செய்திகள்

வடக்கில் ஆயிரத்து 608 குடும்பங்கள் முகாமில் உள்ளனர்! வடமாகாண புனர்வாழ்வு அமைச்சு தகவல்

வடக்கில் 12 ஆயிரத்து 681 குடும்பங்களைச் சேர்ந்த நாற்பத்து நான்காயிரத்து 15 பேர் இன்னும் மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ளதாக வடமாகாண புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடமாகாண மீள்குடியேற்றம் தொடர்பில் கேட்ட போதே அவ் அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

வடக்கின் 5 மாவட்டங்களிலும் அரச அதிபருடன் இணைந்து மீள்குடியேற்றம் தொடர்பான தகவல்களை பெற்றிருந்தோம். அந்த வகையில் வடக்கில் இதுவரை ஒரு இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து 181 குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்து இருபத்து நான்காயிரத்து 944 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதில் யாழ்ப்பாணத்தில் முப்பத்தொராயிரத்து 845 குடும்பம், மன்னாரில் இருபத்தாறாயிரத்து 390 குடும்பம், வவுனியாவில் பதினாறாயிரத்து 862 குடும்பம், கிளிநொச்சியில் நாற்பத்தொராயிரத்து 862 குடும்பம், முல்லைத்தீவில் நாற்பத்தொராயிரத்து 322 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இவை அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையானது.

இவை தவிர மீள்குடியேற்றப்படவுள்ளவர்களும் தற்போது இருக்கின்றார்கள். அதில் இலங்கையில் தற்போது முகாம்களில் ஆயிரத்து 608 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 732 பேர் வாழ்கின்றார்கள். அதில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 318 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 737பேர், வவுனியா மாவட்டத்தில் 290 குடும்பங்களைச் சேர்ந்த 995 பேர் வாழ்வதாகவும் தகவல்கள் இருக்கிறது.

அதேமாதிரி தான் உறவினர்கள், நண்பர்களுடன் வாழும் குடும்பங்களும் கணிசமான எண்ணிகையில் இருக்கிறார்கள். மொத்தமாக பதினொராயிரத்து 73 குடும்பங்களைச் சேர்ந்த முப்பத்தெட்டாயிரத்து 283 பேர் இவ்வாறு இருக்கின்றார்கள். ஆகவே, பன்னிராயிரத்து 681 குடும்பங்களைச் சேர்ந்த நாற்பத்து நான்காயிரத்து 15 பேர் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N5