லசந்தவை கொலை செய்ய இரு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன : விசாரணையில் தகவல்
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படு கொலை செய்ய ஒருவரை ஒருவர் அறியாத இரு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்தா உடலாகமவிடம் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளிலேயே இது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் இது குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரேமானந்தா உடலாகம எனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ட் மேஜரின் மேலதிகாரிகள் குறித்தும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் கொலை தொடர்பில் 5 சிம் அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சிம் அட்டைகள் அனைத்தும், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சாரதியாக இருந்த கந்தேகெதர பியவன்ச என்பவரால், நுவரெலியாவைச் சேர்ந்த அவரது நண்பரான பிச்சை என்பவரின் அடையாள அட்டைக்கு அவருக்கு தெரியாமலேயே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. லசந்தவின் கொலைக்காக மட்டுமே இந்த 5 சிம் அட்டைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் பின்னர் அவை பயன்படுத்தப்படவில்லை என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந் நிலையிலேயே முன்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழு பிச்சை, கந்தேகெதர பியவன்ச ஆகியோரை கைது செய்திருந்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேகிக்கின்றது. எனினும் அதற்கு அப்பால் இந்த விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை.
எவ்வாறாயினும் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உடலாகம எனும் இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர், லசந்தவின் கொலை இடம்பெறும் போது கொஹுவலை பகுதியில் இருந்த இராணுவ புலனாய்வு முகாமிலேயே கடமையாற்றியுள்ளார். குறித்த புலனாய்வு முகாமில் மூன்று பிரிவுகள் இருந்துள்ள நிலையில் அங்கு மேஜர் அன்சாரின் கீழ் இருந்த பிரிவிலேயே உடலாகம சேவையாற்றியுள்ளதுடன், இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலிஹ் இற்கு அவர் நேரடியாக அறிக்கையிடல்களை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் அடுத்து வரும் நாட்களில் மேஜர் அன்சார், சுரேஷ் சாலிஹ் மற்றும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த கபில ஹெந்தவிதாரண உள்ளிட்ட பல முன்னணி இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்கள் இந்த படுகொலை விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.
தற்போது கைதாகியுள்ள உடலாகம எனும் சார்ஜன்ட் மேஜர் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சிங்களம் மட்டுமன்றி தமிழும் நன்றாக தெரியும் என கூறும் பொலிஸார் அதனால் அவர் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த கருணா அம்மானின் ஆட்களுடன் இணைந்து பணியாற்ற தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
R-06




