செய்திகள்

வடக்கின் புதிய ஆளுநர்

வடமாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் ஆளுநரின் நியமனம் என்பது அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய ஒன்று. முலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான அதிகாரப்போட்டிக்கான களமாகவே இந்த மாகாணங்கள் கடந்த காலங்களில் இருந்துள்ளன. அதனால்தான் வடமாகாண ஆளுநரின் நியமனம் ஊடகங்களில் அதிகளவுக்கு முக்கியத்துவத்தையும் கவனத்தையும் பெற்றிருந்தது. ஆளுநரின் நியமனவே மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறானதாக அமையும் என்பதற்கான வெளிப்பாடாக அமைந்துவிடுகின்றது. மாகாணத்துக்கு முதலமைச்சர் தலைமையில் ஒரு அரசாங்கம் இருந்தாலம் கூட, அதற்குள் தமது அதிகாரத்தைச் செலுத்துவதற்கு ஆளுநர்களையே மத்திய அரசாங்கம் பயன்படுத்துகின்றது. அந்த வகையில், வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கின்றது எனக் கூறலாம்.

மாகாண சபை அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே பதவியிலிருந்த அரசாங்கங்கள் ஆளுநர் நியமனத்தில் தனியான ஒரு நடைமுறையைக் கடைப்பிடித்துவந்திருப்பதைக் காணமுடிந்திருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள் எப்போதும் இராணுவப் பின்னணியைக் கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களை தன்னுடைய இறுக்கான இராணுவப் பிடியில் அரசாங்கங்கள் வைத்திருந்தமை இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அத்துடன், முதலமைச்சருடன் இணைந்து செயற்படுவதிலும் அவர்கள் அக்கறை காட்டியதில்லை. முதலமைச்சருக்கு மேலாக அதிகாரத்தைக் கொண்டவர்களாகவே அவர்கள் செயற்பட்டுவந்திருக்கின்றார்கள். அரசியலமைப்பின் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் அதற்குக் காரணமாக இருந்திருக்கின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண முதலமைச்சரைவிட அதிகளவு அதிகாரங்களைக் கொண்டவராகவே ஆளுநர்கள் இருந்துள்ளார்கள். இப்போதும் இருக்கின்றார்கள்.

போர் முடிவுக்கு வந்து ஐந்துவருடங்கள் கடந்த பின்னர் வடமாகாண சபை அமைக்கப்பட்டபோது கூட, இராணுவப் பின்னணியைக் கொண்ட ஆளுநரை வடமாகாணத்தில் வைத்திருப்பதையே முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ விரும்பினார். போர் முடிவுக்கு வந்த பின்னரே (2009 ஜூலை 12 ஆம் திகதி) இராணுவ அதிகாரியான ஜி.ஏ.சந்திரசிறி வடமாகாண ஆளுநராக முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. போர் முடிவுக்கு வந்திருந்தாலும், இராணுவத்தின் நோக்கங்களை வடக்கில் முன்னெடுப்பதில் அவருடைய பங்கு பிரதானமாக இருந்தது. அவரை மாற்றுவதாக சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்குப் பதிலாக, அவருக்குப் பதவி நீடிப்பை வழங்குவதிலேயே மகிந்த ராஜபக்‌ஷ அக்கறை காட்டினார். இனால், வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் இடையிலான அதிகார இழுபறியிலேயே பல மாதங்கள் சென்றது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரே இராணுவப் பின்னணியைக் கொண்டிராத எச்.எம்.ஜி.எஸ்.பளிககாரா (2015 ஜனவரி 27 இல்) வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னரே வடமாகாண சபை சுமூகமான முறையில் செயற்பட முடிந்தது.

பளிககாராவுக்கான நியமனம் குறுகிய காலத்துக்காகவே வழங்கப்பட்டதாக இருந்தமையாலும், அவர் ஓய்வு பெற விரும்பியதாலும், இப்போது புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டிருக்கின்றார். பெப்ரவரி 14 ஆம் திகதி ஜனாதிபதி முன்பாக சந்தியப் பிரமாதணம் செய்து பதவியைப் பொறுப்பேற்ற ஆளுநர், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது பதவிப் பொறுப்பேற்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவமும், அதில் இடம்பெற்ற உரைகளும் வடபகுதி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. மாகாண ஆளுநர் ஒருவருக்கு இந்தளவுக்கு குதூகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டிருப்பதும், அதற்கு ஊடகங்களில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் இதுதான் முதன்முறையாக இருக்கலாம்.

zரெஜினோல்ட் குரேயின் நியமனம் நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. வரவேற்பு நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தன்னுடைய உரையில் இவற்றைக் குறிப்பிட்டிருக்கின்றார். முதலாவது, ரெஜினோல்ட் குரே தமிழ் தெரிந்த ஒருவர். வடக்கின் முதலாவது தமிழ் தெரிந்த ஆளுநர் இவர்தான். இதன்மூலம் மக்களின் உணர்வுகளை நேரடியாகவே புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் ஆளுநராகப் பதவியேற்றிருக்கின்றார். இரண்டாவது, மேல் மாகாண முதலமைச்சராக நீண்டகாலம் இருந்தவர். அதன்மூலம், மாகாண சபைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஆளுநரின் அதீத அதிகாரத்தினால் முதலமைச்சர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அனுபவத்தில் அறிந்தவர். இதன்மூலம் வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு சிறப்பான முறையில் இவர் ஒத்துழைப்பார் என்பதை எதிர்பார்க்கலாம்.

இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களும் ஆளுநரின் அதீத அதிகாரத்துக்கு எதிரான உணர்வுகளைக்கொண்டிருக்கின்ற போதிலும், வடமாகாணம் மட்டும்தான் இதற்காகத் தொடர்ந்தும் துணிச்சலுடன் வெளிப்படையாகக் குரல்கொடுக்கும் மாகாணமாக இருக்கின்றது. வடக்கின் இந்தப் போராட்டத்துக்குக் கிடைக்கும் பலன் தமக்கும் கிடைக்கும் என்பது ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்குத் தெரியும். அதனால்தான் வடக்கில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான அதிகாரப்போட்டி, அரசியல் மாணவர்களின் கவனத்துக்குரிய ஒன்றாக இருந்துவருகின்றது. ரெஜினோல்ட் குரே வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலமாக மட்டும் வடக்கின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரிடமே முக்கிய அதிகாரங்களை வழங்கும் வகையில், ஆளுநரின் அதிகாரங்கள் அரசியலமைப்பின் மூலமாகக் குறைக்கப்படுவது அவசியம். அரசியலமைப்பு மாற்றத்தின்போது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாக இது இருக்கவேண்டும்.

வடபகுதி மக்களின் காணி, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை தான் நன்கு அறிந்திருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்ய தன்னால் முடிந்த நடவடிக்கையை எடுப்பதாகவும் ஆளுநர் பதவியேற்பு வைபவத்தின் போது தெரிவித்திருந்தார். சந்தேகங்களை நீக்கி நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண சபைக்கும் முதலமைச்சருக்கும் ஒத்துழைப்பு வழங்க தான் தயார் எனவும் தெரிவித்தார். புதிய ஆளுநரின் இந்த உறுதிமொழி வடபகுதி மக்களுக்கு பெருமளவு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. இந்த நம்பிக்கையாவது நிலைத்திருக்கின்றதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!
(ஞாயிறு தினக்குரல்: ஆசிரியர் தலையங்கம்- 2016/02/21)