வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்த முயல்வது யார்…?
நரேன்
எதிர்கால கனவுகளுடன் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் குடும்பத்தின் பாரத்தை பகிர்ந்து கொள்ளப் போகின்றோம் என்ற ஆவலுடன் பல்கலைகழகத்தின் இறுதிக்காலங்களில் காலடி வைத்திருந்த இரண்டு மாணவர்கள் மானிடமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கு என்ன என்ன காரணங்கள் கூறினாலும், சமாதானங்கள் சொன்னாலும் அவர்களின் குடும்பத்திற்கு அந்த இழப்பு எவ்வகையிலும் ஈடுசெய்ய முடியாதது. மாணவர்களின் பிரேத பரிசோதனையின் மூலம் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்ததாகவும் மற்றவர் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட விபத்தினால் மரணமடைந்ததாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் வெளிவந்தவுடனேயே பொலிஸ் மா அதிபர் துப்பாக்கியால் சுட்டது ஒரு தவறு என்றும், இந்த விடயத்தில் பொலிஸ் தவறு இழைத்திருக்கின்றது என்றும், துப்பாக்கி சூட்டை மறைக்க முயன்றது அபட்டமான சட்ட மீறல் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் அவரது பொறுப்புணர்வு வெளிப்படுகிறது.
வெள்ளிகிழமை திருகோணமலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இந்த நாட்டின் ஜனாதிபதியும், எதிர்கட்சிதலைவரான கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் கலந்து கொண்டிருந்தனர். அப்பொழுது சம்மந்தன் அவர்கள் இந்த விடயத்தை நேரடியாகவே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். ஜனாதிபதியும் உடனடியாகவே வருத்தம் தெரிவித்ததுடன், பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்றும் உரிய நட்டஈடு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இங்கு ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் தத்தமது பொறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாராளுமன்றத்தில் பிரதமரின் கவனத்திற்கு இந்த விடயம் வந்தபோது வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இரு மாணவர்களதும் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படுகையில் துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடையதாக ஐந்து பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களது பதவிகளும் இடைநிறுத்தப்பட்டன. அவர்களை நீதிமன்றத்தின் மூலம் அனுராதபுரம் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இடத்தில் நீதித்துறையும் சரியாக செயற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.
நாளை ஒருவேளை, சந்தேகத்தின் பேரில் கைதாகிய உள்ள பொலிசாரின் மீதான குற்றங்கள் நிருப்பிக்டகப்படாமல் விடுதலை செய்யப்படுவார்களேயானால் அவர்களுக்கு அவர்கள் இழந்த அனைத்தும் மீண்டும் கிடைத்து விடும். ஆனால் பட்டப்படிப்பு முடித்து ஒரு உத்தியோகத்தில் இணைந்து பின்னர் படிப்படியாக பதவியுயர்வுகளைப் பெற்று வாழந்து பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் முன்னேற வேண்டிய இரண்டு அப்பாவி உயிர்களுக்கும் அரசாங்கம் வழங்கக் கூடிய நட்ட ஈட்டுடன் அனைத்துமே அந்த குடும்பத்துக்கு முற்றுப் பெறப் போகிறது.
மாணவர்கள் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு துயரங்களை மனதில் நிறுத்தி மாணவர்கள் இருவரினதும் இறுதி ஊர்வலத்தையும் அனைத்து பல்கலைக்கழக சமூகத்துடனும் இணைந்து மிகவும் கட்டுப்பாட்டுடன், முழு மரியாதை செலுத்தும் வகையில் அனைவருக்கும் பாடமாக இறுதி ஊர்வலத்தை நடத்தியிருந்தனர். வடக்கில் இடம்பெற்ற ஹர்த்தால் கூட அமைதியாகவே இடம்பெற்றிருந்தது. இந்த இரண்டு மாணவர்களது உயிரிழப்பானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அனைவரதும் தத்தமது வீடுகளில் நிகழ்ந்த ஒரு சோக நிகழ்வாகவே மாணவர்களது மரணத்தின் துயர நிகழ்வை அனுட்டித்தனர். இதன் காரணமாகவே நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்றிருந்தன். குறிப்பாக இந்த ஜனாதிபதியை பதவி கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த அனைத்து சிவில் அமைப்புக்களும், இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும் இந்த படுகொலைகைளை மிக வன்மையாக கண்டிருந்திருந்தன. இந்த இடத்தில் அவர்களது சமூக உணர்வும், மனிதாபிமானமும் போற்றப்பட வேண்டியது.
அத்தகைய ஜனாதிபதியின் வருகையால் உருவான இந்த நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லக் கூடிய இந்த தேசிய அரசாங்கம் உருவானது. இந்த அரசாங்கம் உருவானதன் காரணமாக வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகள் உட்பட ஒட்டுமொத்த நாட்டில் அந்த அந்தக் கட்சிக்கு விழுந்த வாக்கின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து சட்டம், ஒழுங்குக்கான அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சரின் கருத்துக்கள் அரரசியல் அவதானிகளையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும், ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் முகம் சுழிக்க செய்துள்ளது.
பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பொறுப்புணர்வுடன் இவ்வாறு கூறிய நிலையில் சட்டம், ஒழுங்குக்கான அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களும் அதனைத் தொடர்ந்து இனவாதத்தை பரப்பி வருகின்ற கூட்டு எதிர்கட்சியினர் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களும் ஒட்டுமொத்த வழக்கின் போக்ககையும் திசை திருப்பும் உள்நோக்கம் கொண்டதாகவே அமைந்துள்ளது என அரசியல் அவதானிகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கூறியுள்ளனர். குறித்த மாணவர்கள் பொலிஸ் காவலரணில் மறித்த போது நிற்காமல் சென்றதாகவும், வானத்தை நோக்கிச் சுட்ட போது பட்டதாகவும், பொலிசாரை இடிக்க வந்த போது சுட்டதாகவும், வேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் எங்கேயும் பதியப்படாத மற்றும் யாராலும் முன்வைக்கப்படாத வித்தியாசமான கருத்துக்களை அவர்கள் கூறி வருகின்றனர். அந்த மாணவர்கள் பயணித்த மோட்டர் சைக்கில் 100 சீசீ பவர் கொண்ட மோட்டர் சைக்கிளே. ஆனால் தென்பகுதியில் 1000 சீசீ மோட்டர் சைக்கிளிலில் அந்த இரு மாணவர்களும் பயணித்ததாக எத்தகைய தகவல்களும் ஆதாரங்களும் இன்றி கருத்துத் தெரிவித்துள்ளனர். அந்த மாணவர்கள் பயணித்து விபத்தில் சேதமடைந்திருந்த மோட்டர் சைக்கிளின் சேதத்தை பார்கின்ற போது கூட அது வேகமாக வந்ததால் ஏற்பட்ட விபத்து என்பது தெரியவில்லை. மறுபுறம் மோட்டர் சைக்கிளின் சாரதியாக இருந்த மாணவன் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளதுடன், பின்னால் இருந்த மாணவனின் மரணம் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. எனினும் அவை தொடர்பில் இப்பத்தி எழுதும் வரை உறுதிப்படுத்தி எதையும் கூற முடியாதுள்ளது. ஆக, தென்னிலங்கையில் இவ்வாறு வரும் பொறுப்பற்ற சில கருத்துக்கள் இனங்களுக்கிடையில் மீண்டும் விரிசலை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. இது நல்லாட்சிக்கு ஆரோக்கியமானது அல்ல. இதன் காரணமாகவே லண்டனில் தற்போது நிற்கும் வடமாகாண முதலமைச்சர் ‘ இந்த விடயத்தில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் பொறுமை காக்குமாறு தமிழ் மக்களையும், மாணவ சமூகத்தையும் கோரியுள்ளார்’. இத்தகைய பொறுப்புணர்வு அனைத்து அரசியல்வாதிகளிடமும், தென்னிலங்கையிலும் வரவேண்டியது அவசியமானது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சட்டம், ஒழுங்கு அமைச்சர் ஒரு பொலிஸ் மா அதிபரிடம் இருந்து குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க வேண்டிய நிலையில் தன்னுடைய கருத்தையும் சேர்த்து சொல்லியிருக்கிறார். ஆனால் ஊடக அன்பர்கள் ஆவா குழு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் மழுப்பிச் சென்றுள்ளார். பட்டப்பகலில் பொலிஸ் புலனாய்வாளர்கள் மீது சுன்னாகத்தில் வாள் வீச்சு இடம்பெற்றுள்ளது. அதனுடன் சம்மந்தப்பட்டவர்களை இன்று வரை பொலிசார் கண்டிபிடிக்க முடியாத நிலையிலேயே, ஊடகவியலாளர்கள் அந்த கேள்வியை எழுப்பினர் என்பதும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது.
வடக்கு, கிழக்கில் வாழுகின்ற அனைத்து தமிழ் பேசும் மக்களும் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளிலேயே இன்னமும் இருப்பதால் ஒரு அச்சமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் இன்று வரையில் எத்தகைய வன்முறைச் சப்பவங்களும் இந்த பிரதேசங்களில் பொலிசாருக்கு எதிராக பதியப்படவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது. மாணவர்களின் கொலைக்கு பின்னர் பொலிசார் மீது இடம்பெற்ற இரு தாக்குதல் சம்பவங்களுமே சமூக விரோத சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாக அமைந்திருக்கின்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் மணல் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் ஏற்கனவே தமக்கு பொலிசாரின் மீது இருந்த கோபத்தை இச்சந்தர்ப்பத்தில் அவர்களை தாக்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களே. இதனைப் போன்றே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு ஆவா குழு என்று அழைக்கப்படுபவர்கள் அல்லது அவர்களைப் போன்றே வாள், கத்தி, பொல்லுகள் போன்ற ஆயுதங்களுடன் வீதிகளில் இறங்கி பொதுமக்களை அச்சுறுத்தும் கும்பலே நிகழ்த்தியிருக்கின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை பொலிஸ் மா அதிபரும் உறுதியப்படுத்தியுள்ளார். இந்தக் கும்பலுடன் தொடர்பு பட்டவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களே. இலக்கத்தகடு அற்ற வாகனத்தில் வந்தவர்களால் சில தமிழ் இளைஞர்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க வடமாகாணத்தில் பொலிசாருக்கு பாதுகாப்பு இல்லை என்று பொறுப்பு வாய்ந்த அரசியல் வாதிகள் கூறுவது இந்த நாட்டில் நல்லிணக்கமும், சமாதானமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று ஒரு சில சக்திகள் நினைக்கின்றனவா என எண்ணத் தோன்றுகின்றது. இந்தக் கொலைகளின் பின்னனியில், அமைதியாக இருக்கும் யாழ்ப்பாணத்தை அல்லது வடமாகாணத்தை ஒரு கலவர பூமியாக மாற்றுவதற்கு பொலிசாரின் பின்னனியில் வேறு ஏதும் சக்திகள் இயங்குகின்றதா என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனும், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்வி மிகவும் கரிசனைக்குரியதாகவே தோன்றுகின்றது.
ஆவா குழு என்பது யாழ்ப்பாணத்தில் கடந்த பல மாதங்களாக செயற்பட்டு வருகின்றது. அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டும் இருந்தனர். ஆனால் மாணவர்களின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றநிலையை சாதகமாக பயன்படுத்தி யாழ் சுன்னாகத்தில் சிவில் உடையில் நின்ற பொலிஸ் புலனாய்வாளர்கள் மீது வாள்வெட்டு இடம்பெற்றிருக்கிறது. அதற்கு ஆவா குழு பொறுப்பேற்பதாக துண்டுபிரசுரமும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இப்பத்தி எழுதும் வரை ஆவா குழுவைச் சேர்ந்தவர்களோ அல்லது அந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களோ கைது செய்யப்படவில்லை. தென்னிலங்கையில் பெரிய பெரிய மாபியாக்களையும், பாதாள உலக கோஸ்டிகளையும் பிடிக்கும் பொலிசார் வடக்கின் வாள்வெட்டு குழுவை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயம். இதன் பின்னனியில் பலமானதொரு சக்தி இருக்கின்றதா என்ற கேள்வியையே அது எழுப்புகின்றது. புதிய அரசியலமைப்பு வரவுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தவும், வடக்கை குழப்ப நிலையில் வைத்திருக்கவும் அந்த சக்திகள் முற்படுகின்றதா என்ற கேள்வியையே பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவமும், பொலிசார் மீதான வாள்வெட்டுச் சம்பவமும் எழுப்பி நிற்கின்றது. இந்தப் பின்னனியிலேயே யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவிற்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றதா என்ற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது. இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் கூட பதில் அளிக்க மறுத்திருக்கிறார். இந்த நிலையில் தமிழ் தரப்புக்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் சிந்திக்க வேண்டியதும், மரணித்த இரு மாணவர்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதும், நீதித்துறையின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதும் அவசியமானதே.
N5




