்கிறார். ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்ற முடியாமல் போகுமேயானால் பிரதமர் என்றைக்கும் கவலைப்படப்போவதில்லை. தற்போதுள்ள அரசியல் சூழ்நி.ைலயின் விசித்திரம் என்னவென்றால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சுதந்திரக்கட்சி இன்று அந்த ஆட்சி முறையை உறுதியாக ஆதரித்து நிற்கின்ற கட்சியாக மாறியிருப்பதுதான்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குகளும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளும்தான். அவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சி வாக்குகளினால் பதவிக்கு வந்த சிறிசேனவை சுதந்திரக்கட்சியின் அரசியல்வாதிகள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்று கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கின்ற அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி அரசியல்வாதிகள் பிரதமர் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது குறித்து அழுத்தம் திருத்தமாக எதையும் கூறுவதில்லை.
தேர்தலில் வெற்றி பெற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்ற உடனடியாகவே இனியொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பிரகடனம் செய்த சிறிசேன தன்னை மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பது குறித்து தனது கட்சியினர் பேசும்போது மறுத்து எதையும் பேசாமல மௌனம் சாதித்து வருகிறார்.
ஆனால் கடந்த வாரம் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் விக்கிரமசிங்கவிடம் 2020 ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.
“இந்த விவகாரம் தொடர்பில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.. ஜனாதிபதி ஆட்சி முறையை தொடருவதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எம்மால் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை இம்மாத பிற்பகுதியில் வெளியிடப்படும். எமது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய தருணம் இது. நாம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டியிருக்கிறது.அதைச் செய்யாமல் 2020 தேர்தல் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.”




