செய்திகள்

ராஜபக்ஷக்கள் எதிர்பார்க்கும் ‘மூன்றாவது கட்சி’ சாத்தியமா?

– சபரி –

பிரதான கட்சிகளான ஐ.தே.க.வும், ஶ்ரீல.சு.க.வும் தமது கட்சிகளின் மாநாடுகளை நடத்தி முடித்திருக்கும் நிலையில், ‘மூன்றாவது கட்சி’ ஒன்றை உருவாக்கும் முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் தீவிரப்படுத்தியிருக்கின்றார். ‘கூட்டு எதிரணி’ என அடையாளங் காணப்படும் தரப்பினர் அண்மைக்காலங்களில் சந்திக்கும் போது, புதிய கட்சி அல்லது அரசியல் இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்தே இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பேசிவருகின்றார்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இலக்கு வைத்ததாகவே இவர்களுடைய செயற்பாடுகள் அமைந்துவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

புதிய கட்சியை அமைப்பதற்கான திட்டங்களை வகுப்பதிலும், அது தொடர்பான இரகசியப் பேச்சுக்களை நடத்துவதிலும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகடஷ தீவிரமாக களமிறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்திலும் பேச்சுக்களும் சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன. ஶ்ரீலசு.க.வின் வருடாந்த மாநாடு நடந்து முடிந்திருக்கும் நிலையில், தொடர்ந்தும் தனியான அணி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தம்மை அடையாளங்காட்டாவிட்டால், கூட்டு எதிரணி சிதறிப் போய்விடலாம் என்ற அச்சம் காரணமாகவே, புதிய கட்சிக்கான செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள். இதனால், எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே மகிந்தவின் மூன்றாவது அணி களத்தில் இறங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி தனியான கட்சி ஒன்றை உருவாக்குவதில் மகிந்த ராஜபக்ஷ கடந்த ஒரு வருட காலமாகத் தயங்கியமைக்கு நியாயமான காரணங்கள் பல இருந்துள்ளன. முக்கியமாக தோல்வியடைந்துவிடுவோம் என்ற தயக்கம், தம்மீதான விசாரணைகள் தீவிரப்படுத்தப்படலாம் என்ற அச்சம் போன்றன இதற்குக் காரணம். ஆனால், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் புதிய கட்சி உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என மகிந்தவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். அரசாங்கத்துக்கு எதிராக மக்களை பலமான முறையில் ஒழுங்குபடுத்திக்கொண்டுவர வேண்டுமானால், தனியான அடையாளம் அவசியம் என அவர்கள் மகிந்தவுக்கு சுட்டிக்காட்டிவருகின்றார்கள்.

ஆனால், இதற்கு மற்றொரு பக்கமும் உள்ளது. சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் மகிந்தவின் ஆதரவாளர்கள். மகிந்ததான் அவர்களுக்கான நியமனத்தைக்கொடுத்திருந்தார். அதற்கான நன்றிக்கடன் மட்டுமல்ல! மகிந்த ஆதரவாளர்கள் என்பதால் நடைபெறப்போகும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் தமக்கு மைத்திரி நியமனம் வழங்குவாரா என்ற நியாயமான அச்சமும் அவர்களுக்குள்ளது. ஆக, தனியான கட்சி ஒன்றை அமைத்துக்கொள்வதுதான் தமது எதிர்கால அரசியலுக்கும் பாதுகாப்பானது என அவர்கள் நம்புகின்றர்கள். புதிய கட்சியை அமையுங்கள் என மகிந்தவுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்களின் பின்னணி இதுதான்.

கடந்த ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே புதிய கட்சி ஒன்றை அமைத்துவிட வேண்டும் என்பதில் கூட்டு எதிரணியின் ஒரு பிரிவு உறுதியாக இருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ‘டிக்கட்’ கேட்பதைவிட தனியாகச் சென்றுவிடுவது கௌரவமானது என அவர்கள் வாதிட்டார்கள். இருந்தபோதிலும் மற்றொரு தரப்பினர் அதனை விரும்பவில்லை. கட்சியைப் பிளவுபடுத்திய குற்றச்சாட்டு தம்மீது வந்துவிடும் என்ற அச்சம் மட்டுமன்றி, தேர்தலில் வெற்றிபெற முடியுமா என்பதில் இருந்த சந்தேகமும்தான் அவர்களைத் தடுத்தது.

56ஆனால், இப்போது தனியான அடையாளத்துடன் நிற்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்கின்றார்கள். கடந்த பொதுத் தேர்தலில் தனியான கட்சியாகக் களம் இறங்கியிருந்தால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்து அவர்களுக்குக் கிடைத்திருக்கும். இப்போது ஆளும் கூட்டணியில் இருந்துகொண்டே எதிர்க்கட்சியாகச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதில் இது குழப்பமான ஒரு நிலையை ஏற்படுத்துவதாக கூட்டு எதிரணியினர் இப்போது கருதுகின்றார்கள்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எல்லை நிர்ணயம் எனச் சொல்லிக்கொண்டு மேலும் கால தாமதம் செய்ய முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. அடுத்த தேர்தலில் சுதந்திரக் கட்சியின் ‘கை’ சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில், உள்ளுராட்சித் தேர்தல்களை இலக்குவைத்துத்தான் மகிந்த தரப்பினர் புதிய கட்சியை அமைத்துக்கொள்வதற்குத் திட்டமிடுகின்றார்கள். இப்போதே கட்சியை அமைத்துக்கொண்டால், உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வரும்போது அதனைக் கட்டியமைத்துவிட முடியும் என மகிந்த தரப்பினர் கணக்குப் போடுகின்றார்கள்.

MaithripalaSirisena380FBஉள்ளுராட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரையில் தமது பலத்தைக் காட்டுவதற்குப் பொருத்தமான இடமாக அதனை அவர்கள் கருதுகின்றார்கள். முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் மகிந்தவின் ஆதரவாளர்கள். அதனால், அதில் தமக்குச் சாதகமான நிலை இருக்கும் என அவர்கள் கருதுகின்றார்கள். இது மைத்திரி தரப்புக்கு சற்று நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும். அதேவேளையில், சுதந்திரக் கட்சிக்குள் இடம்பெறும் இந்த நெருக்கடி, ஐதேகவுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக இருக்கும். சுதந்திரக் கட்சி பிளவுபட்டு நிற்கும் நிலையில், ஐதேக.வுக்கு அதிக இடங்களைக் கைப்பற்றும் வாய்பு கிடைக்கும்.

நெருக்கடியை உணர்ந்துதான் உள்ளூட்சித் தேர்தல்களை மைத்திரி பின்போட்டுவருவதாகவும் சொல்லப்படுகின்றது. தேர்தல் முறை மாற்றம் எல்லை நிர்ணயத்தில் தாமதம் என்பன இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. இருந்தபோதிலும், நீண்டகாலத்துக்கு இவ்வாறு காலத்தை கடத்த முடியாது என்பது மைத்திரிக்கும் தெரியும். இப்போது, மகிந்தவின் புதிய கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பதுதான் மைத்திரி முன்பாக உள்ள பிரச்சினை!