ராஜபக் ஷவுக்கு அரசியல் புது வாழ்வு தேடிக்கொடுக்கும் அரசாங்கத்தின் குளறுபடிகள்
வீரகத்தி தனபாலசிங்கம்
2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்வியடைந்து இருமாதங்கள் கூட கடந்து விடாத நிலையில் பெப்ரவரி 17 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிறிய பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் பொதுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவை நிறுத்தி களத்தில் இறங்குவதற்கான அந்தக் கட்சிகளின் வியூகத்தின் முதற்கட்டமாக அந்தக் கூட்டம் அமைந்திருந்தது.
ஏற்பாடு செய்தவர்களே எதிர்பார்த்திராத வகையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் இராஜதந்திரியும் இன்று சிங்களத் தேசியவாதத்தின் பிரதான தத்துவவாதிகளில் ஒருவராக தன்னைக் காட்டிக்கொள்கின்றவருமான கலாநிதி தயான் ஜெயதிலக அதை ‘எழுச்சி’ என்று வர்ணித்திருந்தார். ராஜபக் ஷ அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லையெனினும் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதற்குப்பிறகு இந்த ராஜபக் ஷ விசுவாசிகள் நாட்டின் பல பகுதிகளிலும் அத்தகைய பொதுக்கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தினர். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வந்துவிட்ட போதிலும் கூட, பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ராஜபக் ஷ தலைமையில் களமிறங்குவதைத் தடுக்கக் கூடிய நிலையில் அவர் இருக்கவில்லை.
பாராளுமன்றத்தில் சுதந்திர முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தாலும் கூட, ராஜபக் ஷவை பிரதமராக ஒரு போதும் நியமிக்கப் போவதில்லை என்று பிரகடனம் செய்ததைத்தவிர, ஜனாதிபதி சிறிசேன அத்தேர்தலில் ஒரு பார்வையாளராகவே இருந்தார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரதான கட்சியொன்றின் தலைமையிலான கூட்டணி அக்கட்சியின் தலைவரின் பங்கேற்பின்றி தேசியத் தேர்தல் ஒன்றைச் சந்தித்த முதன் முதலான சந்தர்ப்பமாக 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தல் அமைந்தது எனலாம்.
அந்தத் தேர்தல் நடைபெற்று சுமார் இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிறிய பங்காளிக் கட்சிகளையும் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ‘கூட்டு எதிரணி’ என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஜனாதிபதி சிறிசேனவுடன் இருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அமைக்கப்பட்டிருக்கும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள். ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் தலைவராக இரு வருடங்களாக இருக்கின்ற போதிலும் கட்சி இன்னமும் முழுமையாக அவரின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

இதன் விளைவாக அவர் அரசியல் ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றார். நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, தனது கட்சியை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மாத்திரமே உருப்படியான முறையில் அதிகாரத்தைச் செலுத்திச் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பதை ஜனாதிபதி சிறிசேனவின் பரிதாப நிலை உணர்த்தி நிற்கிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ராஜபக் ஷ முகாம் என்றும் சிறிசேன முகாம் என்றும் பிளவுண்டிருப்பதன் காரணத்தினால், நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் வரலாற்றில் முன்னென்றுமில்லாத வகையில் ஒன்று சேர்ந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தனால் கிடைக்கக் கூடியவைவென்று எதிர்பார்க்கப்பட்ட பயன்களை நாட்டு மக்களினால் பெறமுடியாமல் இருக்கிறது. அது மாத்திரமல்ல , அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரிவும் சுதந்திரக் கட்சிப்பிரிவும் கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதில் இணக்க பூர்வமான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கவும் முடியாமல் இருக்கின்றன.
அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன் முறைகள் என்றாலென்ன, பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் என்றாலென்ன, அரசாங்கத்தின் இரு பிரிவுகளும் முரண்படுகின்ற போக்கு அண்மைக் காலமாக தீவிரமடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் முன்வைக்கின்ற யோசனைகள் மற்றும் முன்னெடுக்கின்ற திட்டங்களில் பலவற்றையும் ஜனாதிபதி சிறிசேன ‘வீட்டோ’ செய்து சுதந்திரக்கட்சி அமைச்சர்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கின்ற போக்கைக் காண்கின்றோம்.
அதனால் ஆட்சி நிர்வாகத்தை உருப்படியான முறையில் முன்னெடுக்க முடியாமல் இருக்கிறது. முரண்பாடுகளின் உருவமாக இன்றைய அரசாங்கத்தை மக்கள் காண்கிறார்கள். பொருளாதார முனையிலும் சரி, அரசியல் சீர்திருத்த முனையிலும் சரி பெருமளவுக்கு தேக்க நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. மிகவும் குறுகிய காலத்திற்குள் அதாவது சிலவருட காலத்திற்குள் மக்களின் விரக்திக்காளாகி விட்ட ஒரு அரசாங்கமாக இதை நோக்கவேண்டியிருக்கிறது.
ஜனாதிபதி சிறிசேனவின் முகாமைப் பொறுத்தவரை ராஜபக் ஷ தலைமையிலான ‘கூட்டு எதிரணி’ ஒவ்வொரு விவகாரத்திலும் எடுக்கின்ற நிலைப்பாட்டுக்கு ஈடிணையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதே அவர்களின் முக்கியமான பிரச்சினை.
அன்றைய எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட சிறிசேனவை சுதந்திரக் கட்சியினரில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் ஆதரித்து வாக்களிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினதும் சிறுபான்மையின மக்களினதும் வாக்குகளின் பலத்தில் தான் அவர் தேர்தலில் வெற்றிப்பெறக்கூடியதாக இருந்தது. அத்துடன் ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் நிலவிய குடியியல் உரிமை மனித உரிமை மீறல்கள், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு மற்றும் ஊழல் மோசடிகளை கடுமையாக எதிர்த்து நின்ற சிவில் சமூக அமைப்புகள் பலவும் சிறிசேனவுக்கு ஆதரவாகப் செயற்பட்டன.
ராஜபக் ஷவை ஆதரித்த வாக்காளர் தொகுதியும் சிறிசேனவை ஆதரித்த வாக்காளர் தொகுதியும் அந்த நேரத்தைய அரசியல் சூழ்நிலையை அடிப்படையாக வைத்து நோக்கும் போது பெருமளவுக்கு இயல்பில் வேறுப்பட்டவையாகவே இருந்தன. தன்னை ஆதரித்து பதவிக்கு கொண்டு வந்த அரசியல் சக்திகளையும் சிவில் சமூக சக்திகளையும் வாக்காளர் தொகுதியையும் மேலும் வலுப்படுத்தி, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலான செயன்முறைகளை முன்னெடுப்பதை விடுத்து ஜனாதிபதி சிறிசேன, ராஜபக் ஷவை ஆதரித்த அரசியல் சக்திகளையும், வாக்காளர் தொகுதியையும் தனது பக்கம் வென்றெடுப்பதில் நாட்டம் காட்டத் தொடங்கியதே இன்று அவர் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற பல பிரச்சினைகளுக்குக் காரணமாகும்.

அரசியல் சீர்த்திருத்தங்களை முன்னெடுத்து நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி சிறிசேன இன்று அதே அரசியல் சீர்த்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற ராஜபக் ஷ முகாமின் நிலைப்பாடுகளுக்கு இசைவான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ராஜபக் ஷ அரசாங்கத்தைவிட்டு வெளியேறி 2014 ஆம் ஆண்டு நவம்பர் 21 இல் முன்னாள் ஜனாதிபதி திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சகிதம் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிசேன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதே தனது பிரதான நோக்கம் என்றும், அதற்காகவே பொது எதிரணியின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்லில் போட்டியிட முன்வந்ததாகவும் பிரகடனம் செய்ததை நாட்டு மக்கள் மறக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலுக்கு மறுநாள் 2015 ஜனவரி 9 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் உரையாற்றிய சிறிசேன இனியொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததையும் நாட்டு மக்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், இன்று சுதந்திரக் கட்சியின் அமைச்சர் பெருமக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் 2020 ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி சிறிசேனவே போட்டியிட வேண்டும் என்றும் கூறும்போது அவர் எதுவுமே மறுத்துப் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தனது கட்சி அமைச்சர்கள் கூறியிருப்பவை குறித்து பெரும் அரசியல் சர்ச்சைகள் மூண்டிருக்கின்றபோதிலும், ஜனாதிபதி இதுவரையில் தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துவதைத் தவிர்க்கிறார்.
சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமாக மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டிய அவசியத்தைக் கொண்ட அரசியலமைப்பு மாற்றம் எதையும் செய்யப் போவதில்லை என்று ஜனாதிபதி சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்ததாக இன்றைய அவரின் மௌனத்தை நியாயப்படுத்தும் வகையில் சில அரசியல்வாதிகளும் அவதானிகளும் கருத்து வெளியிட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கையின் ஒற்றையாட்சி அந்தஸ்து பாதுகாக்கப்படும்; பௌத்த மதத்துக்கான அதி முன்னுரிமை இடம் உறுதிப்படுத்தப்படும்; சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுகின்ற அரசியலமைப்பு மாற்றங்களை ஆதரிக்கப் போவதில்லை: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றமில்லை; வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு இல்லை; அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மாத்திரமே அதிகாரப் பரவலாக்கம் என்பவையே அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பிலான சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் தற்போதைய நிலைப்பாடுகள்.
இதில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், இந்த நிலைப்பாடுகள் எல்லாம் இப்போதே இருப்பவைதான். தற்போதையதை விடவும் மாறுதலான நிலைவரத்தைத் தோற்றுவிப்பதன் மூலமாக மாத்திரமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண முடியும். மேற்கூறப்பட்ட நிலைப்பாடுகள் மாற்றத்தை விரும்பாதவையாகும்.
இந்த விடயத்தில் சுதந்திரக் கட்சியின் இரு முகாம்களுமே ஒரே புள்ளியில் நிற்கின்றன. ஜனாதிபதி சிறிசேனவை ஆதரித்த சிறுபான்மையின மக்கள் அவரின் தரப்பிலிருந்து இத்தகைய நிலைப்பாட்டை எதிர்பார்த்திருக்கவில்லை. இரு பிரதான கட்சிகளும் கடந்த காலத்தில் ஒன்றின் முயற்சிகளை மற்றையது எதிர்த்து சீர்குலைத்ததால்தான் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண முடியாமல் இருந்தது என்று கூறப்படுவதுண்டு. இப்போது இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்திருக்கும் பட்சத்தில் கூட இன நெருக்கடியைத் தீர்ப்பது சாத்தியமற்றது என்றாகிவிடுகிறதே?
அதேவேளை, அரசாங்கத்தில் இருந்து கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் 2020 தேசியத் தேர்தல்களுக்குப் பிறகு தனியாக ஆட்சியதிகாரத்துக்கு வருவது குறித்த கனவிலும் மிதக்கின்றன.
ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டு மக்களுக்குக் கூறிய புதிய அரசியல் கலாசாரம் என்பது சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு தொடர்ந்தும் கட்சி அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களை ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுக்கின்ற தற்போதைய அவர்களின் நடைமுறைதானோ? ராஜபக் ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வராதிருப்பதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் புரிந்துணர்வுடன் செயற்படுவார்கள் என்பதால் தேசிய ஐக்கிய அரசாங்கம் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தொடரவே செய்யும் என்ற ஒரு சிந்தனை இருக்கிறது. வெறுமனே ராஜபக் ஷவை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டு அதேவேளை உருப்படியான எந்தக் காரியத்தையும் செய்யாமல் இருக்கின்றதொரு அரசாங்கத்தினால் மக்களுக்கு என்ன பயன் என்ற கேள்வி மறுபுறத்தில் எழுகிறது.
இது இவ்வாறிருக்க, நுகேகொடையில் முதல் ராஜபக் ஷ ஆதரவுப் பொதுக் கூட்டம் நடைபெற்று சுமார் இரு வருடங்களுக்குப் பிறகு அதே நுகேகொடையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் தலைமையிலான கூட்டு எதிரணியின் பொதுக் கூட்டம் ஒன்று பெரும் எடுப்பில் நடைபெற்றிருக்கிறது.
முதல் நுகேகொடைக் கூட்டக் காலத்தில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து திட்டவட்டமானதொரு முடிவை எடுக்காதவராக இருந்த ராஜபக் ஷ இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டு தற்போதைய அரசாங்கத்தை விரைவில் கவிழ்ப்பது குறித்து மிகுந்த உற்சாகத்துடன் பேசியிருக்கிறார்.
“பெரலியக்க ஆரம்பும ” (புரட்சியின் தொடக்கம்) என்ற அறைகூவலுடன் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் அவர் தேசிய ஐக்கிய அரசாங்கம் ஊழல் மோசடிகள் நிறைந்ததாக இருக்கிறதென்று குற்றஞ்சாட்டியதுடன் தான் மீண்டும் அரசியல் அதிகாரத்தைப் பெறும்போது இன்று ஊழல் மோசடிகளைச் செய்து அரச சொத்துகளை களவாடியிருப்பவர்களிடமிருந்து அவற்றை மீட்டெடுக்கப் போவதாக சூளுரைத்த வேளையில், கடந்த ஆட்சிக் காலத்தில் அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் விசாரணைக்குள்ளாகியிருக்கும் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பிணையில் விடப்பட்டிருக்கும் பல அரசியல்வாதிகள் மேடையில் அட்டகாசமாக அமர்ந்திருந்த விசித்திரத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுக்கத் தீர்மானித்த தன்னை ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகளே மீண்டும் அரசியலுக்கு வர நிர்ப்பந்தித்தாக கூறிய ராஜபக் ஷ அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் நாட்டை பிளவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் என்று தனது வழமையான பாணியில் வர்ணித்தார். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து தனது அரசாங்கம் பெற்றுக் கொடுத்த வெற்றிக்கு துரோகமிழைக்கப்படப் போகின்றது என்றும் அவர் கூறினார். ராஜபக் ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட முன்னைய பொதுக்கூட்டங்களில் காணப்பட்டதைப்போன்று இந்த நுகேகொடைக் கூட்டத்திலும் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான உணர்வலைகள் வெளிப்படையானவையாக இருந்தன.
சிறுபான்மையினங்களைப் பிரதிபலிக்கின்றவையாக அமைந்திருக்கும் செம்மஞ்சள், பச்சை வரிகள் இல்லாத “தேசியக் ” கொடிகளை ஆதரவாளர்கள் வைத்திருந்தனர். சர்ச்சைக்குரிய சிங்கள தேசியவாதியான பௌத்த பிக்கு எல்ல குணவன்சவும் ஒரு பேச்சாளர். தனது ஆட்சிக்காலத்தில் தென்னிலங்கையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கக் கூடியதான கொள்கைளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி, மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான தனது தற்போதைய முயற்சிகளிலும் அதே சிறுபான்மை இனத்தவர்களுக்கு விரோதமான நிலைப்பாடுகளையே முன்னிலைப்படுத்தப் போகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
முன்னைய ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழல் மோசடிகளுக்கு எதிராக தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு ராஜபக் ஷவைத் தோற்கடித்த ஜனாதிபதி சிறிசேனவினதும், பிரதமர் விக்ரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்தை இருவருட குறுகிய காலத்துக்குள்ளாகவே அதே ராஜபக் ஷவினால் ஊழல் நிறைந்தது என்று வர்ணிக்கக்கூடியதாக இருக்கின்ற சூழ்நிலை மிகவும் ஏளனமான ஒரு பிரதிபலிப்பாகும்.
பெரும் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாமல் முரண்பாடுகள் நிறைந்ததொரு நிருவாகமாக இருப்பதன் காரணத்தினாலேயே (நல்லாட்சி’ என்ற சொல்லையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட) தேசிய ஐக்கிய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களிடையே செல்வாக்கை இழந்து கொண்டு போக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இதுவே ராஜபக் ஷவுக்கு புதியதொரு அரசியல் வாழ்வுக்கான வாய்ப்பை தேடிக்கொடுத்திருக்கிறது.
ராஜபக் ஷ மாத்திரம் தான் ஆட்சிக் கவிழ்ப்பை பற்றி பேசுகின்றார் என்றில்லை. ஜனதாவிமுக்தி பெரமுன (ஜே.வி.பி) யின் தலைவரான அநுர குமார திசாநாயக்கவும் 2020 க்கு முன்னதாக அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தாங்கள் தயாராகி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதியும் பிரதமரும் மாத்திரம்தான் தங்களது அரசாங்கம் முழுமையாக அதன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யும் என்று அடிக்கடி கூறுகின்றார்களே தவிர, அரசாங்கத்தின் போக்குகள் அதற்கான வாய்ப்பை பிரதிபலிப்பனவாக இல்லை.
இன்றுள்ள இலங்கை அரசியலில் உள்ள மிகவும் விசித்திரமான போக்கு என்னவென்றால், எதிரணிக் கட்சிகள் ஐக்கியப்படாமல் குழப்ப நிலைக்குள்ளாகியிருப்பதே அரசாங்கங்களுக்கு வாய்ப்பாக விளங்குகின்ற நிலைமை மாறி அரசாங்கம் குழப்ப நிலைக்குள்ளாகியிருப்பதால் எதிரணிக் கட்சிகளுக்கு வாய்ப்பான நிலைமை தோன்றியிருக்கிறது.




