ராஜதந்திரிகளின் எல்லையை புரிந்துகொள்ளுதல்
யதீந்திரா
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தது ஒரு ஆச்சரியமென்றால், அடுத்த ஆச்சரியம் அவரது காலநிலை ஆலோசகராக நோர்வேயின் சமாதான ஒருங்கிணைப்பாளர், எரிக் சொல்கெய்ம், நியமிக்கப்பட்டிருப்பதாகும். மீண்டும், சொல்கெய்ம், இலங்கைக்குள் பிரவேசித்திருக்கின்றார். நோர்வேஜிய ராஜதந்திரியும் அரசியல்வாதியுமான எரிக் சொல்கெய்ம், 2000ஆம் ஆண்டு, நோர்வே வெளிவிவகார அமைச்சின் விசேட ஆலோசகராக இணைந்து கொள்வதற்காக, தனது அரசியல் வாழ்விவிருந்து வெளியேறினார். இந்த பின்புலத்தில்தான், இலங்கையின் சமாதா முன்னெடுப்புக்களில் எரிக் சொல்கெய்மின் பிரவேசம் நிகழ்ந்தது. நோர்வேயின் அனுசரனையில் இடம்பெற்ற 2002 – 2005 வரையிலான, சமாதான முன்னெடுப்புக்களில் சொல்கெய்ம் பிரதான செயற்பாட்டாளராக பணியாற்றியிருந்தார். 2005, ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, சொல்கெய்ம், மீளவும் நோர்வேயின் அரசியலுக்கு திரும்பினார்.
2001இல், அமெரிக்க இரட்டைக் கோபுரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, ஆயுத விடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கான சாவுமணியானது. அமெரிக்கா பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை பிரகடணப்படுத்தியது. குறித்த கொள்கையானது, அரசுக்கு வெளியில் நிறுவனமயப்பட்டிருக்கும் ஆயுத அமைப்புக்கள் அனைத்தையும் பயங்கரவாதமென்னும், ஒரு சொல்லின் மூலம், அழிப்பதற்கான வாய்ப்பை அரசுகளுக்கு வழங்கியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு முயற்சிகளுக்கு பச்சை கொடி காண்பித்தது.
2002இல், இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி, வெற்றிபெற்றதை தொடர்ந்து, சமாதான முன்னெடுப்புக்களை முன்னெடுப்பதற்கான சூழல் கனிந்தது. இத்துடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றுவிடுமென்னும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் பரவலடைந்தது. எனினும் சமாதான முன்னெடுப்புக்கள் தங்களுக்கான பொறியாக மாறுவதாக கருதிய, விடுதலைப் புலிகள் அமைப்பு, நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்களிலிருந்து, வெளியேறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியது.
ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து, நோர்வேயின் சமாதான முன்னெடுப்பை எதிர்க்கும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதன் ஊடாக, இந்தப் பொறியிலிருந்து வெளியேற முடியுமென்று புலிகள் கணக்கிட்டனர். ரணில் விக்கிரமசிங்க அடிப்படையில் ஒரு ஜனவசியமுள்ள சிங்கள தலைவர் அல்ல. ரணில் வெற்றிபெற வேண்டுமென்றால், அவருக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு கட்டாயம் தேவை. இந்த விடயத்தை துல்லியமாக கணித்துக் கொண்ட, விடுதலைப் புலிகளின் தலைமை, தமிழ் மக்களின் வாக்குகள், ரணிலுக்கு செல்வதை தடுப்பதன் ஊடாக, அவரை தோற்கடிக்க முடியுமென்று கணக்கிட்டது. அந்தக் கணக்கில் வெற்றியும் பெற்றது. ரணில் விக்கிரமசிங்க தேர்தல் தோல்வியடைந்ததை தொடர்ந்து, நோர்வேயின் சமாதான முன்னெப்புக்களுக்கான கதவும் மூடப்பட்டது. புலிகள் தோற்கடித்தது ரணில் விக்கிரமசிங்கவை மட்டுமல்ல எரிக் சொல்கெய்மையும்தான்.
1987, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஒரு பொறியாக கருதிய, விடுதலைப் புலிகள் அமைப்பு, அதிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சியில், பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்து, இந்திய படைகளை எதிர்த்தது. இந்திய படைகளை வெளியேற்றும் முயற்சியில் வெற்றியும்பெற்றது. அதே உக்தியைத்தான் இங்கும் பயன்படுத்தியது. நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்களிலிருந்து வெளியேறுவதற்காக, மகிந்தராஜபக்சவின் வெற்றியை ஊக்குவித்து, நோர்வேயை வெளியேற்றியது. ஆனால் காலம் பின்னர் கற்றுத்தந்த பாடமோ முற்றிலும் வேறானது. அதாவது, விடுதலைப் புலிகள் மற்றவர்களை வெளியேற்றுவதில் வெற்றிபெற்றுவிட்டதாக எண்ணிய இரண்டு சந்தர்ப்பங்களிலும், உண்மையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அரசியலில் தனித்துவிடப்பட்டது, விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமேயாகும். பிரேமதாச – புலிகள் உடன்பாட்டின் மூலம் புலிகள் இந்தியாவின் அனுதாபத்தை முற்றிலுமாக இழந்துபோயினர். ரணிலை தோற்கடிக்கும் திட்டத்தின் மூலம், மேற்குலகின் அனுதாபத்தை முற்றிலுமாக இழந்து போயினர். இந்த பின்புலத்தில்தான் புலிகள் இயக்கம் முற்றுப்பெற்றது.
சொல்கெய்ம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மட்டும் ஆலோசகராக நியமிக்கப்படவில்லை. அவர் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டுள்ள காலநிலை பேரவைக்கான ஆலோசகராகவும் இருக்கின்றார். சொல்கெய்மால் எப்படி எதிரும் புதிருமான இரண்டு அரசியல் கூூழலில் பணியாற்ற முடிகின்றது. அல்லது எதிரும் புதிருமென்று நாங்கள்தான் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றோமா – அல்லது, ராஜதந்திரிகளின் எல்லையை எங்களால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையா?
தமிழ்ச் சூழலில், சொல்கெய்ம் தொடர்பில் பலவாறான அப்பிராயங்கள் உண்டு. அவர் தமிழ் மக்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லையென்றும், இறுதி யுத்தத்தின் போது, நோர்வே காத்திரமான தலையீடுகளை செய்யவில்லையென்று கூறுவோர் இப்போதுமுண்டு. சிங்களவர்கள் மத்தியிலும் சொல்கெய்ம் தொடர்பில் மாறுபட்ட அபிப்பிராயங்களுண்டு. சொல்கெய்மை புலிகளின் ஆதரவாளரென்று கூறும் சிங்கள கடும்போக்காளர்கள் உண்டு.
சொல்கெய்ம் போன்ற ராஜதந்திரிகளின் எல்லையை சரியாக புரிந்துகொண்டால், இவ்வாறான வாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அவசியமிருக்காது. யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களுக்களும் சுமூகமானதொரு சூழலில் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு அனுசரனை வழங்குவது மட்டுமே, நோர்வேயின் பணியாக இருந்தது. பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பதென்பதை சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புக்களும் பேசித்தான் முடிவு செய்யலாமே தவிர, இதில் நோர்வேக்கு எந்தவொரு இடமுமில்லை.
இரண்டு தரப்பும் இணங்கியதன் மூலம்தான், நோர்வே, இலங்கையின் சமாதான முன்னெடுப்பிற்கு அனுசரனை வழங்க முடிந்தது. இரண்டு தரப்போ அல்லது ஒரு தரப்போ, எப்போது வேண்டுமானாலும் நோர்வேயின் பங்களிப்பை நிராகரிக்க முடியும். அவ்வாறு நிராகரித்தால் அதன் பின்னர் நோர்வேக்கு எந்தவொரு தெரிவும் இல்லை. உண்மையில் சமாதான ஏற்பாடுகளில் பங்குகொள்ளும் நோர்வே போன்ற நாடுகளின் நிலைமை பலவீனமானது. இந்த பின்புலத்தில் நோக்கினால், ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் எப்போது ஈடுபட்டனரோ, அப்போதே அனைத்தும் முடிந்துவிட்டது. அதன் பின்னர் இடம்பெற்ற எந்தவொரு விடயத்திற்கும் நோர்வேயையோ, அல்லது சொல்கெய்மையோ குற்றம்சாட்ட முடியாது. ஒரு வேளை ரணில் விக்கிரமசிங்கவோடு விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அப்போது விடயங்களில் தவறுகள் இடம்பெற்று, ஒரு வேளை அதனை சரிசெய்வதற்கு நோர்வே தவறியிருந்தால், சொல்கெய்மின் மீது, குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமிருக்க முடியும்.
மகிந்த ராஜபக்சவின் தேர்தல் மேடைகளில் ஒரு விடயம் தெளிவாகவே குறிப்பிடப்பட்டது. அதாவது, சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வு, சுயநிர்ணயம் எதனையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, அதே வேளை, ரணில் அரசாங்கம் முன்னெடுத்த விடயங்களை நாம் தொடரமாட்டோம், எமது தலைமையில் சமாதான முன்னெடுப்புக்கள் புதிதாக முன்னெடுக்கப்படும். இவ்வாறு கூறும் மகிந்த ராஜபக்சவின் வெற்றியை புலிகள் விரும்பினார்கள் என்றால் அதன் பொருள் என்ன? இதன் பின்னர் நோர்வே தொடர்பில் விவாதிப்பதற்கு என்னவுண்டு?

எரிக் மட்டுமல்ல, எந்தவொரு நாட்டின் ராஜதந்திரிகளுமே, அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை மட்டுமே முற்னெடுப்பர். அதுவே அவர்களது கடமையாகும். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில், இலங்கைக்கான, இந்திய தூதுவராக இருந்த, ஜே.என்.டிக்சித் தொடர்பிலும், தமிழ் சூழலில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பலவாறான அப்பிராயங்கள் உண்டு. டிக்சித், இலங்கைக்கான இந்தியாவின் வைஸ்ராய் போன்று செயற்பட்டதாக சிங்களவர்கள் அவரை விமர்சித்ததுண்டு. உண்மையில் டிக்சித்திற்கு என்ன பணிகள் கொடுக்கப்பட்டனவோ, அதனையே அவர் முன்னெடுத்ததார். அதே போன்று, சொல்கெய்முக்கு என்ன பணிகள் கொடுக்கப்பட்டதோ, அதனையே அவர் முன்னெடுத்தார்.
சொல்கெய்ம், இலங்கையில் செயற்பட்ட காலத்தில் பலருடனும் நல்ல தொடர்பிலிருந்தார். சிங்களவர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் அவருக்கு நண்பர்கள் ஏராளம். புலம்பெயர் சூழலில் ஒரு சிலர், அவர் தொடர்பில் குற்றச்சாட்டு;க்களை முன்வைத்தாலும் கூட, கணிசமானவர்கள் அவருடன் நட்பிலிருக்கின்றனர். அவருடன் கலந்துரையாடுகின்றனர். அவரும் சளைக்காமல், அனைவருடனுமே தொடர்புகளை பேணி வருகின்றார். சமாதான உடன்பாட்டு காலத்தில், சொல்கெய்ம், புலிகளின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட அன்ரன் பாலசிங்கத்துடன் நெருக்கமான தொடர்பிலிருந்தார். புலிகள் அமைப்பை பொறுத்தவரையில் மேற்குலக ராஜதந்திரிகளோடு தொடர்புகளை பேணிக்கொள்ளக் கூடிய ஒருவராக பாலசிங்கம் மட்டுமேயிருந்தார். அதன் மூலம், அவர்களது பார்வைகளை பாலசிங்கத்தினால் புரிந்துகொள்ள முடிந்தது. அரசியலில் இயங்குபவர்களுக்கு பரந்தளவிலான ராஜதந்திர தொடர்புகள் அவசியம். இன்றைய சூழலில் சுமந்திரன் அதனை முடிந்தவரையில் பேணுவதாகவே தெரிகின்றது. தனிப்பட்ட உறவுகள் முக்கியமானது. மற்றவர்களை குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதால் எதனையும் நம்மால் அடைய முடியாது. நமது அரசியல் சூழலில் இயங்குவோர் இதனை தெளிவாக புரிந்துகொள்ள அவசியமாகும். சூழ்நிலையை கையாளுவது நம்முடைய பொறுப்பேயன்றி, அது மற்றவர்களுடையதல்ல.
இன்றைய சூழலில் சொல்கெய்ம் போன்ற ஒருவரிடமிருந்து எவ்வாறான நன்மைகளை பெற முடியுமோ, அதனைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும். ஒரு ஆபிரிக்க பழமொழியுண்டு. அதாவது, வானத்தை பார்த்து உமிழ்ந்தால், உங்கள் முகமே அசிங்கமாகும். நம்மில் பலர் அதனைத்தான் ராஜதந்திரமென்று எண்ணிக்கொண்டு, தங்களை தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்கின்றனர். ராஜந்திரிகளை குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அவர்களுடனான தனிப்பட்ட உறவுகளை பலப்படுத்தி, அவர்களிடமிருந்து, ஏதேனும் நன்மைகளை பெற முடியுமென்றால், அதற்கு முயற்சிப்பதே, நமது மக்களுக்கு நன்மையானது. இதனை எல்லோராலும் செய்துவிட முடியாது. செய்யக் கூடியவர்களை ஊக்குவிப்பதுதான், மற்றவர்கள் செய்யக் கூடியது.


