லண்டன் நடிகருடன் சுருதிஹாசன் காதலா
லண்டன் நடிகரை சுருதிஹாசன் காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் 7-ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சி.3 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சபாஷ் நாயுடு படத்தில் தந்தையுடன் சேர்ந்து நடித்து வருகிறார். சுருதிஹாசனுக்கும் லண்டனில் வசிக்கும் இத்தாலிய நடிகர் மைக்கேல் கார்சேலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சுருதிஹாசன் லண்டன் சென்றபோது, மைக்கேல் கார்சேலை சந்தித்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தார்கள். பின்னர் அவர்கள் காதல்வயப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தியா எனது இரண்டாவது தாய் வீடு என்று மைக்கேல் கார்சேல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். கமல்ஹாசனும் லண்டனில் மைக்கேல் கார்சேலை சந்தித்த படம் இணைய தளங்களில் வந்தது.
கடந்த வாரம் மும்பையில் சுருதிஹாசனின் தாய் சரிகாவை மைக்கேல் கார்சேல் சந்தித்த படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சுருதிஹாசனும் மைக்கேல் கார்சேலும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை சுருதிஹாசன் இதுவரை மறுக்கவில்லை.
இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சிக்கு சுருதிஹாசனும் மைக்கேல் கார்சேலும் ஜோடியாக சென்றார்கள். மைக்கேல் கார்சேல் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேட்டி-சட்டை அணிந்து இருந்தார். சுருதிஹாசன் பட்டு சேலை உடுத்தி இருந்தார். நடிகர் கமல்ஹாசனும் அவர்களுடன் வந்து இருந்தார்.
மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து இருப்பதுபோன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த படங்களை மைக்கேல் கார்சேலும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.(15)




