ராஜபக்ஷ குடும்பம் மீதான பிடியை இறுக்கும் அரசாங்கம்
ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மந்தக் கதியிலேயே நடத்தப்படுவதாக ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கிய கட்சிகள் , சிவில் அமைப்புகளினாலும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் சிலரினாலும் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடுத்தே அரசாங்கம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குற்றப் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை பிரிவுகளில் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக காணப்படும் முறைப்பாடுகளையும் மற்றும் நீதிமன்றங்களில் காணப்படும் வழக்கு விசாரணைகளையும் துரிதப்படுத்தப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
ஏற்கனவே அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலர் அவர்களுக்கு எதிரான விசாரணைகளில் காணப்படும் தாமதங்கள் தொடர்பாக அமைச்சரவையில் அடிக்கடி கூறி வந்ததுள்ளனர். அத்துடன் புதிய ஆட்சி அமைக்கப்படும் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடவடிக்கையெடுப்போம் என்று மக்களுக்கு உறுதி மொழிகளை வழங்கி ஆட்சியை பொறுப்பேற்ற போதும் இரண்டரை வருடங்கள் ஆகியும் அவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்காது இருப்பதானது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலெனவும் மகிந்த ஆட்சியை தோற்கடிக்க முன்னின்ற கட்சிகளும் மற்றும் சிவில் அமைப்புகளும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் அவர்களுக்கு எதிரான விசாரணைகளின் தாமதத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் , நீதி அமைச்சர் மற்றும் விசாரணை பிரிவுகள் ஆகியன முறையாக செயற்படாமையே காரணமெனவும் சில அமைச்சர்கள் அமைச்சரவையில் குறைகளை கூறி வருவதுடன் இதனால் இதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றன.
இதனால் நீதி அமைச்சருக்கு எதிராக அரசாங்கத்தினால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன் ராஜபக்ஷக்களுக்கு எதிராக காணப்படும் முறைப்பாடுகளை விசாரணை செய்து அது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மற்றும் நீதிமன்றங்களில் காணப்படும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை பாரியளவிலான நிதி மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசேட நீதிமன்றங்களை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து செல்வதற்கும் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் (மகிந்த அணியினால்) நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட பின்னரே ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரவி கருணாநாயக்கவுவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தவே மகிந்த அணியினர் முயற்சித்தனர். இதன்போது அந்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னரே அவரை பதவி விலக செய்த அரசாங்கம் அரசாங்கம் நியாயத்துடன் செயற்படுகின்றது என்பதனை காட்டி ராஜபக்ஷக்களுக்கு எதிரான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்தது. இதன்படி அதற்கு இடையூறாக நீதி அமைச்சர் விஜேதாச இருப்பார் என கருதி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர திட்டமிட்டிருந்தது.
இதனையடுத்து விஜேதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தால் அதிலிருந்து அவரை காப்பற்றியே ஆக வேண்டுமென முயற்சிகளை மேற்கொண்டு வரும் மகிந்த ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்களையும் தன்னுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறாக இவரின் கோரிக்கையை ஏற்று கட்சியினர் அவர் பக்கம் சென்றால் ஆட்சி கவிழ்ப்பு ஏற்படலாம் என்ற அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜபக்ஷவினருக்கு நெருக்கடிகளை கொடுத்து அந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய கட்டத்திலும் அரசாங்கம் இருக்கின்றது இதனாலேயே அவர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகளுக்கமைய எதிர்வரும் வாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ , சிராந்தி ராஜபக்ஷ , நாமல் ராஜபக்ஷ , யோசித்த ராஜபக்ஷ , பஸில் ராஜபக்ஷ மற்றும் கோதாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் விசாரணை பிரிவுகளுக்கு தொடர்ச்சியாக அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் அங்கமாக இன்றும் ,நாளையும் சிராந்தி ராஜபக்ஷ , யோசித்த ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த ராஜபகடஷ ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்படவுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




