லசந்த கொலை: இராணுவ அதிகாரியின் “மர்ம மரணம்” எழுப்பியிருக்கும் புதிய கேள்விகள்
‘சன்டே லீடர்’ பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை தானே படுகொலை செய்ததாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் “தற்கொலை” செய்துகொண்டிருப்பது பல புதிய கேள்விகளை எழுப்பியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்த இராணுவ அதிகாரி கடிதத்தில் தெரிவித்திருப்பது உண்மையாயின் லசந்தவை கொல்வதற்கான உத்தரவை அவருக்கு யார் வழங்கியது என்ற கேள்வியும் பிரதானமாக எழுப்பப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரியான ஜெயமானே 2007 ஆம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள போதிலும், 2009 ஜனவரியிலேயே லசந்த கொல்லப்பட்டார். அதனால், அவரை மீண்டும் பணிக்கு அமர்த்தியது யார்? இராணுவத்தின் எந்தப் பிரிவில் அவர் பணியாற்றினார் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
கேகாலையிலுள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட குறப்பிட்ட இராணுவ அதிகாரி, லசந்தவை தானே கொலை செய்ததாகவும், இந்தக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரேமானந்த உடலகம கொலையாளி அல்ல எனவும் அவர் எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். அதனால் உடலகமவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
“குறிப்பிட்ட இராணுவ அதிகாரி குற்ற உணர்வினால் தற்கொலை செய்தகொண்டிருப்பாராயின், கொலை செய்தது தான்தான் என்பதை குடும்ப உறுப்பினர்கள் யாரிடமாவது தெரிவித்திருப்பார்” எனவும் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இதனைவிட மற்ருமொரு முக்கியமான விடயமும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. லசந்தவின் காரை பின்தொடர்ந்து குறைந்த பட்சம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்திருந்தார்கள். மூன்று அல்லது நான்கு பேர் இணைந்தே இந்தக்கொலையைச் செய்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடைய பெயர் விபரங்கள் தெரிவிக்கப்படாமையும் கேள்வியை எழுப்பியிருக்கின்றது. தான் தனியாக இந்தக் கொலையைச் செய்தது போல அவர் கடிதம் எழுதிவைத்திருப்பது ஆச்சரியமாக இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ அதிகாரியின் தற்கொலையும், அவர் எழுதிவைத்துள்ள கடிதமும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் கேள்விகளை எழுப்வதாகவே அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்ட, மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டன. சுமார் ஆறு மணிநேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.:06




