வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு என்ன காரணம்…?
சிவ.கிருஸ்ணா
ஒரு காலத்தில் கல்விக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை தற்போது வீழ்ச்சியடைந்து செல்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கூட சிறப்பாக இருந்த கல்வி நிலை போர் ஓய்ந்து 8 ஆவது ஆண்டு நெருங்கும் நிலையில் வீழ்ச்சியடைந்து செல்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வடமாகாண கல்வி மாகாண ரீதியான தரப்படுத்தலில் மாகாணத்தில் 09 வது இடத்தையும், மாவட்ட தரப்படுத்தலில் கிளிநொச்சி மாவட்டம் 25வது இடமான கடைசி இடத்தையும் பெற்றுள்ளதுடன், இலங்கையில் கல்வியில் முதலிடத்தை வகித்த யாழ் மாவட்டம் தற்போது கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று என்ற நிலைமையை அடைந்துள்ளது.
நீண்டகால உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களும் அதன் பின்னரான சூழல் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் கல்வி அடைவுகளில் தாக்கம் செலுத்தியுள்ளது. யுத்தம் காரணமாக தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த 85 ஆயிரம மாணவர்களில் 70 ஆயிரம் மாணவர்கள் 1 – 3 வருடங்கள் கல்வியை இழந்திருந்ததாக யுனிசெப் நிறுவன புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. இவையும் அண்மைய பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன.
கொடிய யுத்தத்தின் காரணமாக பொருளாதார ஆதாரங்களை முற்றாக இழந்தமை, உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள், அதிகளவான அங்கவீனர்கள், குடும்பங்களின் வருமானம் பெருமளவில் பாதிப்பு, குடும்பத்தலைவர்கள் காணமல்போனமை அல்லது நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, வடக்கில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வடக்கில் முன்னர் இயங்கி வந்த பாரிய, நடுத்தர தொழிற்சாலைகள் மீளஇயங்காமை, விவசாயத்திற்கேற்ற வளமான மண்ணைக்கொண்ட பிரதேசங்களில் மக்கள் விவசாயம் செய்ய அனுமதி மறுப்பு போன்ற பல காரணங்கள் மாணவர்களின் கல்வி அடைவு மட்டங்களில் மறைமுகமாக தாக்கம் செலுத்தியுள்ளன.
புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக எண்ணிக்கையான வடமாகாண மாணவர்கள் 70 புள்ளிகளுக்குமேல் பெற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ஆரம்ப கல்வியும் ஒரு காரணம் என்பதை மறுத்துவிட முடியாது. பல முன்பள்ளிகள் அடிப்படை வசதிகளற்று இயங்கிவருவதும், வன்னிப்பிரதேசத்திலுள்ள பல முன்பள்ளிகள் சிவில் பாதுகாப்புப்படையினரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதும், அடிப்படைக் கல்வித் தகைமை மற்றும் தொழில் தகைமை இல்லாத பலர் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றிக் கொண்டிருப்பதும் ஆரம்ப கல்வியை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு அற்ற மாணவர்கள் வடமாகாணப் பாடசாலை வகுப்பறைகளில் கணிசமானளவில் காணப்படுவதுடன் மாறிவரும் புறச்சூழலில், கற்றல் மீதான ஆர்வம் குறைவடைந்து செல்வதுடன் மாணவர்களின் பாடசாலை வரவு குறைவாக உள்ளமையையும் அவதானிக்க முடிகிறது. தற்கால மாணவர்கள் மத்தியில் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் பாவனை அதிகரித்துச்செல்வதும், மாணவர்கள் மத்தியில் அதிகரித்துச்செல்லும் ஒழுக்கமின்மைஇ குழுமோதல்கள் மற்றும் சீரழிவுகள் போன்றனவும் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அழகியல் பாடங்களின் தெரிவு, தொழில் நுட்பப் பாடங்களின் தெரிவு மற்றும் விருப்புக்குரிய பாடங்களின் தெரிவு என்பவை இடைநிலை வகுப்புக்களில் முக்கியம் பெறுகின்றன. இப்பாடத் தெரிவுகளின்போது மாணவனின் விருப்பு, ஆற்றல், குடும்பப்பின்னணி என்பவற்றுக்கு அமைவாக வழிகாட்ட வேண்டும். துரதிஷ்டவசமாக சிலசமயங்களில் பாடசாலைக் கற்பித்தல் வள ஆளணி மற்றும் பௌதிக காரணிகள் அதிபர், ஆசிரியர்களின் விருப்பு வெறுப்புகளும் செல்வாக்கு செலுத்தி வருவதுடன், ஆரம்ப காலந்தொட்டு க.பொ.த உயர்தர பாடத்தெரிவுகளில் பிழையான தெரிவுகளும் இடம்பெற்று வருகின்றன.
இதனால் பரீட்சையில் தோல்வி அடைந்தபின் பாடத்துறை மாறுவோரும் உண்டு. மூன்று தடவையும் ஒரே பாடத்துறையில் தோற்றி சித்தியடையத் தவறி க.பொ.த உயர்தர தகைமையின்றி அல்லற்படுவோரும் உண்டு. தற்காலத்தில் க.பொ.த(சா.த) சித்தியடைந்து உயர்தரம் நுழையும் மாணவர்களுக்குப் பாடத்தெரிவுகள் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்ற போதும் பிழையான தெரிவுகள் இடம்பெற்று விடுகின்றன. கஸ்ட பிரதேசங்களிலுள்ள சில ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளில் முறையாகப்பயிற்றப்படாத ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பாட ஆசிரியர்கள், தொண்டர் ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் ஆகியோர் பிரதான பாடங்களை கற்பிக்கும் சூழல் காணப்படுகின்றது. கணிசமான எண்ணிக்கையான ஆசிரியர்களுக்கு நவீன கற்றல் – கற்பித்தல் முறைகள் பற்றிய பரீட்சயமின்மை காணப்படுவதுடன் அவை தொடர்பான பயிற்சி வாய்ப்புக்களும் அவர்களுக்கு குறைவாகக் காணப்படுகின்றது.
ஆசிரியர்கள் காலத்திற்கு தகுந்தாற் போல் கல்வித்திட்டங்களை மாற்றியமைக்காமல் இருக்கின்றனர். நவீன பயிற்சி முறைகள் என்பன ஆசிரியர் கல்வி நிறுவனங்களால் முறையாகப் பின்பற்றப்படாமல் காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்திலிருந்த கல்வி இன்று கீழ் நிலையில் இருப்பதற்கு ஆசிரியர்கள் வகுப்பறையில் இல்லாமையே காரணம் என வடக்கு மாகாண ஆளுனர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர சில ஆசிரியர்கள் நீண்ட விடுமுறைகளை எடுப்பது மற்றும் வெளிநாடுகளுக்கு செல்கின்றமை வடமாகாண கல்வி வீழ்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு கடந்த காலத்தை விட தற்காலத்தில் சிலர், சம்பளத்திற்கு வேலைபார்க்கும் தொழிலாகத்தான் ஆசிரியத்தொழிலை கருதுவதும், பாடத்திட்டத்தில் ஆர்வமற்ற, ஆழுமையற்ற சூழல், கற்பித்தல் முறையில் தெளிவின்மை, குறிப்பிட்ட மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, மந்தமான மாணவர்களை மட்டம் தட்டுவது, தன்னிடம் ரியூசன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நன்றாக சொல்லிக்கொடுப்பது, சீரற்ற பழக்கவழக்கங்களை மாணவர்கள் முன்பு செய்தல் போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளால் மாணவ சமுதாயம் ஒழுக்கங்களை மீறுபவர்களாகவும் கல்வியில் பாதிக்கப்படுபவர்களாகவும் உள்ளனர்.
அத்தோடு ஒரு சில ஆசிரியர்களின் நடவடிக்கைகள் மாணவர் சமுதாயத்திலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வுகளை ஏற்படுத்துவதாகவும், ஆசிரியர்கள் மீதுள்ள நன்மதிப்பை குறைக்கும் விதமாகவும் உள்ளது. தற்கால சமூகம் தாழ்ந்து போனதற்கு ஆசிரியர் சமூகத்தில் ஏற்பட்ட தாழ்வும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆசிரியர்கள் பாடவிடயங்களை கற்பிக்கும் அளவுக்கு, பரீட்சை மாதிரி வழிகாட்டல் மற்றும் கற்பதற்கு உரிய வழிகாட்டல் போன்றவற்றைச் செய்வது நடைமுறையில் குறைவாகவுள்ளதுடன் மாணவர்களின் சுயகற்றலுக்கு போதியளவு நேரத்தினை வழங்காமல் இருப்பதுடன் கணிசமானளவு ஆசிரியர்கள் தமக்குரிய பாடத்திட்டத்தை நிறைவு செய்யாமல் இருப்பதால் மாணவர்களின் அடைவு மட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் மனிதவளம் மற்றும் பௌதீகவளப்பரம்பல் சமனற்றுக் காணப்படுகின்றது. மாகாண, தேசிய பாடசாலைகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதுடன் சில பாடசாலைகள் சிறப்பான பௌதீகவளம் மற்றும் மனித வளங்களை கொண்டிருக்கும் அதேவேளை மாணவர் எண்ணிக்கையை குறைவாகக் கொண்டிருக்கின்றது. ஆனால் அருகிலுள்ள வேறுசில பாடசாலைகள் அளவுக்கதிகமாக மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கான பௌதீக, ஆளணி வளம் இன்றி இருக்கின்றது. சில பாடசாலைகளின் அதிபர்களின் வினைத்திறனற்றவர்களாகவும் இருக்கின்றனர். இது பாடசாலையின் இயல்பான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றது.
கல்வி அதிகாரிகள் அதிபர்கள், ஆசிரியர்களின் சுயமான சிந்தனைக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தல், தேசிய மட்டத்தில் நடைபெறும் பரீட்சை வினாத்தாள்களுக்கு முரணான வகையில் சில பாடங்களின் வினாத்தாள்கள் வலய மட்டங்களிலும், மாகாண மட்டங்களிலும் தயாரிக்கப்படுதல்இ மாகாண மட்டத்தில் பெரும் தொகையான பணம் செலவிடப்பட்டு நடைபெறும் கல்விச் செயலமர்வு மற்றும் முன்னோடிக் கருத்தரங்குகள் வினைத்திறனற்றதாக காணப்படுகின்றமையும் கல்வியின் இந்த நிலைக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைவரை தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோர் காட்டும் அக்கறை, இடைநிலைக்கல்வியில் தொடர்ந்து நீடிக்காததுடன் வீட்டில் பிள்ளை கற்றலுக்கான பௌதீக வளங்களின் பற்றாக்குறை, குடும்ப அங்கத்தவர்களின் ஒத்துழைப்பின்மை என்பன மாணவர்களின் பெறுபேற்றுக்குறைபாட்டில் பெருஞ்செல்வாக்கினைச் செலுத்துகின்றன. குடும்ப அங்கத்தவர்கள் தென்னிந்திய சினிமா, தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் மற்றும் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புக்களுக்கு அடிமையாகிப் போகின்றமை காரணமாக மாணவர்களின் கற்றல் நேரங்கள், பொழுதுபோக்கிற்கான நேரங்களாக மாற்றமடைகின்றது.
பெற்றோர், குடும்ப அங்கத்தவர்களிடையே அதிகரித்துச்செல்லும் மதுப்பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதுடன் மாணவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாவதுடன் அவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிப்படைகின்றது. இதுதவிர்ந்த கொலை, கொள்ளை மற்றும் குழுமோதல்கள் அதிகரித்து செல்வதும், பாலியல் துஸ்பிரயோகங்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள், இளவயதுத்திருமணங்கள் என்பனவும் மாணவர் சமுதாயத்தை பாதித்திருக்கின்றது. இலங்கையின் போதைப்பொருள் இடமாற்று மையமாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் விளங்குவது அனைவருக்கும் கவலைதரும் விடயமாகும். கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து செல்வதுடன் அதற்கான எண்ணங்களும் ஏற்பட்டிருக்கின்றது. முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களின் தவறானபாவனை காரணமாக அவைசார்ந்த குற்றங்களும் அதிகரித்துக்காணப்படுகின்றன.
சமூகம் கேளிக்கைகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு காட்டும் அளவுக்கதிகமான அக்கறையை மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் காட்டுவது குறைவாகவுள்ளது. இவ்வாறு எமது சமூகத்தில் காணப்படும் பிரச்சனைகள் வடமாகாணத்தில் கல்வி நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் தென்பகுதி ஆட்சியாளர்களின் கல்வித் தரப்படுத்தல் காரணமாகவே வீரியம் பெற்றிருந்தது. ஆனால் இன்று அந்தக் கல்வி நிலையையே தமிழ் சமூகம் இழந்து வருவது வேதனைக்குரியதே.
N5




