செய்திகள்

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – புயலாக மாற வாய்ப்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவலகள் தெரிவித்துள்ளன.இன்னிலையில் வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். இது வலுப்பெற்று டிசம்பர் 8ம் தேதி புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது.இத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம்காரணமாக டிசம்பர் 07 ஆம், 08 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் அவ்வப்போது அதிகரித்து வீசக் கூடிய பலமான காற்றுடன் மிகவும் கொந்தளிப்பான கடற்பரப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடியகடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 – 35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.(15)