செய்திகள்

லண்டன் இலங்கை தூதரக பிரிகேடியரின் ராஜதந்திர விசாவை ரத்துசெய்ய தமிழ் அமைப்புக்கள் கூட்டாக பிரித்தானிய அரசை வலியுறுத்து

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் சுதந்திர தின நிகழ்வின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களுக்கு ‘ கழுத்து அறுக்கப்ப்டும்’ என்று சைகை மூலம் எச்சரிக்கை செய்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் ராஜதந்திர விசாவை உடனடியாக இரத்துசெய்யவேண்டும் என்று பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் அமைப்புக்கள் பிரித்தானிய அரசை கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பில் விபரங்களுடன் கூடிய அறிக்கை மகஜர் ஒன்றை பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் போரிஸ் ஜோன்சன் மற்றும் உள்நாட்டமைச்சர் அமர் ரூட் ஆகியோருக்கு இந்த அமைப்புக்கள் அனுப்பிவைத்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை, தொழில்கட்சிக்கான தமிழர்கள், கன்சவேட்டிவ் கட்சிக்கான தமிழர்கள், உலக தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் உட்பட 13 அமைப்புக்கள் கூட்டாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் ராஜதந்திர விசாவை ரத்துசெய்வதுடன் அவர் பிரித்தானியாவில் வரவேற்கப்படவில்லை என்று பிரகடனம் செய்யுமாறும், உள்நாட்டு சட்டங்களின் கீழ் அவரை கைதுசெய்து குற்றவியல் நடைமுறைகளுக்கு உட்படுத்துமாறும், இலங்கையில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்களை விசாரணை செய்யுமாறும் இந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பிரிகேடியருக்கு எதிராக நீதிமன்றம் ஊடக நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் இந்த முறையற்ற செய்கை தொடர்பில் விசாரணை ஒன்று நடைபெறும் வரை அவரை பணியில் இருந்து இடைநிறுத்துவதாக இலங்கை வெளிநாட்டமைச்சு அறிவித்திருந்தபோதிலும், ஜனாதிபதியின் தலையீட்டினால் அவர் மீண்டும் பணியில் உடனடியாக இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரிகேடியருக்கு எதிராக தமிழ் அமைப்புக்கள் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து அவரை பாதுகாப்பதற்கு அவர் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு ராஜதந்திர பாதுகாப்பு வழங்குவது இலங்கை அரசாங்கத்துக்கு அவசியமானதாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரிகேடியருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை பல தமிழ் சட்ட தரணிகளும் நிபுணர்களும் கூட்டாக இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, அழுத்தங்களும் சட்ட நடவடிக்கைகளும் அதிகரித்துவரும் நிலையில் பிரிகேடியரை இலங்கை அரசாங்கம் மீண்டும் நாட்டுக்கு விரைவில் திரும்ப அழைக்கலாம் என்றும் தெரியவருகிறது.