ராம்குமார் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டாரா? அவரது வழக்கறிஞர்கள் சந்தேகம்
புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம் குமார் நேற்று சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் உண்மையில் டர்க்கொலை செய்துகொண்டாரா அல்லது வேண்டுமென்றே மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டாரா என்று
அவரது வழக்கறிஞர்கள் சிலர் எழுப்பியுள்ளனர்.
ராம்குமார் புழல் சிறையில் தனி அறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். அந்த பகுதியில் 24 மணி நேர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஷிப்ட் முறையில் போலீஸார் பாதுகாப்பு கொடுத்து வந்தனர். அந்த அறையில் மின்கம்பியோ அல்லது வயரோ போவது போல தெரியவில்லை என்கிறார்கள். பொதுவாக எளிதில் பிடிக்கக் கூடிய வகையில் மின்சார வயரோ அல்லது கம்பியோ சிறைக்குள் இருக்க வாய்ப்பில்லை.
அதுவும் முக்கியமான கைதிகளை அடைத்து வைக்கும் இடத்தில் இப்படி இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் இன்று முழுவதும் ராம்குமார் வெளியே வரவே இல்லையாம். இப்படிப்பட்ட நிலையில் அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார். அதுவும் நேரடி பாதுகாப்பின் கீழ் இருந்த அவர் எப்படி வயரைக் கடித்திருக்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. அவரை மின்சாரம் பாய்ச்சி யாரேனும் கொன்று விட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற சந்தேகத்தை அவரது வக்கீல்கள் எழுப்புகின்றனர். அதேபோல ராம்குமார் இருந்த அறையிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை என்றும் சக கைதிகள் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சுவாதி கொலைய விட ராம்குமார் மரணத்தில்தான் மிகப் பெரிய மர்மம் இருப்பதாகவும் வக்கீல்கள் கருதுகின்றனர்.
இதேவேளை, ராம்குமாரை என்னுடைய மூத்த பிள்ளையைப் போல பார்த்துக்கொள்வதாக அவர்களின் பெற்றோரிடம் கூறியிருந்தேன். இனி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார் . ஜாமீன் கிடைத்த பின்னர் கொலையில் உள்ள முக்கியத்தடயங்களை வெளியே சொல்வதாக சொன்னார். அதற்குள் அவரை கொன்று விட்டனர் என்றும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.




