செய்திகள்

ராஜபக்‌ஷ பாதையிலேயே நல்லாட்சியும் பயணிக்கிறது : ஜே.வி.பி குற்றச்சாட்டு

ராஜபக்‌ஷ ஆட்சியை போன்றே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் காணப்படுவதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது. பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியளர் சந்திப்பில்  உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு மக்களுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டுமென்ற அக்கறை கிடையாது. இது மக்களின் சலுகைகளை இல்லாது செய்யும் அரசாங்கமாகவே காணப்படுகின்றது. புதிய சலுகைகளையும் மானியங்களையும் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தப் பின்னர் மக்களுக்கு இருந்த சலுகைகளும் இல்லாது செய்யபட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள போதும் அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் இது வரை நடவடிக்கையெடுக்கவில்லை.  ஆனால் எல்லாவற்றிலும் வரி அறவிடும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

இதேவேளை எரிபொருளுக்கான விலை சூத்திரம் தயாரிப்பதாக கூறினாலும் அதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவில்லை. ராஜபக்‌ஷ அரசாங்க காலத்தில் என்ன நடந்ததோ அதேபோன்றே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது.
R-06