வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்கக் கூடாது என தீர்மானம் மேற்கொள்ள யார் அதிகாரம் கொடுத்தது? : வடக்கு முதல்வரை கேட்கும் நீதி அமைச்சர்
புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கூடாது என தீர்மானம் மேற்கொள்ள எந்த வகையிலும் வ மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லையெனவும் பௌத்த மக்கள் ஆத்திரமடையாத வகையில் வடக்கு முதல்வர் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டுமெனவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற புத்தசாசன அமைச்சு மீதான வரவு செலவு திட்ட விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பௌத்தர்களுக்கு இருக்கும் அந்த உரிமையை இல்லாமல் செய்ய வேண்டியதில்லை. அதை நாம் பாதுகாக்க வேண்டும். என்று வடக்கு, கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவரும் எதிர்ககட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பி. பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதேபோல், கர்தினாலும் பௌத்த மக்களுக்கான அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் நாட்டின் தேசிய ஒற்றுமையை குழப்பும் நிலைமைக்கு இன்று சில அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை கவலையுடனேனும் சொல்ல வேண்டியுள்ளது. வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கூடாது என்று வட மாகாண முதலமைச்சர் மாகாண சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளார். எனவே, அரசியலமைப்பின் கீழா அல்லது வேறு எந்த சட்டத்தினதும் கீழா இந்த அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று நாம் கேட்கிறோம். எந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்? . இந்த மாதிரியான தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு மாகாண சபைக்கு அரசியலமைப்பில் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே, அரசியலமைப்பிற்கு புறம்பாக செய்யும் விடயமொன்றுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. அவ்வாறானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக அதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துவிடப்போவதோ அல்லது நாம் அதை ஏற்றுக்கொள்ளப் போவதே கிடையாது. அந்த தீர்மானம் குப்பை கூடைக்குள் செல்வது மட்டுமே இறுதியில் நடைபெறும். விக்னேஸ்வரன் உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்தவர் என்ற வகையில் எம் அனைவரினதும் மதிப்புக்குரியவராக இருந்த போதிலும், இந்த செயற்பாட்டின் மூலம் வட மாகாண சபைக்கு அவமதிப்பொன்றையே அவர் ஏற்படுத்தியுள்ளார். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




