வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இரண்டிற்கும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்
13ம் திருத்தச் சட்டத்திற்கூடாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இரண்டிற்கும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் தம்மை தாமே ஆளும் வகையிலான அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.
வீதிக்கு வீதி கிராமத்திற்கு கிராமம் மக்கள் குறை அறிந்து நிவர்த்திசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியில் மக்கள் குறை அறியும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதே செயலகம் மற்றும் பிரதேசசபை மற்றும் திவிநெகும திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டபின்னர் நாட்டில் மக்கள் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழவேண்டும் என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த ஆட்சிக்காலம்போல் அல்லாமல் வீதிக்கு வீதி சென்று கிராமம்கிராமமாக சென்று ஒவ்வொரு பொதுமகனின் பிரச்சினையையும் அரசியல்வாதிகள் தீர்க்கவேண்டும் என்றவகையில் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றோம்.
புதிய யாப்புதிருத்தம் என்னும் விடயத்தினை நாங்கள் நோக்கும்போது சிறுபான்மை சமூகத்திற்கான காப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும்.சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள்,அந்தஸ்த்தினை காக்கும் வகையில் அது உருவாக்கப்படவேண்டும்.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டாலும் கூட அது அந்த யாப்பின் ஊடாக ரத்துச் செய்யக்கூடிய யாப்பினை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்;
அது மாத்திரமல்ல 13ம் திருத்தச் சட்டத்திற்கூடாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இரண்டிற்கும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.அந்த மக்களின் ஆட்சியினை அவர்களே செய்கின்ற அளவிற்கு 13ம் திருத்தச்சட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற அதிகாரத்திற்கும் மேலதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு தற்போது உள்ள சுதந்திரக்காற்றினை சுவாசிப்பதற்கு வழியேற்படுத்தவேண்டும்.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் ஆiயாளர் இலங்கைக்கு விஜயம் செய்து மக்களின் நிலைமைகளை அறிந்துசென்றுள்ளார்.மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கவேண்டும் என்று வந்துசென்றவர் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் நியாயமான நீதியினை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.
அதேபோன்று நல்லாட்சி என்று நம்புகின்ற இந்த அரசாங்கத்தின் ஊடாக பாதிப்புக்குள்ளான சிறுபான்மை மக்களின் உரிமைகள் அவர்களுக்கான நிவாரணங்கள் எந்தவித அநீதியும் இழைக்கப்படாமல் கொடுக்கப்படுவது உத்தரவாதப்படுத்தப்படவேண்டும்.
கடந்தகாலத்தில் சர்வதேசத்தில் இருந்து இங்குவந்து மக்களின் பிரச்சினைகளை ஆராய்பவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படாவிட்டாலும் இந்த நல்லாட்சியில் யாரும் இங்குவந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தினை சேர்ந்தவர்கள் ஆராயக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முற்றுமுழுதாக ஒரு கண்துடைப்பாக இல்லாமல்.மானசீகமாக இந்த மக்களின் பிரச்சினைகள் தீர்த்துவைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
n10






