லலித், குகன் காணாமல் போன விவகாரத்தில் முக்கிய திருப்பம்: முன்னாள் அமைச்சர் ஹெகலிய சாட்சியம்
முன்னிலை சோஷலிச கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இன்று கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளரான கேஹலிய ரம்புக்வெல்ல சாட்சியமளித்தார்.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது. சாட்சியத்தின் பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து தகவல் தந்த கேஹலிய ரம்புக்வெல்ல, நீதிமன்ற அழைப்பின்படி இன்று தமது சாட்சியத்தை வழங்கியதாக குறிப்பிட்டார்.
அத்துடன் தாம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக அவசியமில்லை என கருதுவதாக அவர் தெரிவித்தார். எனினும், அவர் தாம் அளித்த சாட்சிய விடயங்களை வெளியிடவில்லை.
இதேவேளை, ஊடகங்களிடம் தகவல் தந்த லலித் குகன் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போப்பகே, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் திகதி காணாமல் போன தமது கட்சிக்காரர்கள் 2011 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி உயிருடன் இருப்பதாக கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை தொடர்பில் இன்று சாட்சியம் கோரப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் இன்று சாட்சியம் வழங்கிய கேஹலிய ரம்புக்வெல்ல, அரசாங்கத்தின் படைத்தரப்பின் தகவல்களுக்கமையவே அரசாங்க பேச்சாளராக இருந்த தாம் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.
கேஹலிய ரம்புக்வெல்லவின் இந்த சாட்சியத்தை கோடிட்டு காட்டிய லலித், குகன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி போப்பகே, படைத்தரப்பின் தகவல்களை அடிப்படையாக கொண்டு கேஹலிய ரம்புக்வெல்ல அவ்வாறு கூறியிருப்பாராக இருந்தால் 2011 டிசம்பர் 15 ஆம் திகதி அவர்கள் இருவரும் படைத்தரப்பின் கட்டிப்பாட்டில் இருந்துள்ளார்கள் என்ற தீர்மானத்திற்கு வர முடியும் என குறிப்பிட்டார்.
இந்த நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதன்போது தமது செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்கள் என்பதை அப்போது பாதுகாப்பு பேச்சாளராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல நீதிமன்றத்தின் முன் ஏற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
எனவே தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறுமாக இருந்தால், இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி லலித் மற்றும் குகன் ஆகியோரின் நிலைமை தொடர்பாக தெரியப்படுத்த வேண்டும்.
அதேநேரம், பரணகம ஆணைக்குழுவின் முன்னால் காணாமல் போனதாக கூறப்பட்டு, முறைப்பாடு செய்யப்பட்டுள்ள 25 ஆயிரம் பேர் தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் புபுது ஜாகொட கோரிக்கை விடுத்தார்.
R-06




