வடக்கில் தனியார் பேரூந்துகளின் புறக்கணிப்பால் கிராம புற மக்கள் அவதி
வடமாகாண தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் வவுனியா மாவட்ட கிராம புற மக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் தனியார் பேரூந்துகளுக்கிடையில் இணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்தக் கோரியும், இரு பேரூந்துகளையும் ஒரே இடத்தில் இருந்து சேவை ஆரம்பிக்க கோரியும் வடமாகாண தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதன்காரணமாக இ.போ.சபை பேரூந்துகளில் சனநெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், கிராம புறங்களுக்கு செல்லும் பலரும் போக்குவரத்து வசதி இன்றி அவலப்படும் நிலை காணப்படுகின்றது. மாணவர்கள், நோயாளிகள், தொழிலாளர்கள் எனப் பலரும் போக்குவரத்து வசதி இன்றி அவதிப்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
இதேவேளை, வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்கள் தமது பிரச்சனைகளை வலியுறுத்தி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட பேரூந்து உரிமையாளர்களை சந்தித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா ஆகியோர் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
N5







