செய்திகள்
வடக்கில் சிங்களவர் குடியேற்றத்தை தடுத்து வட-கிழக்கு இணைப்புக்கு அரசு வழிகோலுகிறது
யுத்தத்தின் பின்னர் நாட்டின் வடக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்தை தடுத்து வடக்கு கிழக்கு இணைப்பிற்கு அரசாங்கம் வழிகோலுவதாகத் தெரிவிக்கும் பொதுபலசேனா அமைப்பு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள மீள்குடியேற்ற நடவடிக்கைகள் அடாவடித்தனமான முறையில் தடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபலசேனா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ;
இன்று நாட்டின் வடக்குப் பகுதியில் வாழும் சிங்கள மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. வடக்கில் மீள்குடியேறிவரும் சிங்கள மக்களை அப்பகுதியில் குடியேறவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள கிராமங்களில் பாடசாலைகளுக்கான கல்வி உதவிகள் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மறுக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது காணி அனுமதிப்பத்திரத்தின் ஊடாக சிங்களவர்களுக்கு வடக்கில் வழங்கப்பட்ட காணிப்பகுதிக்குள் அத்துமீறி தமிழ் மக்களுக்கு காணி வழங்கப்பட்டு வருகிறது. வடக்கில் உள்ள சிங்கள மக்களின் பூர்வீகக் காணிகளிலிருந்து அவர்களை விரட்டிவிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலரும் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். வடக்கில் சிங்களவர்கள் மிகவும் குறைந்தளவில் இருப்பதால் தொடர்ந்தும் அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியால் வடக்கில் உள்ள சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட காணிப்பகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடாவடித்தனமாக பிடுங்கிக்கொள்வது தெரியுமா? என நாம் ஜனாதிபதியிடம் கேள்வியொன்றை முன்வைக்கின்றோம்.
அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்புக்கான செயற்திட்டங்களை முன்னெடுக்கும் புதிய அமைப்பொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
n10




